தக்கவைக்குமா காங்கிரஸ்!

60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கான தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்றும், அடுத்தகட்டத் தேர்தல் மார்ச் 8-ஆம் தேதியும் நடக்க இருக்கின்றன.

60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கான தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்றும், அடுத்தகட்டத் தேர்தல் மார்ச் 8-ஆம் தேதியும் நடக்க இருக்கின்றன.
முதலமைச்சர் ஒக்ராம் இபோபி சிங் மீண்டும் முதலமைச்சராவாரா, கடந்த 15 ஆண்டுகளாக பதவியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி மணிப்பூரில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளுமா என்கிற கேள்விகளுக்கு தேர்தல் முடிவுகள் பதில் அளிக்கும்.
2012-இல் 42 இடங்களை வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் மறுபடியும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரிந்துபோன ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி மீண்டும் இணைந்தபோது, அவரது அரசு மேலும் வலுவடைந்து, இன்றுவரை மணிப்பூர் அவரது கோட்டையாகத் தொடர்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் இந்த முறையும் களத்தில் இறங்கி இருக்கிறது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி.
பொதுவாக மத்தியில் ஆளும் கட்சிதான் மணிப்பூரிலும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதுதான் பா.ஜ.க.வின் முனைப்புக்கு காரணம். கடந்த 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லையென்றாலும்கூட இந்தத் தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்கிற கோஷத்துடன் துணிந்து களமிறங்கியிருக்கிறது. பா.ஜ.க. முன்வைக்கும் கோஷம் காங்கிரஸ் அரசின் ஊழலை ஒழிப்போம் என்பதும், கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் ஐக்கிய நாகா குழுவின் பொருளாதாரத் தடைக்கு முடிவு கட்டுவோம் என்பதும்.
மணிப்பூர் மாநிலத்திலுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 40 தொகுதிகள் இம்பால் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றன. ஏனைய 20 தொகுதிகள் மலைப்பகுதியில் அமைந்தவை. மலைப்பகுதியில் அமைந்த 20 தொகுதிகளில் கணிசமான அளவில் நாகா இனத்தவர்கள் இருக்கிறார்கள். இம்பால் பள்ளத்தாக்கு மலைப்பகுதியால் சூழ்ந்திருப்பதால் அவை கடந்துதான் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்ல முடியும்.
அண்டை மாநிலமான நாகாலாந்தில் செயல்படும் ஐக்கிய நாகா கவுன்சில் மற்றும் தேசிய சோஷலிச நாகாலிம் கவுன்சில் (ஐசக் - மொய்வா) ஆகியவை ’நாகாலிம் அல்லது ஒருங்கிணைந்த நாகாலாந்து' என்கிற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆனால் மணிப்பூரின் எந்தவொரு பகுதியையும் நாகாலிம் என்கிற கருத்தாக்கத்திற்காக விட்டுக்கொடுக்க இம்பால் பள்ளத்தாக்கில் பெருவாரியாக வாழும் ’மைத்தி' என்கிற மணிப்புரி மக்கள் தயாராக இல்லை. இதுதான் மணிப்பூரின் அடிப்படை பிரச்னை.
நாகா இனத்தவரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் ஆறு புதிய மாவட்டங்களை உருவாக்கியது இபோபி சிங் அரசு. எங்கெல்லாம் நாகர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்தப் பகுதிகளையெல்லாம் பிரித்து எந்தவொரு மாவட்டத்திலும் நாகர்கள் பெரும்பான்மையினராக இல்லாமல் இருப்பதை உறுதி செய்தது. நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன என்று முதல்வர் நியாயப்படுத்தினாலும் அவரது நோக்கம் மணிப்பூரில் அரசியல் ரீதியாக நாகா இனத்தவரை பலவீனப்படுத்துவதுதான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
ஐக்கிய நாகா கவுன்சில் பொருளாதாரத் தடை ஏற்படுத்துவதற்கான காரணம், ஒக்ராம் இபோபி சிங்கின் அரசு நாகா இனத்தவர் அதிகம் வாழும் மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களைப் பிரிக்க முற்பட்டதுதான். பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு ஏனைய இந்தியாவுடன் இருக்கும் ஒரே தொடர்பான நெடுஞ்சாலை ஐக்கிய நாகா கவுன்சிலால் மூடப்பட்டுவிட்டிருக்கிறது. இதன்மூலம் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரத் தடையால் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரில் பிரசாரத்திற்கு சென்றார். அவர் பேசும்போது, முதல்வர் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழல் அரசாக இருக்கிறது என்றும், பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநிலத்தின் குரல் வளையை நெரிக்கும் நாகாலிம் ஆதரவாளர்களின் பொருளாதாரத் தடையை அகற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.
முதல்வர் இபோபி சிங்கும் அதையே தனது பிரசாரத்திற்கு வலுசேர்த்துக் கொண்டுவிட்டார். பிரதமரின் பேச்சு பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியிருக்கும் ஐக்கிய நாகா கவுன்சிலுக்கும் பா.ஜ.க.வுக்கும் ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என்றும் கடந்த ஆகஸ்ட் 2015-இல் பா.ஜ.க.வின் தலைமையிலான மத்திய அரசுக்கும் ஐசக் - மொய்வா பிரிவான தேசிய சோஷலிச நாகாலிம் கவுன்சிலுக்கும் இடையேயான ஒப்பந்தம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறார் முதல்வர் இபோபி சிங்.
நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது ஒப்பந்தத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், ஒப்பந்தம் எந்தவிதத்திலும் மணிப்பூர் மாநிலத்தின் எல்லைகளை பாதிக்காது என்றும் உறுதியளித்தார். முதல்வர் பிரதமரிடம் திருப்பிக் கேட்கும் கேள்வி, ’அப்படியானால் அந்த ஒப்பந்தத்தை ஏன் வெளிப்படையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்க மத்திய அரசு தயங்குகிறது?' என்பதுதான்.
மணிப்பூரை பொருத்தவரை தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பது 40 இடங்களைக்கொண்ட பள்ளத்தாக்கு. அடுத்தபடியாக மணிப்பூரில் பெரும்பாலானவர்கள் உணவு, உடை, கல்வி ஆகியவற்றுக்காக போராடும் வசதியற்ற ஏழை மக்கள். அதனால் தேர்தல் முடிவுகளை இன உணர்வும் பணமும்தான் தீர்மானிக்கும் என்பது பரவலான கருத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com