ராஜதந்திர வெற்றி!

பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை

பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து, எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த ஒற்றுமையைக் குலைத்து விட்டிருக்கிறது பா.ஜ.க. காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடி, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தின. அந்த ஆலோசனையின்போதே, காங்கிரஸ் முன்மொழிவதாக இருந்த முன்னாள் மக்களவைத் தலைவரும், பாபு ஜகஜீவன்ராமின் மகளுமான மீரா குமாரின் பெயரை அறிவித்திருந்தால், இப்போது பா.ஜ.க.வுக்கு ராம்நாத் கோவிந்தை அறிவித்ததால் கிடைத்திருக்கும் அரசியல் ஆதாயம் கிடைத்திருக்கக் கூடும்.
பா.ஜ.க.வையே பொது வேட்பாளரை அடையாளம் காட்டும்படியும், அதற்குப் பிறகு தங்களது முடிவை அறிவிப்பதாகவும் காங்கிரஸ் கூறிவிட்டது. அதை பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டுவிட்டது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரப் பிரதேசத்தில் செல்வாக்குச் சரிவை எதிர்கொண்டு வருகிறது. அந்தக் கட்சியின் தலித் வாக்கு வங்கி, இப்போது பா.ஜ.க.வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கி எப்படி தாக்கூர் வாக்கு வங்கியை பா.ஜ.க. குறிவைத்ததோ, அதேபோல ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கி வெற்றியடையச் செய்வதன் மூலம் உத்தரப் பிரதேசம், பிகாரில் மட்டுமல்லாமல் பரவலாக தலித் வாக்கு வங்கியைக் கவர பா.ஜ.க. முனைகிறது.
ராம்நாத் கோவிந்த் முன்வரிசை தலைவராகவோ, பரவலாக வெளியுலகுக்குத் தெரிந்தவராகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதி இல்லாதவர் என்று கூறிவிட முடியாது. இந்திய அரசுப் பணித் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குப் போகாமல் வழக்குரைஞரானவர். 1977-இல் ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது, அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலராக இருந்தவர். ஏறத்தாழ 13 ஆண்டுகள் மத்திய அரசின் வழக்குரைஞராக உச்சநீதிமன்றத்தில் இருந்தவர்.
1994 முதல் 12 ஆண்டுகள் பா.ஜ.க.வின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார். பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராகவும், பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராகவும் இருந்த அனுபவசாலி. நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது, யாருமே எதிர்பார்க்காத வண்ணம், பிகார் ஆளுநராக நியமிக்கப்பட்டவர். பா.ஜ.க.வின் தலித் பிரிவின் தலைவராக இருந்தவர்.
ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ஆழமாக சிந்தித்துத்தான் முடிவெடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. சட்டம் படித்தவர் என்பதும், அரசியல் சாசனம் குறித்த முழுமையான புரிதல் உடையவர் என்பதும் ராம்நாத் கோவிந்தின் தனித் தகுதிகள். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதால், குடியரசுத் தலைவர் பதவியின் கெüரவம் குறித்தும், பொறுப்புகள் குறித்தும் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக, ராம்நாத் கோவிந்துக்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருக்கிறது என்பது, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இன்னொரு முக்கியமான காரணமாக இருக்கக் கூடும்.
ராம்நாத் கோவிந்தைத் தேர்ந்தெடுப்பது குறித்துத் தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று சிவசேனை எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது என்றாலும்கூட, ஐக்கிய ஜனதா தளமும், பிஜு ஜனதா தளமும் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் நிறுத்த இருக்கும் வேட்பாளர் வழக்கம்போல சம்பிரதாயமான எதிர்ப்புக்காக நிறுத்தப்படுவாரே தவிர, அவருக்கு வெற்றி வாய்ப்பு இருக்க வழியில்லை.
1975 ஜூன் மாதம், அன்றைய இந்திரா காந்தி அரசு அவசரநிலை சட்டத்தைப் பிறப்பிக்க விரும்பியபோது, குடியரசுத் தலைவராக இருந்த பக்ரூதீன் அலி அகமது, நள்ளிரவில் அந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததும், அதேபோல, 1980-இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி ஒன்பது மாநிலங்களில் பதவியில் இருந்த அரசுகளை சட்டப்பிரிவு 356-இன் கீழ் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்ததும், இந்திய ஜனநாயகத்தில் கறை படிந்த வரலாற்றுப் பக்கங்கள்.
இதுபோல எல்லா குடியரசுத் தலைவர்களும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் கைப்பாவையாக இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. பாபு ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன் இருவருக்குமே பிரதமர் ஜவாஹர்லால் நேருவுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன. ஜைல் சிங்கும் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் கூட இருந்திருக்கிறார்கள். "மக்கள் ஜனாதிபதி' என்று புகழப்பட்ட டாக்டர் அப்துல் கலாம், சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்திருக்கிறார்.
பொதுவாக, குடியரசுத் தலைவர் பதவி என்பது அலங்காரப் பதவி மட்டுமே. அரசியல் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த, கொள்கை ரீதியாகப் பிரதமருக்கும் மத்தியில் ஆளும் கட்சிக்கும் ஒத்துப் போகிற ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படுவது என்பதில் தவறு காண முடியாது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் பிரதமராக இருந்திருக்கிறார்கள். அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது இதுதான் முதல் முறையாக இருக்கும். அடக்கி வாசிக்கும் அனுபவசாலி ஒருவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர வெற்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com