விலகியது பனிப்போர்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கேஹர் பதவி ஏற்றது முதல் நீண்ட நாள்களாக முடிவு எட்டப்படாமல் இருக்கும் பிரச்னைகளுக்கு எல்லாம் சுமுகமாகத் தீர்வு காணப்படுகின்றன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கேஹர் பதவி ஏற்றது முதல் நீண்ட நாள்களாக முடிவு எட்டப்படாமல் இருக்கும் பிரச்னைகளுக்கு எல்லாம் சுமுகமாகத் தீர்வு காணப்படுகின்றன. மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்த நீதிபதிகள் நியமனப் பிரச்னைக்கு விரைவிலேயே முடிவு எட்டப்படும் என்பது மகிழ்ச்சி அளிக்கும் திருப்பம். இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் கடந்த ஓராண்டாக தடைபட்டு நிற்பது இப்போது அகலப் போகிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணையத்தை நிராகரித்த அமர்வில் இருந்தவர் இப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர். அதுமட்டுமல்ல, தற்போதைய 'கொலீஜியம்' முறையில் நியமனங்களைத் தொடர ஏதுவாக நடைமுறை குறிப்பாணை ஒன்றைத் தயாரித்து அளிக்கும்படி மத்திய அரசுக்கு பணித்தவரும் அவர்தான்.
நீதிபதிகள் நியமன நடைமுறை குறிப்பாணை குறித்த அரசின் கருத்தை நீதித்துறை ஏற்க மறுத்தது. இப்போதைய முறைப்படி உச்சநீதிமன்றம் அமைக்கும் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் என்கிற குழு பரிந்துரைக்கும் பெயர்களை அரசு அங்கீகரித்து நீதிபதிகளாக நியமனம் செய்ய வேண்டும். நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்ளும் இந்த நடைமுறை 1993-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1998-இல் அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன்தான், வெளிப்படைத்தன்மையே இல்லாமல் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் இந்த நடைமுறைக்கு எதிராக முதலில் கருத்துத் தெரிவித்தவர்.
இது குறித்துத் தொடர்ந்து விமர்சனங்களும், நீதிபதிகளை நியமிப்பதற்கான ஆணையம் அமைக்கும் முயற்சியும் தொடர்ந்ததே தவிர, எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. நரேந்திர மோடி அரசு பதவியேற்றபோது, முந்தைய மன்மோகன் சிங் அரசு முன்மொழிந்த நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை சட்டமாக்க முற்பட்டது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் ஒப்புதலுடன் நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டது என்றாலும், உச்சநீதிமன்றம் அந்தச் சட்டத்தை நிராகரித்தது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கப்படுவதை நிராகரித்த உச்சநீதிமன்றம், நீதிபதிகள் நியமனம் குறித்த நடைமுறை குறிப்பாணை ஒன்றைத் தயாரித்து ஒப்புதலுக்குத் தரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய சட்டத் துறை சமர்ப்பித்த நடைமுறை குறிப்பேட்டில் இருந்த இரண்டு நிபந்தனைகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் நிராகரித்தது.
அந்த நடைமுறை குறிப்பாணையின்படி, தேசியப் பாதுகாப்பு கருதி நீதிபதி நியமனத்திற்காக கொலீஜியம் பரிந்துரைக்கும் நபரின் பெயரை நிராகரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தரப்பட்டது. அதேபோல, உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் குறித்த தகவல்களை சேகரித்துப் பாதுகாக்கவும், நியமனம் குறித்து கொலீஜியத்துக்கு உதவவும் செயலகங்கள் அமைப்பது என்கிற மத்திய அரசின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தக் கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த ஓராண்டாக, நீதிபதிகள் நியமனம் நடைபெறாமல் வழக்குகள் தேங்கத் தொடங்கின.
2015 அக்டோபர் மாதம் நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை நிராகரித்தது முதல் தொடர்ந்த கருத்து மோதல் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே. செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசு வலியுறுத்திய தேசியப் பாதுகாப்புப் பிரிவை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அது குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.
இதனால் நீதிபதியாக நியமிப்பதற்காக கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயரை மத்திய அரசு நிராகரிக்க முடியும். அதற்கான காரணத்தை மத்திய அரசு எழுத்து மூலம் கொலீஜியத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும், அவ்வளவே. உச்சநீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பனிப்போர் அகன்றுவிட்ட நிலையில் இனிமேல் நீதிபதிகள் நியமனம் முடுக்கிவிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
உயர்நீதிமன்றங்கள், அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் 60%-க்கும் குறைவானவர்களுடன்தான் செயல்படுகின்றன. பல உயர்நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லாததால் வழக்குமன்ற அறைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி, 24 உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,079 நீதிபதிகளின் எண்ணிக்கைக்கு பதில் 615 பேர் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. உயர்நீதிமன்றங்களில் 38.7 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்றால், கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 2.7 கோடியைத் தாண்டும்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் 70% வழக்குகள் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரானவை அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்டவை. அதாவது நிர்வாக பாதிப்புகளுக்கு எதிராக நீதிகேட்டு பொதுமக்கள் அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகள்.
தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் எடுத்திருக்கும் முடிவால், நீதிபதிகள் நியமனம் முடுக்கிவிடப்பட்டு தேங்கிக் கிடக்கும் வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்பதே மிகப்பெரிய ஆறுதல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com