மம்தா செய்த தவறு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வங்க மொழியை பாதுகாக்க

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வங்க மொழியை பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வெளியிட்ட ஒர் அறிவிப்பு டார்ஜீலிங் மலைப்பிரதேசத்தில் அவருக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக மாறியிருக்கிறது. மேற்கு வங்க அரசு டார்ஜீலிங்கில் வங்க மொழியைத் திணிக்க முற்படுகிறது என்பதால் இந்தப் போராட்டத்தை டார்ஜீலிங் மலைப் பகுதியை நிர்வகிக்கும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா நடத்த முற்பட்டிருக்கிறது.
நீண்டகாலமாகவே டார்ஜீலிங் மலைப் பகுதிகளை உள்ளடக்கிய கோர்க்காலாந்து என்கிற தனி மாநிலம் கோரப்பட்டு வருகிறது. 34 ஆண்டு இடதுசாரி கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட்டு 2011-இல் மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தது. கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் வன்முறைப் போராட்டத்திற்கு மம்தா பானர்ஜி அரசு முற்றுப்புள்ளி வைத்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட கோர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் அமைக்க ஒப்புக்கொண்டது. 2012-இல் நடைபெற்ற கோர்க்காலாந்து பிரதேச நிர்வாகத்திற்கான தேர்தலில் அத்தனை இடங்களிலும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றியது.
பத்தாம் வகுப்பு வரை மேற்கு வங்கத்தில் எல்லா பள்ளிக்கூடங்களிலும் வங்க மொழி கட்டாயப் பாடமாக இருக்கும் என்று அறிவித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அப்படி அறிவிக்கும்போதே டார்ஜீலிங் மலைப் பகுதியில் உள்ள கோர்க்காலாந்து பிரதேசத்தில் அந்த மக்களின் தாய்மொழியான கோர்க்கா நேபாளி தொடரும் என்று குறிப்பிட்டிருந்தால் இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது.
முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவிப்பு டார்ஜீலிங் மலைப் பகுதியில் வங்க மொழியைத் திணிக்கும் நோக்கத்துடன்தான் செய்யப்பட்டிருக்கிறது என்பது கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர்களின் கருத்து. வங்க மொழியைத் திணிப்பதன் மூலம் டார்ஜீலிங் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் கோர்க்கா நேபாளிகளின் தனித்துவத்தை அழிக்க திரிணமூல் காங்கிரஸ் முற்படுகிறது என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
கடந்த மாதம் டார்ஜீலிங் மலைப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. அந்தத் தேர்தல் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையேயான நேரடி மோதலாக இருந்தது. மொத்தம் நான்கு நகராட்சிகளில் மூன்று முக்கியமான நகராட்சிகளை அதிக வாக்கு வித்தியாசத்துடன் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கைப்பற்றியது. மிரிக் என்கிற சிறிய நகராட்சியை திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியது. டார்ஜீலிங் கூர்சியாங், காலிம்பாங் ஆகிய நகராட்சிகளில் பெரும் வெற்றி பெற்றாலும்கூட, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மிரிக் வெற்றி கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தோன்றுகிறது.
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சி, கோர்க்காலாந்து போராட்டத்தை 30 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய சுபாஷ் கெய்சிங்கின் கோர்க்கா தேசிய விடுதலை முன்னணி என்கிற கட்சியிலிருந்து பிரிந்து இயங்கி வருகிறது. மிரிக்கில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மிக முக்கியமான காரணம் அந்தக் கட்சி சுபாஷ் கெய்சிங்கின் கோர்க்கா தேசிய விடுதலை முன்னணியுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணிதான். இந்தக் கூட்டணி பலப்பட்டு விடுமோ என்கிற அச்சம்தான் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவைப் போராட்டத்தில் இறங்கத் தூண்டியிருக்கிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் எப்படியாவது டார்ஜீலிங் மலைப் பகுதியில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, தன்னாட்சி அதிகாரம் பெற்ற கோர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு அது கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் திரிணமூல் காங்கிரஸின் முனைப்பு மேலும் அதிகரித்தது.
தன்னாட்சி உரிமையுடன் கோர்க்கா பிரதேச நிர்வாகம் அமைக்கப்பட்டது என்றாலும் அதற்கான அதிகாரப் பகிர்வுகளை செய்யாமல் மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், டார்ஜீலிங் மலைப் பிரதேசத்தில் இருக்கின்ற பல்வேறு இனப் பிரிவினரின் வளர்ச்சிக்கான 15 வாரியங்களை கோர்க்கா பிரதேச நிர்வாகத்துடன் கலந்து ஆலோசிக்காமல் ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் செல்வாக்கை பலவீனப்படுத்துவது என்பதுதான் முதல்வர் மம்தா பானர்ஜியின் நோக்கம்.
மே 2011-இல் முதல்வராகப் பதவியேற்ற மம்தா பானர்ஜி கடந்த 73 மாதங்களில் 100 தடவைக்கும் மேலாக டார்ஜீலிங் பகுதிக்கு விஜயம் செய்திருக்கிறார். அவருக்கு முன்பு 64 ஆண்டுகள் முதல்வராக இருந்த 7 முதலமைச்சர்கள் இதில் கால் பங்கு நேரம் கூட டார்ஜீலிங்கிற்காக செலவிட்டதில்லை. டார்ஜீலிங் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற வேண்டும் என்கிற முனைப்பு இருக்கும்போது அவர்களது மொழியை பாதிக்கும் அறிவிப்பை மம்தா பானர்ஜி ஏன் வெளியிட முற்பட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
டார்ஜீலிங் பகுதியில் வங்க மொழி திணிக்கப்படமாட்டாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி இப்போது தெரிவித்திருக்கிறார். ஆனால், அதை அந்த மக்கள் நம்பத் தயாராக இல்லை. உடனடியாகத் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கோர்க்காலாந்து பிரதேச நிர்வாகத்திற்கான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துவதுதான் இந்தப் பிரச்னைக்கு முடிவாக இருக்கும். இல்லையென்றால், போராட்டம் தொடரும். சுற்றுலாப் பயணிகளின் வரவு குறையும். தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும். அதன் தொடர் விளைவுகள் மேற்கு வங்க பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com