குப்பைக்கு என்ன தீர்வு?

மத்திய அரசின், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு

மத்திய அரசின், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் 100 நகரங்களைப் பொலிவுறு நகரங்களாக மாற்றப்போவதாக 2015}இல் அறிவித்தது. இதுவரை இந்தத் திட்டத்தில் 60 நகரங்கள் மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தன. இப்போது தமிழகத்திலுள்ள திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய நகரங்களையும் புதுச்சேரியையும் இணைத்து பொலிவுறு நகரங்கள் திட்டத்தின்கீழ் 90 நகரங்களை அறிவித்திருக்கிறது.
பொலிவுறு நகரங்களை அறிவிப்பது என்பதெல்லாம் சரி, இந்த நகரங்களைப் பொலிவுறு நகரங்களாக மாற்ற வேண்டுமானால், அதற்கு முன்னால் சில அடிப்படைப் பிரச்னைகளையும் கட்டமைப்பு வசதிகளையும் குறித்த தீவிரமான சிந்தனை தேவை. மழை நீர் வடிகால் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள், பாதாள சாக்கடைகள், குடிநீர் விநியோகம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அன்றாடம் இந்த நகரங்களில் உருவாகும் குப்பைக்கூளங்களை சேகரிப்பதும், அவற்றை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அழிப்பதும். இது ஏதோ இந்தியா மட்டும் எதிர்கொள்ளும் பிரச்னை என்று எண்ணிவிடக் கூடாது. உலகத்திலுள்ள எல்லா நாடுகளுமே இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றன.
சொல்லப்போனால் வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் அங்கு உள்ள நகரங்களில் உருவாகும் குப்பைகளை மிகவும் பின்தங்கிய அல்லது வளர்ச்சியடையும் நாடுகளுக்கு திருட்டுத்தனமாக கொண்டுபோய் கொட்டுவதற்கு முயற்சிக்கின்றன. "நாம் என்ன குப்பைத் தொட்டியா' என்ற தலைப்பில் 12.6.2008}இல் இதுகுறித்துத் தினமணி ஒரு தலையங்கமே எழுதியிருந்தது. அதில் அமெரிக்காவிலுள்ள நியூஜெர்ஸி நகரத்திலுள்ள குப்பைக்கூளங்கள் 40 கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு செப்டம்பர் 2015}இல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது குறித்துப் பதிவு செய்திருந்தோம்.
அதிவேகமான நகரமயமாதலால் இந்தியா எதிர்கொள்ள முடியாத அளவுக்கான குப்பைக்கழிவுகளை கையாள வேண்டிய பிரச்னையை எதிர்கொள்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 28.6 கோடியாக இருந்த நகர்ப்புற வாசிகளின் எண்ணிக்கை 2011}இல் 37.7 கோடியாக அதிகரித்திருக்கிறது. அதாவது 7,939 நகரங்களில் சுமார் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்றைய நிலையில் வாழ்கிறார்கள்.
சுமார் 8,000 நகரங்கள் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன் திடக்கழிவுகளை உருவாக்குகின்றன. சுமார் 43 மில்லியன் டன் தான் அதில் சேகரிக்கப்படுகின்றது. சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் வெறும் 11.9 மில்லியன் டன்னை மட்டுமே அழிக்கப்படவோ, மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படவோ, கம்போஸ்ட் உரமாக மாற்றவோ முடிகிறது. ஏறத்தாழ 33 மில்லியன் டன் ஆங்காங்கே குப்பை சேகரிக்கும் இடம் ஒதுக்கப்பட்டு அங்கே கொட்டப்படுகிறது.
உலகளவில் மிக அதிகமான திடக்கழிவுகள் உருவாகும் நாடு அமெரிக்கா. நாளொன்றுக்கு 6.21 லட்சம் டன் திடக்கழிவுகள் அங்கே உருவாகின்றன. பிரேஸில், சீனா, இந்தியா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் அதிகமான திடக்கழிவுகள் உருவாகும் நாடுகள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெறுகின்றன. மேலை நாடுகளில் இதுகுறித்த விழிப்புணர்வு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருப்பதால் அவர்கள் திடக்கழிவுகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்துத் தீவிரமான ஆலோசனைகளை மேற்கொண்டு நிறைவேற்றி வருகிறார்கள். முழுமையாக வெற்றியடையாவிட்டாலும் ஓரளவுக்குத் தெருக்களில் குப்பைகள் சேருவதையும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நகரத்திற்கு வெளியே திறந்த வெளியில் குப்பைகளை கொட்டி வைக்காமலும் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
சென்னையைப் பொருத்தவரை குப்பைக்கூளங்கள் ஒரு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு குப்பைத் தொட்டிகள் நிறைந்து கிடப்பதும் தெருவெங்கும் குப்பைக்கூளங்கள் இறைந்து கிடப்பதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. உருவாகும் குப்பைக்கூளங்களை சேகரிப்பது ஒரு பிரச்னையென்றால், அவற்றைக் கையாள்வதும் அழிப்பதும் அதைவிடப் பெரிய பிரச்னையாக இருக்கிறது.
சென்னையில் கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இரண்டு இடங்களில் பெரும்பாலான குப்பைகள் கொட்டப்படுகின்றன. 270 ஏக்கர் பரப்பில் கொடுங்கையூரிலும், 208 ஏக்கர் பரப்பில் பெருங்குடியிலும் உள்ள குப்பைக்கிடங்குகளில் இனியும் குப்பையைக் கொட்ட முடியாது என்கிற அளவுக்குத் திடக்கழிவுகள் சேர்ந்துவிட்டிருக்கின்றன. அவ்வப்போது அங்கே ஏற்படும் நெருப்பால் சுற்றியிருக்கும் பல பகுதிகள் துர்நாற்றமுள்ள புகை மண்டலத்தில் மூழ்கி, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கு மாற்றாக வேறு இடத்தை அடையாளம் காணவும் முடியவில்லை.
குப்பையிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டம் மேலை நாடுகளில் பரவலாகவே காணப்படுகிறது. ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் குப்பைகளை எரித்து எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. பெருங்குடியில் 26 மெகாவாட்டும், கொடுங்கையூரில் 35 மெகாவாட்டும் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகிறார்கள். தனியாரிடம் திடக்கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை விரைவில் பெருமாநகராட்சி கோர இருப்பதாகத் தெரிகிறது.
எதுவாக இருந்தாலும் திடக்கழிவுகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது, வீடுகளிலேயே மக்கும் குப்பையும், மக்காத குப்பையும் பிரிக்கப்படுவது, பிளாஸ்டிக் தவிர்க்கப்படுவது ஆகியவை உணர்த்தப்படாமல் போனால், நகராட்சி நிர்வாகத்தின் எந்தவித முயற்சியும் வெற்றி பெறாது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com