கெளரவமான விலகல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது பதவியைத் துறந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவும் கேப்டன் விராட் கோலியும் இணைந்து ஐந்து டெஸ்ட் தொடர்கள், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 என்று அத்தனை போட்டிகளிலும் வெற்றியை குவித்திருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே தோல்வி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சாம்பியன்ஸ் டிராபி பந்தயத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது மட்டுமே.
அனில் கும்ப்ளேயின் பதவிக் காலம் கடந்த 18-ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. அவர் மேற்கிந்திய தீவு தொடரின் பயிற்சியாளராக தொடருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தலைமை பயிற்சியாளராக தன்னுடைய ஒரு வருட ஒப்பந்தம் லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடியும் நிலையில் அனில் கும்ப்ளே அந்தப் பதவிக்கு ஏனைய பலரைப் போல விண்ணப்பித்திருந்தார். சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, வி.வி.எஸ். லட்சுமணன் அடங்கிய பி.சி.சி.ஐ. கிரிக்கெட் ஆலோசனைக் குழு பயிற்சியாளராக அவரது பணி தொடருவதை ஆமோதித்திருந்தது.
கேப்டன் விராட் கோலிக்கும் அனில் கும்ப்ளேவுக்கும் கடந்த ஆறு மாதங்களாகவே மோதல் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. விராட் கோலியுடன் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள ஏனைய சில வீரர்களுடனும் அனில் கும்ப்ளேவுக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
பயிற்சியாளருக்கும் அணியின் கேப்டனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு என்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு புதியது ஒன்றுமல்ல. இதற்கு முன்னால் பல உச்சக்கட்ட மோதல்களை இந்திய கிரிக்கெட் பார்த்திருக்கிறது. செளரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது, அவருக்கும் அப்போது பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்துவந்தது. 2005 செப்டம்பரில் இந்தியாவின் ஜிம்பாப்வே விஜயத்தின்போது இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதன் விளைவாக செளரவ் கங்குலி கேப்டன் பதவியைத் துறந்தார் என்பதும் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பதும் வரலாறு. கிரேக் சேப்பல் 2007 ஏப்ரலில் மேற்கிந்தியத் தீவுகளுடனான உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா படுதோல்வி
யடைந்ததைத் தொடர்ந்து தனது பதவியை துறந்தார்.
அனில் கும்ப்ளே கூறியிருப்பது போல தொழில் முறை, கட்டுக்கோப்பு, அர்ப்பணிப்பு, வீரர்களின் செயலைப் பாராட்டுவது, கடுமையான பயிற்சி ஆகியவற்றுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்து வந்தார் என்பது உண்மை. முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனான சுனில் கவாஸ்கர் தெரிவித்திருப்பதுபோல கும்ப்ளே பயிற்சியாளரான பிறகு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வந்திருக்கும் நிலையில் இப்போது அவர் கேப்டனுடான மோதலுக்காக பதவியை துறக்கிறார் என்றால் அது நல்ல அடையாளம் அல்ல.
எந்தவொரு கேப்டனுக்கும் அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பதும் அவருடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவதும் பதவியில் தொடர்வதும் தவறான முன்னுதாரணமாகிவிடும். பி.சி.சி.ஐ.யின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த ராமச்சந்திர குஹா குற்றம் சாட்டியிருப்பதைப் போல சூப்பர் ஸ்டார் கலாசாரம் இந்திய கிரிக்கெட்டை பாதித்திருப்பதின் அடையாளம்தான் கும்ப்ளே தனது பதவியைத் துறந்திருப்பது.
அதிலிருந்து சாம்பியன்ஸ் டிராபி பந்தயத்தின் இறுதிப் போட்டியின்போதுதான் நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருக்கிறது என்பது தெளிவு. அவரே கூறியிருப்பதுபோல கேப்டன் விராட் கோலி அவர் பயிற்சியாளராக தொடர்வதை விரும்பாததால்தான் பதவி விலகினார் என்று தெரிகிறது. இது இந்திய கிரிக்கெட் தொடர்பான பல அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புடன் விளையாடப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியும்கூட, அணியின் கேப்டனால் யார் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடிகிறது என்றால் அவருக்கு பி.சி.சி.ஐ.யிடம் இருக்கும் செல்வாக்கு வெளிப்படுகிறது. இப்படி கேப்டனின் விருப்பு வெறுப்புக்கேற்ப பயிற்சியாளர்களை நியமிப்பதும் தொடரச் செய்வதும் கிரிக்கெட் அணிக்கு நல்லதுதானா?
இந்தப் பிரச்னையில் கேப்டன் விராட் கோலி தான் விரும்பியதுபோல பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை அகற்றிவிட்டார். ஆனால், அடுத்து வரும் பயிற்சியாளரிடமும் இதேபோன்ற பிரச்னைகள் எழாது என்பது என்ன நிச்சயம்? தங்களது கேப்டன் பயிற்சியாளரின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதைப் பார்த்து கேப்டனுக்கு எதிராகவும் அதேபோன்ற அணுகுமுறையை அணியிலுள்ள வீரர்கள் கையாளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? கும்ப்ளே விவகாரம் இனி அடுத்ததாக வரப்போகும் பயிற்சியாளர் முன் எழுப்பும் கேள்வி: அவர் விராட் கோலியின் கட்டுப்பாட்டில் செயல்படப் போகிறாரா? அல்லது சுதந்திரமாக செயல்படுவாரா என்பதுதான்.
கேப்டனுக்கு அனுசரித்து அடிபணிந்து தலைமைப் பயிற்சியாளர் செயல்பட்டாக வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டால் அது இந்திய கிரிக்கெட்டை வெற்றிப் பயணத்திலிருந்து தடம்புரள வைத்துவிடும். அனில் கும்ப்ளேவைப் போல கெளரவமாகப் பதவி விலகிப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்காதவராக இருந்தால், அது இந்திய கிரிக்கெட்டை சர்வதேச அளவில் சந்தி சிரிக்க வைத்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com