விவசாயிக்கு வஞ்சனை!

அதிகப்படியான விளைச்சல், வாங்குவோர்

அதிகப்படியான விளைச்சல், வாங்குவோர் இல்லை, அப்படியே வாங்கினாலும் மிகக் குறைவான விலை என்பதால் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த உருளைக்கிழங்குகளைத் தெருவில் கொட்டித் தங்கள் ஆத்திரத்தையும் வேதனையையும் தீர்த்துக் கொள்கிறார்கள். இப்படி விவசாயிகள் தாங்கள் விளைவித்த உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றையும், உற்பத்தி செய்த பாலையும் தெருவில் கொட்டித் தங்களது கோபத்தைக் காட்டுவது என்பது வழக்கமாகி விட்டிருக்கிறது.
இதுபோல விவசாயிகள் கொதித்தெழும்போது மட்டும்தான் அரசாங்கம் விழித்துக் கொள்ளும். நிலைமையை அப்போதைக்குக் கட்டுக்குள் கொண்டு வரவும், விவசாயிகளின் கோபத்தைத் தணிக்கவும் ஏதாவது அறிவிப்புகளைச் செய்வதும், மானியம் வழங்குவதும், அரசே குறிப்பிட்ட விலைக்கு விளைபொருள்களை வாங்கிக் கொள்வது என்று ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்துடன் பிரச்னையும் மறக்கப்பட்டு விடுகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே, விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனை முனையங்களை ஏற்படுத்த வேண்டுமென்பதும், விநியோகத்துக்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டுமென்பதும் பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. விவசாயப் பொருள்களை சேமித்து வைக்கும் முறையான சேமிப்புக் கிடங்குகள், அவற்றை எடுத்துச் செல்லும் முறையான சரக்குப் போக்குவரத்து வசதிகள் ஆகியவை இன்றும்கூட திட்டமிட்டுக் கொண்டிருக்கும் நிலையில்தான் தொடர்கின்றன.
மத்திய அரசின் கொள்கைகள் எல்லாமே, அவ்வப்போது ஏற்படும் தட்டுப்பாட்டை அகற்றுவதிலும், விலை ஏறிவிடாமல் தடுப்பதிலும்தான் இருந்து வருகிறதே தவிர, விவசாயிகளைப் பாதுகாப்பது, அவர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையைப் பெற்றுத் தருவது என்கிற எண்ணமே இருந்ததில்லை. அவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை தரப்படுவதில் திருப்தி அடைய முடியுமே தவிர, உற்பத்திக்கான தங்களது செலவையும், உழைப்பிற்கான ஆதாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. இதுதான் காலங்காலமாகத் தொடரும் விவசாயிகளின் அவல நிலை.
கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை ஏறத் தொடங்கியதும், கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் உருளைக்கிழங்கு உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டபோது, விலை ஏறியது. உடனே, மத்திய அரசு வெளிநாட்டு ஏற்றுமதிக்குக் குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து உள்நாட்டு விற்பனை விலையைக் கட்டுப்படுத்த முற்பட்டது.
விலை ஏறும்போது, அதனால் விவசாயி அதிக லாபமடைவதைத் தடுத்து, பொதுமக்கள் பாதுகாக்கப்படுவது நியாயம்தான். அதேபோல, விலை கணிசமாகக் குறைந்து, உற்பத்தி செய்த உருளைக்கிழங்குகள் தேங்கிவிடும்போது, அரசு அவர்களது உதவிக்கு வரவும் வேண்டாமா? விரைவிலேயே நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவிப்பதைத் தவிர அரசு அதிகாரிகள் எதுவும் செய்யாமல் இருந்ததால்தான், உருளைக்கிழங்கு உற்பத்தி செய்த விவசாயிகள் அவற்றைச் சாலைகளில் கொட்டித் தங்களது ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ள முற்பட்டார்கள்.
2015-16இல் உலகின் பெரிய உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா உயர்ந்தது. இந்தியாவில் கடந்த நிதியாண்டில் விளைந்த மொத்த உருளைக்கிழங்கு 4.3 கோடி டன். இதில் ஏற்றுமதி வெறும் 1% மட்டும்தான். உற்பத்தி அதிகரிக்கப்போவதை எதிர்பார்த்து அரசு உருளைக்
கிழங்கு ஏற்றுமதிக்கான தடையை அகற்றி இருக்குமேயானால், இப்போது விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த உருளைக்கிழங்குகளை சாலையில் கொட்டிப் போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
பஞ்சாபில் இன்னொரு பிரச்னையும் உண்டு. அதற்குக் காரணம் மாநில அரசு. உணவுப் பொருள் உற்பத்திக்கு வரி விதிப்பு, சந்தைக் கட்டணம், ஊரக வளர்ச்சிக் கட்டணம் என்று உற்பத்திப் பொருள்கள் மீது பல்வேறு வரிவிதிப்புகள் அங்கே சுமத்தப்படுகின்றன. அதனால் மொத்த வியாபாரிகள் பஞ்சாபிலுள்ள சந்தை (மண்டி)களில் இருந்து சரக்கு வாங்குவதைத் தவிர்க்கிறார்கள். இதைக்கூடப் புரிந்து கொள்ள மாநிலத்தை ஆளும் அகாலிதள அரசால் முடியவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு அருகிலுள்ள நகரங்களுக்குக் குடிபெயர்ந்து விட்டதாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகச் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இவர்களால் நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும், சுகாதார வசதிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது. விவசாயம் லாபகரமானதாக இல்லாவிட்டாலும் கையைக் கடிக்காமல் இருந்திருந்தால்கூட, இப்படியொரு நகர்ப்புறக் குடியேற்றம் ஏற்பட்டிருக்காது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி, தினந்தோறும் 2,500 பேர் விவசாயத்தைக் கைவிடுவதாகத் தெரிகிறது. இன்னொரு அறிக்கையின்படி, மாற்றுத் தொழில் அமையுமானால் 42% விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட விரும்புவதாகத் தெரிகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த கடந்த 70 ஆண்டுகளில், இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் மாற்றமும் ஏற்றமும் ஏற்பட்டிருக்கின்றன. அப்படி ஏற்படாமல் இருப்பவை விவசாயம், நெசவுத் தொழில் இரண்டும் மட்டுமே!
இந்தியப் பொருளாதாரம் சரியான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்விக்கு நமது ஆட்சியாளர்கள் அவர்களது மனசாட்சியிடம் கேட்டு விடை தெரிந்து கொள்ளட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com