துறவியின் தலைமையில்...

உத்தரப் பிரதேச முதல்வராக யோகி

உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி ஏற்றிருப்பது யாரும் எதிர்பாராத திருப்பம். சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாநிலம் முழுவதும் சூறாவளியாகச் சுற்றி வந்து பிரசாரத்தில் ஈடுபட்டவர் யோகி ஆதித்யநாத். மாநிலம் முழுவதும் அவருக்குப் பரவலாக ஆதரவு இருக்கிறது என்பதும், கட்சியில் அவரது செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது என்பதிலும்கூட யாருக்கும் சந்தேகமில்லை. ஆனாலும்கூட, அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது எவரும் கனவிலும்கூட நினைத்துப் பார்க்காத திருப்பம்.
கடந்த 1998 தேர்தலில் தொடங்கி இதுவரை தொடர்ந்து ஐந்து முறை கோரக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். அஜய்சிங் பிஷ்ட் என்கிற பூர்வாசிரமப் பெயரைக் கொண்ட யோகி ஆதித்யநாத், 1998-இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது வயது வெறும் 26. பனிரெண்டாவது மக்களவையில் மிகவும் வயதில் குறைந்த உறுப்பினராக இருந்தவர் அவர். இப்போது 44 வயதில் உத்தரப்பிரதேச முதல்வராகி இருக்கிறார். இவரது வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் தீவிரமான இந்து மதப் பற்று என்பதில் சந்தேகமே இல்லை.
கர்வால் ராஜபுத்திரக் குடும்பத்தில் 1972 ஜூன் மாதம் 5-ஆம் தேதி பிறந்த அஜய் சிங் பிஷ்ட் தனது பட்டப்படிப்பை முடித்திருந்த நேரம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டுத் தனது வீட்டிலிருந்து வெளியேறிய அஜய் சிங் பிஷ்ட், கோரக்பூரிலுள்ள கோரக்நாத் மடத்தின் தலைவர் மகந்த் அவைத்யநாத்திடம் அடைக்கலமானார். அவரது சீடராகத் துறவறம் மேற்கொண்ட அஜய் சிங் பிஷ்டுக்கு மகந்த் அவைத்யநாத், யோகி ஆதித்யநாத் என்று தீக்ஷா நாமம் அளித்துத் தனது ஆன்மிக வாரிசாக அறிவித்தார்.
மகந்த் அவைத்யநாத் ராமஜென்ம பூமி போராட்டத்தில் முன்னிலை வகித்தவர். ஐந்து முறை மணிராம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தும், 1970-இல் கோரக்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்தும் சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1989-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்துமகா சபையின் உறுப்பினராகவும், 1991, 1996 தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகவும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1994-இல் தனது மரணத்திற்கு முன்பே யோகி ஆதித்யநாத்தை கோரக்நாத் மடத்தின் தலைவராக மகந்த் அவைத்யநாத் அறிவித்து விட்டிருந்தார்.
1998 முதல் தனது ஆன்மிக குரு விட்டுவிட்ட இடத்தை மக்களவையிலும், மக்கள் மன்றத்திலும் நிரப்பி வருபவர் யோகி ஆதித்யநாத். எல்லா தேர்தல்களிலும் யோகி ஆதித்யநாத்தே பா.ஜ.க.வின் நட்சத்திரப் பிரசாரகர். இந்து மதம் குறித்த அவரது தீவிரவாதக் கருத்துகளுக்கு உத்தரப் பிரதேசத்தில் ஜாதி அடையாளங்களைத் தாண்டி ஒரு மிகப்பெரிய இளைஞர் கூட்டத்தின் ஆதரவு உண்டு. இன்னும் சொல்லப்போனால், உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலில்தான் கட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இப்போது பா.ஜ.க. தலைமையால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் யோகி ஆதித்யநாத்துக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருந்ததில்லை. ராமர் கோயில் பிரச்னையிலிருந்து பல்வேறு இந்துமதப் பாதுகாப்புக் கருத்துகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் பா.ஜ.க.வின் மிதவாதத்தை வன்மையாகக் கண்டிப்பவர் யோகி ஆதித்யநாத். தனது தலைமையில் அமைந்த "இந்து யுவ வாஹினி' என்கிற அமைப்பின் மூலம் தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருப்பவர் அவர்.
பா.ஜ.க. தலைமை தனது கருத்துகளைப் புறக்கணிக்கும்போது, கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிற்க வைத்துக் கட்சியைத் தோல்வி அடையச் செய்த சம்பவங்கள் பல உண்டு. 2007 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக 70 வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அவர் விடுத்த மிரட்டலுக்குப் பணிந்து அவருடன் கட்சி சமரசம் செய்து கொண்டது.
403 பேர் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் 312 உறுப்பினர்கள் பலம் இருந்தும், மக்களவை உறுப்பினரான யோகி ஆதித்யநாத்தை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்திருக்கத்தான் வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இப்படி மக்களவை உறுப்பினர்கள் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது புதிதல்ல என்றாலும், பா.ஜ.க. தலைமை, யோகி ஆதித்யநாத்தை முதல்வராகத் தேர்ந்தெடுத்ததற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. உறுப்பினர்களில் கணிசமானவர்கள் அவர் முதல்வராக வர வேண்டும் என்று விரும்பியதாகத் தெரிகிறது.
இந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்துத்திருமணம் செய்து கொள்ளும் "லவ் ஜிஹாத்' எதிர்ப்பு, பசுவதை எதிர்ப்பு, கட்டாய மத மாற்றத்திற்கு எதிர்ப்பு என்று தீவிரவாத இந்துத்துவக் கொள்கைகளை வலியுறுத்தும் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் என்கிற பொறுப்பில் அமர்த்தி விட்டால், அவர் தனது
கவனத்தை நிர்வாகத்தின் பக்கம் திருப்புவார் என்று பிரதமர் மோடியும் கட்சித் தலைவர் அமித் ஷாவும் எதிர்பார்க்கிறார்களா, இல்லை, அவர் தனது மதத் தீவிரவாதத்தின் மூலம் இந்து வாக்காளர்களை ஒருங்கிணைத்து 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியை உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறார்களா என்று தெரியவில்லை.
துறவியான யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவிக்காகத் தனது கொள்கைகளைத் துறப்பார் என்று தோன்றவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆட்சியாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி அமைந்தால், அதுதான் இந்து மதத்திற்குப் பெருமை சேர்க்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com