சவாலும் தீர்வும்!

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மிகவும்

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மிகவும் சோதனையான காலக்கட்டத்தை எதிர்கொள்கிறது. உலகளாவிய அளவில் எல்லா நாடுகளும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதில் முனைப்புக் காட்டுவதால் இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தரப்பட்டு வந்த ஆதரவு குறைவதுதான் அதற்குக் காரணம். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டில் இந்திய மென்பொருள் ஏற்றுமதியின் அளவு 7% முதல் 8% வரை குறையக் கூடும் என்று கூறப்படுகிறது. அதனால் பல நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் குறைகின்றன.
வேலைவாய்ப்பு குறைவதற்கு மென்பொருள் ஏற்றுமதி குறைந்தது மட்டுமே காரணமல்ல. பெரும்பாலான நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தின் உதவியால் தங்கள் பணிகளை இயந்திரமயமாக்குவதால் கூடுதல் தொழில்நுட்ப ஊழியர்களின் தேவை குறைகிறது. அதுமட்டுமல்லாமல் வழக்கமான கணினி மென்பொருள் தேவைகள் குறைந்து புதிய பல முயற்சிகளில் நிறுவனங்கள் ஈடுபட தொடங்கியிருப்பதும் தொழில்நுட்ப நிபுணர்களின் தேவையை குறைத்திருக்கிறது.
மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான "நாஸ்காம்' ஒரு முன்னறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஏற்றுமதி வருவாய் 7% முதல் 8% வரை வளரும் என்றும் உள்நாட்டு வருவாய் 10% முதல் 15% வரை வளரும் என்றும் கணித்திருக்கிறது. கடந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி வருவாய் 10% முதல் 15% வரை வளரும் என்று "நாஸ்காம்' கணித்திருந்தது. ஆனால் 8.3% மட்டுமே வளர்ச்சியடைந்தது. இரண்டாவது ஆண்டாக இப்பொழுது மீண்டும் மென்பொருள் ஏற்றுமதித் துறை ஒற்றை இலக்க வளர்ச்சியை எதிர்கொள்கிறது.
2015-16 நிதியாண்டில் மென்பொருள் ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருவாய் 143 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9.3 லட்சம் கோடி). 2016-17இல் இது 154 பில்லியன் டாலராக (சுமார் ரூ.10 லட்சம் கோடி) உயர்ந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் இந்த இலக்கை எட்டுவது அசாத்தியம் என்று கருதப்படுகிறது.
மென்பொருள் ஏற்றுமதியில் பெரிய அளவு வளர்ச்சி இல்லை என்றாலும் உள்நாட்டுத் தேவை ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும் என்று "நாஸ்காம்' கருதுகிறது. இதற்குக் காரணம் நிதித் துறையிலும் எண்மத் (டிஜிட்டல்) துறையிலும் பரவலான வளர்ச்சியை "நாஸ்காம்' எதிர்பார்க்கிறது. குறிப்பாக ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரிப்பதும், வங்கிப் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதும் நிதித் துறைச் சார்ந்த சேவை நிறுவனங்கள் எண்மம் தொடர்பான நிறுவனங்கள் ஆகியவற்றின் தேவையை இன்றியமையாததாக்குகின்றன. அந்தத் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கக் கூடும்.
நாஸ்காமின் எதிர்பார்ப்புப்படி நடப்பு நிதியாண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புக்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் 1.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின என்றால் நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள்தான் உருவாகக் கூடும். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையின் மிகவும் மோசமான செயல்பாடாக இருக்கும்.
இந்தியாவின் முதல் மூன்று தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்குப் பதிலாக தங்களது பணியாளர்களை குறைத்து வருகின்றன. டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய மூன்று நிறுவனங்களுமே பின்னடைவை சந்தித்து வருகின்றன. அதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவுக்கான மென்பொருள் ஏற்றுமதி குறைந்திருப்பதும், இங்கிருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடியாமல் இருப்பதும்.
இந்தியாவின் 35 லட்சம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களில் ஏறத்தாழ 22% பேர் முன்னணியிலுள்ள மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.
இவை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக இருக்கும் பணியாளர்களையே குறைக்க முற்பட்டிருக்கின்றன. குறைந்த அளவு பணியாளர்களுடன் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தங்கள் லாபத்தை அவர்கள் அதிகரிக்க முற்படுகிறார்கள். மென்பொருள் ஏற்றுமதி குறைவதுதான் இதற்குக் காரணம்.
மெக்கென்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் தேவையற்றவர்களாக மாறக்கூடும். நாஸ்காமின் எதிர்பார்ப்பின்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்புகள் 20% குறையும். இவையெல்லாம் முன்னறிவிப்புதானே தவிர தீர்மானமான கணிப்புகள் அல்ல. அதேநேரத்தில் இவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர புறக்கணித்துவிட முடியாது.
இந்தியாவின் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டிலுள்ள தங்களது நிறுவனங்களில் பணியாற்ற இங்கிருந்து பணியாளர்களை அழைத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதால், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ளூர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முற்பட்டிருக்கின்றன. இது இந்திய பொறியியல் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறும் இளைஞர்களின் வாய்ப்புகளைக் கணிசமாகக் குறைக்கும்.
இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் அறிவித்த "எண்ம இந்தியா' (டிஜிட்டல் இந்தியா) திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்படுவதும் தேவைக்கு அதிகமான தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களை உருவாக்குவதை நிறுத்துவதும்தான் இதற்குத் தீர்வாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com