காங்கிரஸ் வழியில் பா.ஜ.க.!

இந்தி மொழியை இந்தியாவில் தேசிய

இந்தி மொழியை இந்தியாவில் தேசிய மொழியாக்க வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 100 ஆண்டுகளில் பலமுறை எழுப்பப்பட்டுவிட்டது. ஒவ்வொரு முறையும் ஹிந்தி பேசாத மாநிலங்களிலிருந்து எதிர்ப்புகள் கிளம்புவதும் அந்த கோரிக்கை அடங்குவதும் வழக்கமாகி விட்டிருக்கிறது.
கடந்த 70 ஆண்டுக் காலமாக ஹிந்தியை பரப்புவதற்கு மத்திய அரசு எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்துமே வெறுப்பையும் பிரிவினை உணர்வையும்தான் தூண்டியிருக்கிறதே தவிர, அதனால் தேசியம் வலுப்படவில்லை. ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மக்களின் எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம் என்பது ஹிந்தி பேசும் மாநில மக்களுக்குப் புரியாமல் இருப்பதும், அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதில் ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் முற்படுவதும் வேதனை அளிக்கிறது.
பிரச்னைக்குரிய அரசியல் சாசன சட்டப் பிரிவுகளான 343-ம், 351-ம் தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பால் நடைமுறைப்படுத்தப்படாமல் தொடர்கிறது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளின் தயவில் மத்திய அரசு இருந்தபோது இந்த சட்டப் பிரிவுகளை அரசியல் சாசனத்திலிருந்தே அகற்றியிருக்க வேண்டும்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பிகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய ஆறு மாநிலங்கள் தவிர, இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மாநிலங்களுக்கான மொழிகள் இருக்கின்றன. தாய்மொழியில் பேசாதவர்களும், தங்கள் குழந்தைகளைத் தாய்மொழிக் கல்விக்கு அனுப்பாதவர்களும்கூடத் தாய்மொழிக்கு பாதிப்பு வருகிறது எனும்போது அதை ஏற்றுக்கொள்ளத் தயாராவதில்லை.
பரவலாக ஹிந்தி பேசத் தெரிந்த மாநிலமான குஜராத்திலேயேகூட, தாய்மொழியான குஜராத்தியில்தான் ஆரம்பக் கல்வி இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அங்கே முதல்வராக இருந்தபோது முடிவெடுத்தார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதேபோல மேற்கு வங்காளத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, மொழி குறித்த பிரச்னை வரும்போது தாய்மொழியைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டப்படுவதற்கு அந்தந்த மாநில மக்களுக்கு அவரவர் தாய்மொழி மீதான பற்றுதான் காரணம். இப்போது டார்ஜீலிங்கில் நடைபெறும் போராட்டத்திற்குக்கூட வங்காள மொழித் திணிப்புதான் காரணம் என்பதை உணர வேண்டும்.
இனிமேல் கடவுச்சீட்டு ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் இருக்கும் என்றொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சகம். இதன்படி கடவுச்சீட்டில் மட்டுமல்லாமல் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தையும் ஹிந்தியில் நிரப்பலாம் என்று அறிவித்திருக்கிறது.
ஹிந்தி பேசும் மக்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் கடவுச்சீட்டு விண்ணப்பமும், கடவுச்சீட்டும் வழங்கப்படுவதில் தவறொன்றுமில்லை. அதேநேரத்தில் ஹிந்தி பேசவோ எழுதவோ தெரியாத ஹிந்தி அல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநில மக்களும் அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழிகளிலும் விண்ணப்பமும் கடவுச்சீட்டும் வழங்கப்படும் என்று மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தால் இந்த அரசை ஒட்டுமொத்த இந்தியாவும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கும். அதைவிட்டுவிட்டு ஆங்கிலத்துடன் ஹிந்தியில் கடவுச்சீட்டு என்கிற அறிவிப்பு பன்முகத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாட்டின் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக பலவீனப்படுத்துகிறது.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டு ஹிந்தி பேசாத பகுதிகள் குறித்து ஒரு ஆணையை பிறப்பித்திருக்கிறது. அதன்படி மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் எல்லா மெட்ரோ ரயில் நிலையத் தகவல் பலகை, பெயர்ப் பலகை, அறிவிப்புகள், வெளியீடுகள் உள்ளிட்ட அனைத்திலும் ஹிந்தியும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. இப்போது கடவுச்சீட்டில் ஹிந்தி இடம்பெறும் என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது.
இப்போதைய கடவுச்சீட்டு வழங்கும் ஏற்பாட்டில் மாற்றம் கொண்டு வருவதன் நோக்கம் ஹிந்தியை தேசியத்துடன் இணைக்கும் முயற்சி என்றுதான் கொள்ள வேண்டும். இந்திய தேசியம் என்பது ஹிந்தியுடன் இணைந்ததாக இருப்பது ஏற்புடையதல்ல.
பள்ளிகளில் ஹிந்தி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வழிவகை செய்து கொடுப்பதில் தவறே இல்லை. தாய்மொழி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்பதும், ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பதும், மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என்பதும்தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். மும்மொழிக்கொள்கையைக் கைவிட்ட அண்ணா இன்று இருப்பாரேயானால் இதைத்தான் வலியுறுத்தியிருப்பார். அதேநேரத்தில் ஹிந்தி கட்டாயமாக்கப்படுமேயானால் அதைத் தமிழகம் மட்டுமல்ல, ஒடிஸா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், குஜராத், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா என்று பல மாநிலங்களும் எதிர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மொழியும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொன்றுக்கும் நீண்டகால சரித்திரமும் இலக்கியச் செறிவும் உண்டு. இந்த மொழிகளுக்கு எல்லாம் மேம்பட்டதாக ஹிந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹிந்தியை ஒருவர் விரும்பி படிப்பது என்பது வேறு, ஹிந்தியை ஒருவர் மீது திணிப்பது என்பது வேறு.
தேசிய அளவிலான கருத்தொற்றுமை மூலம்தான் மொழிக் கொள்கை தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர ஹிந்தி பேசும் மாநிலங்களின் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக வகுப்பது ஏற்புடையதல்ல. காங்கிரஸ் செய்த அதே தவறை இப்பொழுது மத்திய ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வும் செய்ய முற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com