பங்கீடும் பிரச்னையும்!

கடந்த வாரம் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளின் அதிகாரிகளும், நிபுணர்களும் லாகூரில் சந்தித்து சிந்து நதிநீர்ப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது வரவேற்புக்குரிய செயல்பாடு.

கடந்த வாரம் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளின் அதிகாரிகளும், நிபுணர்களும் லாகூரில் சந்தித்து சிந்து நதிநீர்ப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது வரவேற்புக்குரிய செயல்பாடு. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் எத்தனை எத்தனையோ நெருக்கடிகள் ஏற்பட்டும்கூட, சிந்து நதிநீர்ப் பங்கீடு குறித்துத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதும், இரு நாடுகளுக்கு இடையே நதிநீர்ப் பங்கீடு குறித்தான பிரச்னைகளை விவாதித்துத் தீர்த்துக் கொள்வதும் முன்மாதிரியான செயல்பாடுகளாக சர்வதேச அளவில் பாராட்டப்படுகிறது.
1960-இல் சிந்து நதிநீர்ப் பங்கீட்டுக்கான நிரந்தரக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 56 ஆண்டுகளாக எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆண்டுதோறும் மாறி மாறி இந்தக் குழு கூடி விவாதித்து, அதன் மூலம் சுமுகமான முடிவுகள் எட்டப்படுகின்றன. இதுவரை 113 முறை சந்தித்திருக்கும் இந்தக் குழுவில் நதிநீர்ப் பங்கீடு குறித்த வல்லுநர்கள், சிந்து நதி, அதன் கிளை நதிகள் உள்ளிட்ட ஆறு நதிகளில் வரும் நீரைப் பயன்படுத்துவதை முறைப்படுத்தியிருக்கிறார்கள்.
சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி கீழ்ப் பகுதியில் பாயும் பீஸ், ரவி, சட்லஜ் ஆகிய நதிகளின் முழு உரிமையும் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேற்பகுதியில் பாயும் சிந்து, செனாப், ஜீலம் ஆகிய மூன்று நதிகளும் பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நதிகளின் நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்கும், சில குறிப்பிட்ட காரணங்களுக்கு உபயோகித்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நதிநீர்ப் பங்கீட்டைக் கண்காணிக்கவும், பிரச்னைகள் ஏற்பட்டால் கலந்துபேசித் தீர்வு காணவும் இந்தியாவும் பாகிஸ்தானும் நிரந்தரக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பயங்கரவாதச் சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவது இயலாது என்று இந்தியத் தரப்பு அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி சிந்து நதிநீர்ப் பங்கீடு குறித்துக் கருத்துத் தெரிவித்தபோது, இந்த ஒப்பந்தம் முடங்கிவிடும் என்ற தோற்றம் ஏற்பட்டது. 'ரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் ஓட முடியாது' என்கிற கருத்தை சிந்து நதிநீர் ஆய்வு குறித்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார். அதே கருத்தை சில பொதுக்கூட்டங்களிலும் பேரணிகளிலும்கூடப் பிரதமர் வெளிப்படுத்தத் தவறவில்லை. 'ஒரு துளித் தண்ணீர்கூட பாகிஸ்தானுக்கு வீணாகத் தரப்படமாட்டாது' என்கிற பிரதமரின் அறிவிப்பு நிலைமையை மேலும் பரபரப்பாக்கியது.
பதான்கோட், உரி தாக்குதல்களைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அங்கே இருந்த பயங்கரவாத முகாம்களின் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியதும், பாகிஸ்தானில் நடந்த 'சார்க்' மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததும், இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு துண்டிக்கப்படும் என்கிற தோற்றத்தையும் அதனால் சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் ரத்தாகும் என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தின.
இந்தியாவின் அச்சுறுத்தல் காரணமாகவோ அல்லது சர்வதேச நிர்ப்பந்தங்களின் காரணமாகவோ, எல்லைப்புறத்தில் அமைதி ஏற்பட்டிருக்கிறது. இரண்டு தரப்பிலிருந்தும் அதிகாரிகள் கூடி விவாதிப்பது மீண்டும் தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தானின் பிரசித்தி பெற்ற ஒருவரை 'சார்க்' அமைப்பின் செயலராக ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பதற்கு இந்தியா ஒப்புதல் வழங்கிஇறுக்கத்தை சற்று தளர்த்த முற்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு வல்லுநர்களும், சிந்து நதிநீர்ப் பங்கீடு குறித்த வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான கொந்தளிப்பு காணப்பட்டாலும் வல்லுநர்கள் குழுக் கூட்டத்தில் நிதானமும், விவேகமும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானின் ஜிகாதிகளும் விவசாய அமைப்புகளும், பாகிஸ்தானின் பாசன அமைப்பை இந்தியா தகர்க்க முற்படுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். செனாப் நதியில் 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கான பகல் தல், மியாரில் 120 மெகாவாட், கீழ் கல்நாயில் 43 மெகாவாட் நீர்மின் நிலையங்கள் நிறுவப்படுவதை அவர்கள் எதிர்க்கிறார்கள். இந்த நீர்மின் நிலையங்களால் பாகிஸ்தானுக்குத் தரப்படும் நீரின் அளவு குறையப்போவதில்லை என்பது இந்தியாவின் வாதம்.
இந்தியா சிந்து நதி பாயும் பகுதிகளில் செயல்படுத்த இருக்கும் புதிய திட்டங்கள் பாகிஸ்தானில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் முக்கியமானது 1,856 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான சாவல்கோட் அணை. இதன்மூலம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் மின்பற்றாக்குறை முழுமையாகத் தீர்க்கப்படும். அதேபோல துல்புல் திட்டத்தின் மூலம் ஸ்ரீநகருக்கும் பாரமுல்லாவுக்கும் இடையே நதிநீர்ப் போக்குவரத்தைத் துரிதப்படுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானுக்குத் தரப்படும் நீரின் அளவு இம்மியும் குறையாது என்றாலும், தங்களுக்கு உரிமையுள்ள தண்ணீரை பயன்படுத்தி இந்தியா தனது பகுதிகளை வளப்படுத்திக் கொள்வதை பாகிஸ்தானில் உள்ள ஜிகாதிகள் விரும்பவில்லை.
தனது உரிமைகள் எதையும் விட்டுக்கொடுக்காமலும், அதே நேரத்தில் பாகிஸ்தானின் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது இந்தியாவின் கடமை. இந்தியா தனது மின்சக்தித் தேவைக்கு உருவாக்கும் அணைகள் பாகிஸ்தானின் தண்ணீர்த் தேவையையும் பாதுகாக்கும் என்பதை ஜிகாதிகளுக்கு உணர்த்த வேண்டியது பாகிஸ்தான் அரசின் கடமை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com