ஜனநாயக அநியாயம்!

விவசாயக் கடன் தள்ளுபடியில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மத்திய அரசு எந்தவிதத்திலும் உதவி செய்ய முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும்

விவசாயக் கடன் தள்ளுபடியில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மத்திய அரசு எந்தவிதத்திலும் உதவி செய்ய முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னையில் தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதுபோல மத்திய அரசு கைகழுவுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மத்திய அரசு மட்டுமல்ல, இந்திய ரிசர்வ் வங்கியும் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று எச்சரித்திருப்பது அதைவிட விசித்திரமாக இருக்கிறது. விவசாயமல்லாத ஏனைய துறைகளுக்கு ரூ.60 லட்சம் கோடிக்கும் அதிகமாக வரிச் சலுகைகள் வழங்கும்போது மத்திய, மாநில அரசுகள் ரூ.2 லட்சம் கோடி விவசாயக் கடன்களை ஏன் ரத்துச் செய்யக்கூடாது? கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்கும்போது பல சலுகைகளையும் வரிவிலக்குகளையும் குறைந்த வட்டியில் கடன் உதவிகளையும் வழங்கும்போது விவசாயத்தை மட்டும் லாப }நஷ்ட கணக்கின் அடிப்படையில் பார்க்கும் ஆட்சியாளர்களின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது.
இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்தவர்களாக, நேரடி விவசாயிகளாக இருந்தனர். இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பு விவசாயம்தான் என்பதையும் அதைப் புறக்கணிப்பது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். அதனால்தான் நீர்ப்பாசன விவசாயத் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளித்து வந்தன. இப்பொழுது நிலைமையே வேறு.
1991-இல் இந்தியா பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் விவசாயத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு தொழில் துறை உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதுமுதல் விவசாயமும் விவசாயியும் அரசியல்வாதிகளுக்கு வெறும் தேர்தல் நேர கோஷங்களாகிவிட்டனர். நிலச்சுவான்தார்கள் விவசாயத்தைக் கைவிட்டு தொழில்துறைக்கு மாறிவிட்டதால் இந்தியாவில் பெரும்பாலான விவசாயிகள் நடுத்தர, சிறிய விவசாயிகளாகத்தான் இருக்கிறார்கள். இவர்களால் இந்தியாவின் நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் எந்த செல்வாக்கையும் செலுத்த முடிவதில்லை.
இப்போதைய பிரச்னைக்கு முக்கியமான காரணம் மத்திய அரசின் தவறான திட்டமிடல்தான். மத்திய அரசு விவசாயிகளை அதிகளவில் பருப்பு உள்ளிட்ட தானியங்களைப் பயிரிடும்படி ஊக்குவித்தது. விவசாயிகளில் பலர் அரிசி, கோதுமை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைக் குறைத்துக் கொண்டு அதிகளவில் பருப்பு, காய்கறிகள் என்று சாகுபடியில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதன் விளைவாக அமோக விளைச்சலும் கிடைத்தது. அதிகரிக்கக்கூடிய உற்பத்தியை அரசு எதிர்பார்த்து அதற்கேற்றாற்போல ஏற்றுமதியை முடுக்கிவிட்டிருந்தால் விவசாயிகளில் பலர் பெரும் லாபம் ஈட்டியிருப்பார்கள்.
அதிகமான விளைச்சலும் விளைபொருள்களுக்கு மிகவும் குறைவான விலையும் கிடைப்பதுதான் பிரச்னைக்குக் காரணம். கடந்த மே மாதம் சில்லறை விற்பனையின் விலையேற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு 2.18% என்று குறைந்துவிட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், தானிய வகைகள் மற்றும் காய்கறிகளின் விலை குறைந்துவிட்டதுதான். கடந்த ஆண்டு இதே மே மாதத்தில் 5.76%-ஆகவும், ஏப்ரல் மாதத்தில் 2.99%-ஆகவும் இருந்தன சில்லறை விற்பனையின் விலையேற்றம். இப்படி குறைந்த அளவு விலையேற்றம் என்பது குறைந்து வரும் தேவையையும் பலவீனமான பொருளாதாரச் செயல்பாட்டையும்தான் காட்டுகிறது.
இந்த ஆண்டில் பருவமழை நன்றாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு உண்மையானால் உணவுப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டில் இருக்கும். அது நகர்ப்புறங்களில் வாழும் நிரந்தர வருவாய் பிரிவினருக்கும், வேலைவாய்ப்பு உள்ள நடுத்தரப் பிரிவினருக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சியளிக்கக் கூடும். ஆனால், இது கிராமப்புற இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும்.
இப்போது காணப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணம், கடந்த சில மாதங்களாக உணவுப் பொருள் விலையேற்றத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி. அரசின் விலையேற்றம் குறித்த புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
காய்கறிகளின் விலை வீழ்ச்சி ஏப்ரலில் மைனஸ் 8.59%-லிருந்து மே மாதம் மைனஸ் 13.44% ஆக அதிகரித்தது. அதேபோல தானிய வகைகளின் விலை வீழ்ச்சி மைனஸ் 15.94%-லிருந்து மே மாதம் மைனஸ் 19.45%-ஆக அதிகரித்தது. அதிகரித்த விளைச்சலின் பயனை அடைவதற்குப் பதிலாக போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் போராட்டம். வேளாண் பொருளாதாரம் என்பது அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சார்ந்துதான் இருக்கும். கடந்த பல ஆண்டுகளாகவே குறைந்தபட்ச ஆதரவு விலையில் தரப்படும் உயர்வு வருடாந்திர விலைவாசி உயர்வைவிட குறைவானதாகவே காணப்பட்டு வருகிறது.
அதாவது விவசாயிகளுக்கு அவர்களது விளைப்பொருள்களுக்கு தொடர்ந்து விலையை குறைத்து வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. விவசாயிகள் ஆத்திரப்படுவதில் என்ன தவறு காண முடியும்?
நகர்ப்புற மக்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும் உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்விலிருந்து பாதுகாக்க இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் ஏறத்தாழ 20 கோடி குடும்பங்களை நாம் வறுமையில் வாட விடுகிறோம். இது எந்த வகையில் ஜனநாயக நியாயம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com