ஆபத்தான வளர்ச்சி!

விவசாயிகள் போராட்டம் மட்டும்தான் மிகப்பெரிய பிரச்னையாக

விவசாயிகள் போராட்டம் மட்டும்தான் மிகப்பெரிய பிரச்னையாக வெளியில் தெரிகிறது. அதைவிடப் பெரிய பிரச்னை ஒன்றை இந்தியா எதிர்கொள்கிறது என்பது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒருபுறம் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றால் இன்னொருபுறம், வேலை இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் நிலைமை.
தேசிய அளவில் ஆண்டுதோறும் புதிதாக 2 கோடி வேலைவாய்ப்புகள் தேவைப்படுகின்றன. ஆனால், முக்கியமான சேவைகள், உற்பத்தித் துறை, மரபு சார்ந்த துறைகள் எல்லாம் சேர்ந்து வெறும் 1,50,000 புதிய வேலைவாய்ப்புகளைத்தான் கடந்த ஆண்டு உருவாக்க முடிந்திருக்கிறது. இதில் கனரகத் தொழிற்சாலைகளும், மென்பொருள் உற்பத்தித் துறையும்கூட அடக்கம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆண்டுதோறும் ஏறத்தாழ 1 கோடியே 20 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்குத் தயாராகிறார்கள். இவர்கள் அல்லாமல், விவசாயத்தைக் கைவிட்டு உற்பத்தித் துறையிலும், சேவைத் துறையிலும், கட்டடத் தொழிலிலும் வேலைதேடி வருபவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50 லட்சம் முதல் 80 லட்சம் வரை. இதையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது, ஆண்டுதோறும் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்கியாக வேண்டும் என்கிறது சி.ஐ.ஐ. எனப்படும் இந்தியத் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு.
ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ பத்து லட்சம் பேர் புதிதாக வேலை தேடத் தொடங்குகிறார்கள் என்றால் இவர்களில் வெறும் 0.01% பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 65% பேர் 35 வயதுக்கும் குறைந்தவர்கள் எனும் நிலையில், இந்தப் போக்கு தொடர்ந்தால், வேலையில்லாத இளைஞர்கள் பொறுமை இழந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கின்றன பல தன்னார்வ அமைப்புகள்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். இப்போது, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும், முந்தைய மன்மோகன் சிங் அரசைப் போலவே, வேலைவாய்ப்புக்கு வழிகோலாத பொருளாதார வளர்ச்சியைத்தான் இந்தியா எதிர்கொள்கிறது.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பு வெளியிட்டிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளின் காலாண்டு வேலைவாய்ப்புப் புள்ளிவிவர அறிக்கையின்படி, 2015-இல் 1,35,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் மாதமொன்றுக்கு பத்து லட்சம் பேர் வேலைவாய்ப்புக்குத் தயாராகின்றனர். இந்த இடைவெளி நிரப்பப்படாமல் அதிகரித்து வருகிறது என்று எச்சரிக்கிறது அந்த அறிக்கை.
வேலைவாய்ப்பு உருவாகாமல் போகும் அதே நேரம், பலர் வேலைவாய்ப்பை இழந்து வருவதைப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துவதில்லை. 1997 முதல் உற்பத்தித் துறையில், வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வந்திருக்கிறது. புதிய தொழிற்சாலைகள் நிறுவப்படுகின்றன என்றாலும்கூட, அதிகரித்த தொழில்துறை முன்னேற்றம், பெரிய அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில்லை. இதற்கு தொழில்நுட்பம்தான் காரணம்.
இதனால், சுயதொழில் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்குப் பலர் தள்ளப்படுகிறார்கள். இல்லையென்றால், எந்தவிதப் பாதுகாப்போ, வேலை உத்தரவாதமோ இல்லாத தினக்கூலி, மாதக்கூலி ஒப்பந்தப் பணிகளை நாட வேண்டிய கட்டாயம் பலருக்கும் ஏற்படுகிறது. அவை நிரந்தரமான வருமான உத்தரவாதத்தை அளிப்பதில்லை.
வேலைவாய்ப்பு உருவாகாததால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது, நகர்ப்புறங்களைவிட கிராமப்புறப் பகுதிகள்தான். விவசாயமும் லாபகரமாக இல்லாத நிலையில், பலரும் கிராமப்புறப் பகுதிகளி
லிருந்து நகர்ப்புறங்களுக்கு வேலை தேடி இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஊர்விட்டு ஊர் மட்டுமில்லாமல், மாநிலம் விட்டு மாநிலத்துக்கு இடம் பெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தேங்கிப் போய்க் கிடக்கும் கிராமப் பொருளாதாரம் வேலைவாய்ப்புக்கான எந்த வழியையும் ஏற்படுத்தாத நிலையில், கிராமப் புறங்களில் வாழ்பவர்கள் வேலைதேடி குடும்பம் குடும்பமாக நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்காத நிலையில், வேலைவாய்ப்பில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அடிமட்டத் தொழிலாளர்கள் மத்தியில்தான் இந்த வேலைவாய்ப்பின்மை இருக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம். இந்த ஆண்டில், இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் மட்டும் ஏறத்தாழ 56,000 பேர் வேலை இழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாகவும் கூடும் என்கிறார்கள். உற்பத்தித் துறையிலும், பெரிய அளவிலான முதலீடோ வளர்ச்சியோ ஏற்படாத நிலையில், புதிய வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு தென்படவில்லை.
1991-இல் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் கொள்கைகளை அறிவித்தபோது, அந்நிய முதலீடும், தொழில்துறை வளர்ச்சியும் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதுதான் பரவலாக ஏற்பட்ட நம்பிக்கை. முந்தைய மன்மோகன் சிங் அரசுதான், வேலைவாய்ப்பை ஏற்படுத்தாத பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலியது என்றால், இப்போது மோடி அரசும் அதே பாதையிலேயே பயணிக்கிறது. இது ஆபத்தான வளர்ச்சி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com