இலக்கு மாற வேண்டும்!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அமைந்த எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையிலான அமைச்சரவை தாக்கல் செய்யும் முதலாவது நிதிநிலை அறிக்கை, அ.தி.மு.க.வின் முந்தைய அரசுகள் கடைப்பிடித்து வந்த

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அமைந்த எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையிலான அமைச்சரவை தாக்கல் செய்யும் முதலாவது நிதிநிலை அறிக்கை, அ.தி.மு.க.வின் முந்தைய அரசுகள் கடைப்பிடித்து வந்த சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே பாணியில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. வியாழக்கிழமை நிதியமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை புதிதாக எந்தவித வரிச்சுமையையும் மக்கள் மீது சுமத்தவில்லை என்பதும் எதிர்பாராத ஒன்றல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே வரியில்லாத நிதிநிலை அறிக்கைதான் தாக்கல் செய்யப்படுகிறது.
நிதிநிலை அறிக்கையின்படி, தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.1,59,363 கோடி. மொத்தச் செலவு ரூ.1,75,293 கோடி. நிதிப் பற்றாக்குறை ரூ.15,930 கோடி. மூலதனச் செலவுகள் ரூ.26,046 கோடியையும் சேர்த்தால் நிதிப் பற்றாக்குறை ரூ.41,976 கோடியாகிறது. இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.8%தான் என்பதால், 3% வரையறைக்குள்தான் இருக்கிறது என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் கடனான ரூ.21,815 கோடியையும் மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் பற்றாக்குறை ரூ.64,791 கோடியாகிறது. அப்போது இந்த ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 4.58% ஆக உயரும்.
தமிழகத்தின் நிதி நிலைமையைக் கடுமையாக பாதிப்பது அதன் கடன்சுமைதான். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் அளவுக்கதிகமான கடன் சுமையில் தத்தளிக்கின்றன என்பதுதான் உண்மை. இதற்கு முக்கியமான காரணம், பல மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களையும், இலவசத் திட்டங்களையும் மாநில அரசுகள் செயல்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதுதான். அமைச்சர் ஜெயக்குமாரின் நிதிநிலை அறிக்கையும் இந்தக் கட்டாயத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பதைத்தான் நிதிப் பற்றாக்குறையின் அளவும், கடன் சுமையின் அளவும் அதிகரித்திருப்பது காட்டுகிறது.
அடுத்த நிதியாண்டின் இறுதியில் நிகர நிலுவை கடன் தொகை ரூ.3,14,366 கோடியாக இருக்கும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 20.90%. கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் நிகர நிலுவை கடன் தொகை ரூ.2,52,431 கோடியாகக் கணக்கிடப்பட்டிருந்தது. அது மொத்த உற்பத்தி மதிப்பில் 18.43%. அடுத்த நிதியாண்டில் கடன் தொகை ரூ.61,935 கோடி அதிகரிக்கும். இப்படி அதிகரித்துக் கொண்டே போவது, மாநிலத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் நல்லதல்ல.
இந்த நிலையில் விரைவிலேயே மத்திய அரசு சரக்கு சேவை வரியை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதனால் உடனடி பாதிப்பு மாநிலங்களுக்கு இருக்காது என்றாலும், மாநிலங்கள் தங்களது இதர இனச் செலவினங்களுக்கான நிதியாதாரத்தை எப்படி பெறப் போகின்றன என்கிற கேள்வி விரைவிலேயே எழும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகள் இல்லாமல் இருந்தாலும், சரக்கு சேவை வரியால் பல அன்றாட உபயோகப் பொருள்களுக்கு வரி உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதைத் தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை இப்போதே யோசித்தாக வேண்டும். இல்லையென்றால் அதனால் ஏற்பட இருக்கும் பாதிப்பு தமிழக அரசைத்தான் பாதிக்குமே தவிர மத்திய அரசை அல்ல.
இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடத்தக்க அறிவிப்பு, உணவு தானிய உற்பத்தியை ஒருகோடி டன்னாக உயர்த்துவது என்கிற இலக்கை நிர்ணயித்திருப்பது. 35,000 ஏக்கர் கரும்பு சாகுபடியை நுண்ணீர் பாசனத்திற்கு மாற்றுவது, 57% ஆக இருக்கும் தமிழகத்தின் மானாவாரி சாகுபடியை மேம்படுத்த சிறப்பு திட்டத்தை அறிவித்திருப்பது. தோட்டக்கலை சாகுபடிப் பரப்பை உயர்த்துவது, பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம், என்று வேளாண்மைக்கு நிதிநிலை அறிக்கையில் அழுத்தம் தரப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் தரவேண்டிய தொகை நிலுவையில் இருக்கிறது. தமிழகத்திற்கு ரூ.6,000 கோடி அளவுக்கு நிலுவையில் வைத்திருக்கும் தொகையை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில அரசு பெற முடிந்தால், அது அரசின் நிதிச் சுமையை வெகுவாகக் குறைக்கும்.
இந்த நிதிநிலை அறிக்கையில் மிகவும் பாராட்ட வேண்டிய இன்னொரு அம்சம், புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு, ஒற்றைச்சாளர அணுகுமுறையை அமல்படுத்தும் திட்டம். தொழில் தொடங்க வருகின்ற பெரிய நிறுவனங்கள் பல்வேறு அனுமதிக்காகப் பல அலுவலகங்களில் ஏறி இறங்கி அலுத்துப்போய் அண்டை மாநிலங்களுக்குப் போய்விடும் நிலைமைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால், அதுதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.
விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி பயிர்க் கடன், மீனவர்களுக்கு பல சலுகைகள், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு உதவ வீட்டு வசதி நிதியம், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, 3.50 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 30 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று பல திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ரூ.26,932 கோடி பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.48 கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இலவசங்களும், மக்கள் நலத் திட்டங்களும் தவிர்க்க முடியாதவை. இன்றியமையாதவையும் கூட. அதேநேரத்தில், அரசின் செலவினங்களைக் குறைப்பதும், வருவாயை அதிகரிப்பதும்கூட ஆட்சியாளர்களின் கடமை. அந்த இலக்கையும் அரசு கவனத்தில் கொண்டாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com