ஒன்றுமில்லாததற்கு இதுவாவது...

பிரிவினைக்குப் பிறகு எழுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போதுதான் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பும் உரிமைகளும் அளிப்பது குறித்துச்

பிரிவினைக்குப் பிறகு எழுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போதுதான் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பும் உரிமைகளும் அளிப்பது குறித்துச்
சிந்தனை எழுந்திருக்கிறது. சிறுபான்மையினரான இந்துக்களின் திருமணத்திற்கான சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று சொன்னால் யாரும் வியப்படையத் தேவையில்லை.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் இந்து திருமணச் சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அந்த மசோதா மேலவையில் விவாதிக்கப்பட்டபோது, அதில் சில திருத்தங்கள் செய்ய பரிந்துரைக்கப்
பட்டது. அந்தத் திருத்தங்களையும் உள்ளடக்கி இப்போது இந்து திருமணச் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மக்களவையின் ஒப்புதலுடன் சட்டமாகி இருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அதிபர் மம்னூன்
ஹுசைனால் கையொப்பமிடப்பட்டு சட்டமாகி இருக்கும் இந்து திருமணச் சட்டம் பாகிஸ்தானில் நான்கு மாநிலங்களுக்கு மட்டும்தான் பொருந்தும். சிந்து மாநிலம் அதற்கென்று தனியாக இந்து திருமணச் சட்டம் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த ஏறத்தாழ 47 லட்சம் இந்துக்களும், சீக்கியர்களும் பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்துவிட்டனர். எஞ்சியிருந்தவர்கள் நாற்பது லட்சம் இந்துக்கள் மட்டுமே. இவர்களில்கூட பலர் வேறு வழியில்லாமல் மதம் மாறி இஸ்லாமியராகி விட்டனர். 1998 மக்கள்தொகைக் கணக்கின்படி பாகிஸ்தானில் இந்துக்களாகத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 27 லட்சம்தான்.
இங்கே ஆங்கிலோ இந்தியர்கள் நியமன உறுப்பினர்களாக இருப்பதுபோல, 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 7 இந்துக்கள் நியமன உறுப்பினர்களாக இருக்
கிறார்கள். பாகிஸ்தானின் மக்கள்தொகையில் 4% பேர் மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்கள். இவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் 5% ஒதுக்கீடு தரப்படுகிறது.
இந்துப் பெண்கள் கடத்தப்படுவது, கட்டாய மதமாற்றம், திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவது போன்றவை முந்தைய பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியில் அளவுக்கு அதிகமாக அதிகரித்தபோதுதான், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை இந்துக்களின் பிரச்னைகள் வெளியுலகத்திற்கு தெரியத் தொடங்கியது. மேலைநாட்டு ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் வலம் வந்தபோதும்கூட, இந்திய அரசு பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவிக்கவோ, பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை இந்துக்களின் நலனைப் பாதுகாக்க சர்வதேச அமைப்புகளின் மூலம் குரல் எழுப்பவோ இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டால், அந்தத் திருமணங்களுக்கு பாகிஸ்தானில் சட்டரீதியாக அங்கீகாரம் கிடையாது. அப்படித் திருமணம் செய்துகொண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமை மறுக்கப்பட்டு வந்தது. இந்து முறைப்படியான திருமணத்திற்கு சட்டப்படியான அங்கீகாரம் இல்லை என்பதால், அதன்மூலம் பிறக்கும் குழந்தைகளுக்குக் கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு போன்றவை பெறுவதற்குக்கூட முடியாத சூழல் நிலவுகிறது.
இந்துப் பெண்களின் நிலைமைதான் அதைவிட மோசம். கணவர் இறந்து விதவையானால், பாகிஸ்தானில் வாழும் இந்துப் பெண்களின் நிலைமை கொடூரமானது. அவர்களது திருமணத்திற்குச் சட்டப்படியான அங்கீகாரம் இல்லை என்பதால் கணவரின் சொத்துகளையும் உடமைகளையும் உரிமை கோர முடியாத நிலையில் தவிக்க வேண்டிய அவலம். கணவன் விட்டுச் சென்ற வீடு, நிலபுலன்களை அனுபவிக்கலாமே தவிர, விற்கவோ, இன்னொருவருக்குப் பதிவு செய்து கொடுக்கவோ முடியாது. இதற்கு பயந்தே பலர் முஸ்லிமாக மாறித் தங்களது திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் பெற முற்பட்டனர்.
இப்போது பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கும் இந்து திருமணச் சட்டமானது முழுப் பாதுகாப்பு அளிக்கிறதா என்றால் இல்லை. அதில் பாகிஸ்தான் மேலவையால் புகுத்தப்பட்டிருக்கும் சில திருத்தங்கள், சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்கின்றன. கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவர் மதம் மாறினால், அவர்களது திருமணமே செல்லாததாகி விடும் என்கிறது ஒரு திருத்தம். தீவிரவாத இஸ்லாமியக் குழுவின் அழுத்தம் காரணமாக நுழைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டப் பிரிவால், கட்டாய மதமாற்ற அச்சுறுத்தல் அகற்றப்படவில்லை.
பெரும்பாலும் 12 முதல் 18 வயது வரையிலான இந்துப் பெண்களைத்தான் கடத்திக் கொண்டுபோய் கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இதைத் தடுப்பதற்காகத்தான், இந்து திருமணச் சட்டத்தில் 18 வயது நிரம்பாத இந்துப் பெண்கள் திருமணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடத்திக் கொண்டுபோகும் 18 வயதுக்கு உள்பட்ட இந்துச் சிறுமியரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றால், அவர்களை மதம் மாற்றுவதில் யாரும் அக்கறை காட்டமாட்டார்கள் என்பது அரசு தரப்பின் நம்பிக்கை.
மத அடிப்படைவாதத்தை அங்கீகரிக்கும் இஸ்லாமிய நாடு என்கிற நிலைமையை மாற்றி பாகிஸ்தானுக்கு மதச்சார்பற்ற தோற்றத்தை ஏற்படுத்தும் பிரதமர் நவாஸ் ஷெரீபின் முயற்சிகளில் இந்தச் சட்ட மசோதாவும் ஒன்று. ஒவ்வொரு முறை இந்துத் திருமணச் சட்டம் குறித்த விவாதம் எழும்போதும், ஏதாவது காரணத்தால் அது தள்ளிப் போடப்பட்டு வந்தது. இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு
களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முற்பட்டிருக்கிறார் என்பதை அனை
வரும் உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com