புதிய பாதையில் நீதித்துறை!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கேஹர் பதவி ஏற்றதற்குப் பிறகு, நல்ல பல தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, மத்திய அரசுடன் கடுமையான மோதல் போக்கு ஏற்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. மோதலைக் கடைப்பிடிப்பதைவிட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் முக்கியம் என்கிற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அணுகுமுறை வரவேற்புக்குரியது.
எந்தவித விமர்சனத்துக்கோ கேள்விக்கோ அப்பாற்பட்டதாக இருப்பது நீதித்துறை என்கிற தோற்றம் நிலவுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு உள்படாமல் நீதித்துறை இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு கடந்த மாதம் அளித்திருக்கும் தீர்ப்பு, நீதித்துறையின் செயல்பாடுகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று சாளரத்தை மெல்லத் திறந்து விட்டிருக்கிறது.
"ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்' என்பது உலகளாவிய அளவில் வெளிப்படைத்தன்மை குறித்து ஆய்வு செய்யும் தன்னார்வ நிறுவனம். அதன் இந்தியக் கிளையும், தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஊடக ஆய்வு மையமும் (சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ்) இணைந்து 2006-இல் ஓர் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்டது.
கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றி மக்களின் கருத்து என்ன என்பது குறித்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பரவலாகக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு 2006-இல் அந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டது. கருத்துத் தெரிவித்தவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கருத்துத் தெரிவித்தவர்களில் 90% மக்கள், கீழமை நீதிமன்றங்களில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், நீதிபதிகளில் பெரும்
பாலானோர் பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்குவதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
அந்த அறிக்கை வெளிவந்தபோது, அது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஜம்மு - காஷ்மீரில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலுமுள்ள கீழமை நீதிமன்றங்களில் இந்த ஆய்வின் முடிவு எதிரொலித்தது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-இன் கீழ் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல், ஊடக ஆய்வு மையம் ஆகியவற்றின் தலைவர்களுக்குப் பிடியாணை பிறப்பித்தார் குற்றவியல் நீதிபதி. அப்போது உச்சநீதிமன்றம் அந்தப் பிடியாணைக்கும் விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.
இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் குற்றவியல் நீதிபதியின் உத்தரவை ஒழித்தழித்திருக்கிறது. கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிமன்ற அவமதிப்புக்கான பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் கிடையாது என்கிற அடிப்படையில் குற்றவியல் நீதிபதியின் உத்தரவு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் கருத்து என்பது, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-இல் பிரிவு 5-இன்படி தரப்பட்டிருக்கும் நியாயமான விமர்சனத்துக்கு உள்பட்டது என்று கூறியிருக்கிறது அந்த அமர்வு.
அதிகார வரம்பை மீறிய செயல் என்பது நிராகரித்ததற்குக் காரணமாகக் காட்டப்பட்டாலும், தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் உள்ளிட்ட மூன்று பேர் அமர்வு தெரிவித்திருக்கும் கருத்துகள்தான் சிந்தனைக்குரியவை; குறிப்பிடத்தக்கவை. கையூட்டு, முறைகேடு குறித்த மக்கள் கருத்தை வெளிப்படுத்தும் ஆய்வுகளும் அறிக்கைகளும் நீதிமன்ற அவமதிப்பின் வரம்பிற்குள் வராது என்றும், இதுபோன்ற ஆய்வுகள் நீதித்துறையில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வாய்ப்பளிக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நீதித்துறை குறித்த மென்மையான விமர்சனங்களைக்கூட ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம், இந்த வழக்கில் தெரிவித்திருக்கும் கருத்துகள், தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், மாற்றங்களை ஏற்படுத்தவும் நீதித்துறை தயாராகி விட்டிருப்பதைக் காட்டுகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவை ரத்து செய்து தனது அதிகார வரம்பைச் சுருக்கிக் கொண்டதைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பு வந்திருப்பது வரவேற்புக்குரியது.
நீதிமன்ற அவமதிப்புச் சட்டப் பிரிவு என்பதை மக்களின் கருத்துகளிலிருந்தும் விமர்சனங்களிலிருந்தும் அகற்றி நிறுத்திக் கொள்ள நீதித்துறை பயன்படுத்தி வந்தது. அதன்மூலம்தான் தமது புனிதத்தனத்தையும், அப்பழுக்கற்ற பிம்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் அதற்குக் காரணம். நீதித்துறை அரசின் நிர்வாக முறைகேடுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்துத் தலையிடும் நிலையில், நீதிபதிகளும் விமர்சன வளையத்துக்குள் வருவதுதான் நியாயமாக இருக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் மீதே தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. கீழமை நீதிமன்றங்களில் ஊழல் என்பது ரகசியமொன்றுமல்ல என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.என். கரேயும், 2010-இல் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 16 பேர் ஊழல்வாதிகள் என்று சாந்தி பூஷணும் வெளிப்படையாகவே விமர்சித்திருக்கிறார்கள். 2013-இல், தலைமை நீதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னால் நீதிபதி பி. சதாசிவம் நீதித்துறை ஊழலுக்கு அப்பாற்பட்டதல்ல என்று தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு என்பது காலனிய ஆட்சியின் அடக்குமுறைச் சட்டங்களில் ஒன்று. அதை அகற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. நீதித்துறையில் வெளிப்படைத் தன்மை ஏற்படுவதுதான், தவறுகள் அந்தத் துறையில் நடக்காமல் காப்பாற்றப்படுவதற்கான வழியே தவிர, விமர்சனங்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுவதல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com