வளர்ச்சியின் மறுபக்கம்!

வளர்ச்சி என்று கருதும் ஒவ்வொன்றிற்கும் பின்னால்

வளர்ச்சி என்று கருதும் ஒவ்வொன்றிற்கும் பின்னால் நிரந்தர பாதிப்புகள் சில இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நிகழ்கால நன்மைகளுக்காகவும், வசதிகளுக்காகவும் வருங்காலத்தை மறந்து செயல்படும்போது, அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். இயற்கையை எதிர்த்தும், மதிக்காமலும் மனித இனம் செயல்படுவதால்தான் ஆழிப்பேரலை, வெள்ளம், வறட்சி என்று பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
தொலைத்தொடர்பு என்பது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், உலகத்தையே விரல் நுனிக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. செல்லிடப்பேசி என்பது பேசிக் கொள்வதற்கு மட்டுமல்லாமல், கணினி, தொலைக்காட்சி, வணிகம் என்று அனைத்துக்குமான கையடக்கக் கருவியாக மாறிவிட்டிருக்கிறது. இதனால் அடையும் பயன்கள் ஏராளம் என்றால், இன்னொருபுறம் அதிகரித்த செல்லிடப்பேசிகளின் பயன்பாடு பல சுற்றுச்சூழல் பிரச்னைகளையும், உடல்நலத்துக்குத் தீங்குகளையும் ஏற்படுத்துகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
செல்லிடப்பேசிகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் மூளையை பாதிக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செல்லிடப்பேசியைச் சட்டைப் பையில் வைத்திருப்பது இதயத்தையும், இடுப்பில் வைத்திருப்பது சிறுநீரகத்தையும் பாதிப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதற்காக செல்லிடப்பேசி பயன்பாட்டையே நிறுத்திவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. அது சாத்தியமுமல்ல. பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது, அவ்வளவே!
127 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையுள்ள இந்தியாவில், செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகம். அதில் மிகக்குறைந்த அளவு எடுத்துக் கொண்டாலும், நாம் செல்லிடப்பேசி பயன்பாட்டுக்காக செலவிடும் தொகை நாளொன்றுக்கு சுமார் ரூ.500 கோடி. தொலைத்தொடர்புத் துறை அடைந்திருக்கும் அபார வளர்ச்சியும், இதனால் பொருளாதாரம் அடைந்திருக்கும் பயனும் அளப்பரியது. இந்த அசுர வளர்ச்சிக்கு இன்னொரு பக்கமும் உண்டு.
இந்தியாவில் ஏறத்தாழ 12 லட்சம் செல்லிடப்பேசி கோபுரங்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை நாளும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. சாதாரண செல்லிடப்பேசி போய், அறிதிறன் பேசிகள் (ஸ்மார்ட் போன்) வந்தபிறகு, இணைய வசதியும் இணைக்கப்பட்டு விட்டதால், செல்லிடப்பேசி கோபுரங்கள் பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இங்குதான் பிரச்னை வருகிறது.
குவாலியரைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹரீஷ்சந்த் திவாரி என்பவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டு மாடியில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டிருக்கும் செல்லிடப்பேசி கோபுரத்தின் கதிரியக்கத்தால்தான் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹரீஷ்சந்த் திவாரியின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி, உடனடியாக அந்த செல்லிடப்பேசி கோபுரத்தை செயலிழக்கச் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இந்தத் தீர்ப்பின் பின்னணியில், உடனடியாக இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான செல்லிடப்பேசி கோபுரங்களும் ஆய்வு செய்யப்பட்டு அளவுக்கு அதிகமாக கதிரியக்கம் இருந்தால் அவை செய
லிழக்கச் செய்யப்பட வேண்டும். 2011-ஆம் ஆண்டிலேயே உலக சுகாதார நிறுவனம், செல்லிடப்பேசியிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படக் காரணியாக இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது. இன்னொருபுறம் செல்லிடப்பேசி அதிகரித்திருப்பதற்கும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பில்லை என்று வாதிடுகிறார்கள் தொலைத்தொடர்புத் துறையினர்.
சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்டிருப்பதைவிட அதிகமாக, இந்தியாவின் செல்லிடப்பேசி கோபுரங்களில் கதிரியக்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குரலெழுப்பி இருக்கிறார்கள். அதேபோல, சிட்டுக்குருவிகள் செல்லிடப்பேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு அழிந்து போகின்றன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பின்னணியில், தொலைத்தொடர்புத் துறை செல்லிடப்பேசி கோபுரங்களை சோதனையிடுவதிலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான கதிர்வீச்சு காணப்பட்டால், கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதிலும் முனைப்புக் காட்டியாக வேண்டும். அது அரசு பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்கள், எதுவாக இருந்தாலும் பொதுமக்களுக்கும், பறவை இனங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் அளவிலான கதிர்வீச்சு இருக்குமானால் அதை அனுமதிக்கக் கூடாது.
மக்கள் ஓரளவு விழிப்புணர்வு பெற்று வருவதால்தான், பலரும் தங்களது வீட்டிலோ அதன் அருகிலோ செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைவதைத் தடுக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள். குறைவான செல்லிடப்பேசி கோபுரங்களும், அதில் அதிக அளவிலான இணைப்புகளும்தான் அழைப்பு முறிவுக்குக் காரணம். சட்டப்
படி செல்லிடப்பேசி கோபுரங்கள் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், இந்தப் பிரச்னை மேலும் அதிகரிக்கும். அது தவிர்க்க
முடியாதது.
வளர்ச்சி தேவைதான். அதேநேரம் அது மக்களின் நல்வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com