நீண்டநாள் கனவு!

சூரிய மின்சக்தி என்பது மனித இனத்தின் நீண்டநாள் கனவு. ஆனால், அதிக அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம்,

சூரிய மின்சக்தி என்பது மனித இனத்தின் நீண்டநாள் கனவு. ஆனால், அதிக அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம், அதற்கு தேவைப்படும் மிகப்பெரிய முதலீடுதான். சூரிய வெளிச்சத்தை உள்வாங்கும் தகடுகளின் விலையும் உருவாகும் மின்சாரத்தை சேமிக்க தேவைப்படும் பேட்டரிகளின் விலையும் சூரியமின்சக்தியின் உற்பத்திச் செலவை அதிகரித்து விடுகின்றன. இப்போது இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும் போலிருக்கிறது.
இரண்டு வாரம் முன்பு மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா என்கிற இடத்தில் அமைய இருக்கும் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான ஏலம் நடத்தப்பட்டது. 750 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இருக்கும் அந்த சூரிய மின்சக்தி திட்டத்திற்கு 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்க ஏலம் நடந்தது. யாருமே எதிர்பார்க்காத அளவில் ஒரு கிலோ வாட் மின்சாரத்திற்கு ரூ.3.29 என்கிற தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. உலக வரலாற்றில் முதல்முறையாக சூரிய மின்சக்தியின் கட்டணம் நான்கு ரூபாய்க்கு குறைந்து ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஏலத்தை கூட்டாக எடுத்திருக்கும் மூன்று நிறுவனங்களும், புதிய ஆராய்ச்சிகளால் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கருத்தில் கொண்டும், இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு போதுமான இடவசதி போன்றவற்றிற்காக அரசு தரும் சலுகைகளைக் கருத்தில் கொண்டும் குறைந்த விலைக்கு சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வது சாத்தியம் என்று கருதுகின்றன. மத்தியப் பிரதேச மாநில அரசு, சூரிய மின்சக்தியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தாமதமில்லாமல் அவ்வப்போது வாங்கிக்கொள்ளவும், உற்பத்தியான மின்சாரத்தை சேமிக்க மின் வலைப்பின்னலை (’கிரிட்') ஏற்படுத்தித் தரவும், மின்சாரத்திற்கான தொகையை தாமதமில்லாமல் நிறுவனத்திற்கு தந்துவிடவும் உறுதியளித்திருக்கிறது. அதனடிப்படையில்தான் இவ்வளவு குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்கவும் தயாரிக்கவும் முன்வந்திருக்கிறது அந்த கூட்டு நிறுவனம்.
மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் அனல் மின்சாரம், காற்று மின்சாரம் போன்ற மாற்று எரிசக்திகளுடன் இத்தனை நாளும் கட்டணப்போட்டியில் ஈடுகொடுக்க முடியாமல் தவித்த சூரிய மின்சக்தி இனிமேல் பரவலான வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். விலை குறைவு என்பது ஒருபுறம் இருக்க, அதைவிட முக்கியமான அம்சம் சுற்றுச்சூழலை பாதிக்காத, மாசு ஏற்படுத்தாத சுத்தமான மின்சாரம் அதிக அளவில் கிடைக்கப்போகிறது என்பதுதான்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூரியமின்சக்தியின் உதவியுடன் ஒரு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டது. சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தி விமானம் இயக்கப்பட்டது என்பதுதான் அது. அபுதாபியிலிருந்து கடந்த 2015 மார்ச் 9-ஆம் தேதி சூரியமின்சக்தியைப் பயன்படுத்தி இயங்கும் அந்த விமானம் கிளம்பியது. அந்த விமானம் நான்கு கண்டங்களையும் நான்கு பெருங்கடல்களையும் கடந்து நாற்பதாயிரம் கிலோமீட்டர் வானத்தில் பறந்து மீண்டும் அபுதாபியை வந்தடைந்துள்ளது. இதற்காக எந்தவித பெட்ரோலியப் பொருளையும் பயன்படுத்தாமல் 17,000 சூரியமின்சக்தி செல்களை மட்டும்தான் விமானம் பயன்படுத்தியது.
விமானத்தின் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டராக மட்டும்தான் இருந்தது என்பது ஒரு குறையாகத் தெரியவில்லை. அவ்வப்போது சில பிரச்னைகள் ஏற்பட்டன, மின்சக்தியை சேமித்து வைக்கும் மின்கலன்கள் பழுதடைந்தன என்றாலும் அவற்றையெல்லாம் கடந்து சூரிய மின்சக்தியால் விமானத்தை இயக்க முடியும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. அதற்குப் பிறகுதான் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் செலவைக் குறைக்க பரவலாக ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. இப்போது அதன் தொடர்ச்சியாக ரூ.3.29-க்கு ஒரு கிலோவாட் மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்க முடியும் என்கிற அளவுக்கு இம்முயற்சி வெற்றியடைந்திருக்கிறது.
’தேசிய சூரிய மின்சக்தி முனைப்பு' என்கின்ற அமைப்பை தொடங்கியதிலிருந்து இப்போது இலக்கு ஐந்து மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 2022-க்குள் 100 ஜிகா வாட் மாற்று எரிசக்தியை உருவாக்க வேண்டும் என்று இந்தியா தீர்மானித்திருக்கிறது. இதற்காக உள்ளூரிலேயே மின்தகடுகள், செல்கள் தயாரிப்பதற்கான ஊக்கம் தரும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிற நிலைமை போய் இந்தியாவிலேயே சூரிய மின்சக்திக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயாரிக்கப்படும் நிலைமை ஏற்பட வேண்டும்.
சூரிய மின்சக்தியைப் பொருத்தவரையில் இதுபோன்ற பல வரவேற்கத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டால்தான் அந்த முயற்சி முழுமையாக வெற்றி பெறும். முதலாவதாக, உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சக்தியை சேமித்து வைப்பதற்கான மின் வலைப்பின்னல் (’கிரிட்') அதிக அளவில் அமைக்கப்பட வேண்டும். அதேபோல, சூரிய மின்சக்திக்கு அடிப்படைத் தேவை மின் தகடுகளும், பேட்டரிகளும் மட்டுமல்ல அதிக பரப்பளவிலான நிலம். மாநில அரசுகளின் ஒத்துழைப்பும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்டமும் இல்லாமல் இது சாத்தியமில்லை. விரைவிலேயே செயல்படுத்தப்பட இருக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு எந்த அளவுக்கு சூரிய மின்சக்தி உற்பத்தியை பாதிக்கும் என்பது தெரியவில்லை.
உடனடியாக அரசு செய்யக்கூடிய ஒன்று இருக்கிறது. குறைந்த விலையிலோ அல்லது அதிக மானியத்தின் மூலமோ எல்லா வீடுகளின் கூரையின்மீதும் சூரிய மின்தகடுகளை பதிக்க அரசு மக்களை ஊக்குவிக்குமேயானால் அதுவே மிகப்பெரிய அளவில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு வழிகோலக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com