வெற்றியுமில்லை... தோல்வியுமில்லை..!

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம்

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் வெற்றியா என்று கேட்டால் வெற்றி என்றும், தோல்வியா என்று கேட்டால் தோல்விதான் என்றும் கூறலாம். சர்வதேச அளவில் அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கி இருக்கிறது என்பதும், அது இந்தியாவின் வல்லரசு கனவுக்கு வலுசேர்த்திருக்கிறது என்பதும் வெற்றிக்கான காரணங்கள். குறிப்பாக, பாகிஸ்தான் பிரச்னை குறித்து அமெரிக்காவின் முழு ஆதரவையும் இந்தியா பெற முடிந்தது என்பது பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தின் மிகப்பெரிய வெற்றி.
பிரதமர் நரேந்திர மோடி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பிறகுதான் அமெரிக்க விஜயத்தை நிகழ்த்தியிருக்கிறார். வெள்ளை மாளிகையின் அதிகார மையம் என்று கருதப்படுகின்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் குடும்பத்தினருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது அவரது முதல் வெற்றி. அதிபர் டிரம்பின் மகள் இவங்கா டிரம்பை இந்தியாவில் நடக்கும் தொழிலதிபர்கள் மாநாட்டுக்கு அழைத்ததன் மூலம் டிரம்ப் குடும்பத்துடனான தனது நெருக்கத்தை ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இவங்கா டிரம்பின் கணவர் ஜெரட் குஷ்னர் இந்திய குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கக் குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தின் மிக முக்கியமான வெற்றி பாகிஸ்தானின் ஆதரவுடன் காஷ்மீரில் ஊடுருவல் நடத்திக் கொண்டிருக்கும் ஹிஸ்புல் முஜாஹுதீன் தலைவர் சையத் சலாவுதீனை சர்வதேசத் தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருப்பது. இதன்மூலம் காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்றுவதற்கு பாகிஸ்தான் எடுத்துவரும் முயற்சிகளை இந்தியா முறியடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்திய -அமெரிக்கக் கூட்டறிக்கையில், ஏனைய நாடுகளில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்குப் பாகிஸ்தானில் இடம் அளிக்கக் கூடாது என்றும், எல்லை கடந்த தீவிரவாதத்தில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது இன்னொரு முக்கியமான வெற்றி.
சீனாவின் "ஒரே பாதை ஒரே சாலை' திட்டம் குறித்த புதுதில்லியின் ஐயப்பாடுகளுக்கும் அச்சங்களுக்கும் அமெரிக்கா ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். சீனா, வடகொரியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் குறித்தும், இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்த கருத்துகளை கூட்டறிக்கையில் வெளியிட்டிருப்
பதன் மூலம் இந்திய - அமெரிக்க உறவு நெருக்கமடைந்திருப்பது வெளிப்படுகிறது. அடிப்படையில் பார்த்தால் முந்தைய ஒபாமா நிர்வாகத்தின்போது இந்தியாவுடனிருந்த அமெரிக்க உறவில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதைத்தான் இந்திய - அமெரிக்கக் கூட்டறிக்கை வெளிப்படுத்துகிறது.
அதிபர் டிரம்புடனான சந்திப்புக்கு பிறகு அதிபரும் பிரதமரும் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வழக்கம்
போலக் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இந்தியாவின் முதன்மையான நட்புறவு நாடு அமெரிக்காதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவாகவே பதிவு செய்திருப்பது மிகவும் முக்கியமான கொள்கை முடிவு. அதேபோல தேசிய அணுசக்தி முகமையிலும், ஐ.நா.வின் பாதுகாப்பு குழுவிலும் இந்தியா இடம் பெறுவதற்கு அமெரிக்காவின் ஆதரவை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியிருப்பது இன்னொரு முக்கியமான அறிவிப்பு.
பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, எரிசக்தி, தொழில்நுட்ப மேம்பாடு, கடலாண்மை ஆகியவற்றில் அமெரிக்காவுக்கு இந்தியா முதன்மையான இடத்தை அளிக்க முற்பட்டிருக்கிறது. அமெரிக்க தனக்கு நெருக்கமான கூட்டணி நாடுகளைப்போலத் தன்னையும் நடத்த வேண்டும் என்பதை இந்தியா மறைமுகமாக வலியுறுத்தியிருக்கிறது.
அமெரிக்காவுக்கு நெருக்கமான இப்படியொரு நிலைப்பாட்டை இந்தியா எடுப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவைச் சுற்றி அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கமும் பாகிஸ்தானுடனான சீனாவின் நெருக்கமும், முன்பு இருந்ததுபோல ரஷியா முழு மனதுடன் இந்தியாவை ஆதிகரிக்காமல் இருப்பதும், இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. தனது முதலீட்டின் மூலம் இந்தியாவைச் சுற்றியிருக்கும் நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் தனது செல்வாக்கைச் சீனா அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா போன்ற வல்லரசின் நட்பும் ஆதரவும் தேவைப்படுகிறது என்பதுதான் இதன் பின்னணி.
சர்வதேச அளவிலான பிரச்னைகளில் இரண்டு நாடுகளும் வெளிப்படுத்தியிருக்கும் நெருக்கம் இரு நாடுகளுக்குமிடையேயான பிரச்னைகளில் காணப்படவில்லை. இன்றைய நிலையில் அமெரிக்க இறக்குமதியைவிட இந்தியாவில் இருந்தான அமெரிக்க ஏற்றுமதி அதிகமாக இருப்பதைக் குறைப்பதற்கு, இந்தியா அதிகரித்த அமெரிக்க இறக்குமதிக்கு வழிகோல வேண்டும் என்பது அமெரிக்காவின் வற்புறுத்தல். விவசாயம், தகவல் தொழில்நுட்பம், தயாரிப்பு, சேவை ஆகிய எல்லா துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடும், கூட்டுத் தொழில் முனைப்பும் அதிகரிக்க வேண்டும் என்
கிறது அமெரிக்கா.
இது எல்லாமே சரி, இந்தியாவுக்கு மிக முக்கியமான பிரச்னையான எச்1பி விசா நுழைவு அனுமதி குறித்து எந்த முடிவுமே எட்டப்படவில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவு. அதை ஈடுகட்டு
வதற்குதான் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவில் அவர்களது முதலீடுகளை அதிகரித்து இங்கேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார் போலும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com