நுட்பம் விளங்கவில்லை!

இந்திய தொழில்நுட்பக் கல்வி மையங்களில் (ஐ.ஐ.டி.) பெண்களுக்கான ஒதுக்கீட்டை இப்போது இருப்பதைவிட 4% அதிகரிப்பது என்கிற அந்த நிறுவன ஆட்சிக் குழு எடுத்திருக்கும் முடிவை வரவேற்றாக வேண்டும்.

இந்திய தொழில்நுட்பக் கல்வி மையங்களில் (ஐ.ஐ.டி.) பெண்களுக்கான ஒதுக்கீட்டை இப்போது இருப்பதைவிட 4% அதிகரிப்பது என்கிற அந்த நிறுவன ஆட்சிக் குழு எடுத்திருக்கும் முடிவை வரவேற்றாக வேண்டும். தற்போது பெண்களுக்கு ஒதுக்கப்படும் 10% இடங்கள் 2018-19 கல்வியாண்டிலிருந்து 14% ஆக உயர்த்தப்பட இருக்கிறது. படிப்படியாக 2026-ஆம் ஆண்டுக்குள், அதாவது அடுத்த பத்தாண்டுகளில் 20% இடங்களைப் பெண்களுக்காக ஒதுக்குவது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
2014-இல் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையங்களில் சேர்ந்த பெண்கள் 8.8% என்றால் 2015-இல் அதுவே 9% ஆக அதிகரித்தது. ஆனால் 2016-இல் 8% ஆகப் பெண்களின் விகிதம் குறைந்தது குறித்து, உடனடியாக இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையத்தின் நிர்வாகக் குழுவின் கவனம் ஈர்க்கப்பட்டது. உடனடியாக இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையத்தின் மாணவர் தேர்வுக் குழு பேராசிரியர் திமோத்தி கோன்சால்வ்ஸ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து மாணவியர் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய முற்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படிதான் இப்போது பெண்களுக்கான இட ஒதுக்கீடு 14% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கு 14% இடங்களை ஒதுக்குவது என்பதும் இந்த விகிதத்தை 20% என உயர்த்துவது என்பதும் இடஒதுக்கீடு என்று எடுத்துக் கொள்ளப்படக் கூடாது. இப்போது இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையங்களில் இருக்கும் மொத்த இடங்கள் அதிகரிக்கப்பட்டு அந்த அதிகரித்த இடங்கள் பெண்களுக்காகத் தரப்பட இருக்கிறது என்பதால், அது ஒதுக்கீடாகக் கருதப்படக் கூடாது. அது மட்டுமல்ல, மகளிருக்கான இடங்கள் ஏதாவது காரணத்திற்காக நிரப்பப்படாமல் இருந்தால், அதை மகளிரால் மட்டுமே நிரப்பிட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வியின் தரம் சர்வதேச அளவில் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகவும், வருங்காலத்தில் தொடங்கப்படும் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அடிப்படைக் கல்வி முறையை வகுப்பதற்காகவும் 1961-இல் அன்றைய ஜவாஹர்லால் நேரு அரசால் இந்தியத் தொழில்நுட்பச் சட்டம் இயற்றப்பட்டது. அதனடிப்படையில் உருவானவைதான் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையங்களும், தேசிய தொழில்நுட்பக் கல்வி மையங்களும் (என்.ஐ.டி.). அந்தச் சட்டம் இந்தத் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களின் அதிகாரங்கள், கடமைகள், நிர்வாக அமைப்பு ஆகிய அனைத்தையும் வரையறுக்கிறது.
இந்தியாவில் 23 இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி பொறியியல் உயர்கல்வி வழங்கி வருகின்றன. ஒவ்வோர் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையமும் தன்னாட்சி பெற்றது என்றாலும்கூட, இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையங்களின் ஆட்சிமன்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகின்றன. மத்திய மனித வளத் துறை அமைச்சர்தான் ஆட்சிமன்றக் குழுவின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர். 2017 நிலவரப்படி, எல்லா இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையங்களையும் சேர்த்து இருக்கும் மொத்த இடங்கள் 11,032.
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையங்களில் கல்வி பெற, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. பண்டித ஜவாஹர்லால் நேருவின் கனவுத் திட்டமான இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையம் முதலில் கரக்பூரில் தொடங்கப்பட்டு, இப்போது தேசிய அளவில் அநேகமாக எல்லா முக்கியமான மாநிலங்களிலும் நிறுவப்பட்டிருக்கின்றன.
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையங்களில் இடம் பிடிப்பது என்பதுதான் பொறியியல் படிக்க விழையும் அத்தனை மாணவ மாணவியரின் விருப்பமாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 13 லட்சம் மாணவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையங்களில் படித்துப் பட்டம் பெற நுழைவுத் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் சுமார் 11,000 பேர் மட்டுமே தகுதி பெறுகிறார்கள். இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால், இந்தியாவில் மாணவர்களுக்கு சர்வதேசத் தரத்திலான உயர்கல்வி வழங்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் தொடங்கி நடத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்துத் தேறும் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்று விடுகிறார்கள் என்பதுதான். இந்தியாவுக்குத் தங்களது திறமையை பயன்படுத்த முற்படுவோருக்குப் போதிய அங்கீகாரமும் ஆதரவும் அளிக்கப்படுவதில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.
17 தொழில்நுட்பக் கல்வி மையங்கள் இருந்த இடத்தில், கடந்த ஆண்டு முதல் 23 தொழில்நுட்பக் கல்வி மையங்கள் இயங்குகின்றன. புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இன்னும் ஏற்படவில்லை என்பதைவிட, தகுதியுள்ள பேராசிரியர்கள் கிடைப்பதில்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்னையாகத் தொடர்கிறது. இதற்குக் காரணம், இங்கே படிப்பவர்களில் பலரும் மேற்படிப்புக்காகவும், வேலைவாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடுகளுக்குச் சென்று விடுவதால், ஆசிரியர் பணிக்கு வர யாரும் கிடைக்காத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மையங்களில் பொது நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்று சேரும் மாணவர்களில் 20% பேர், அதாவது ஆண்டுதோறும் 2,000 மாணவர்கள் பாதியிலேயே கல்வியைத் தொடராமல் விலகுகிறார்களே, அது எதனால்? அப்படியே படித்துத் தேறினாலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை வலுப்படுத்தத் தங்களது திறமையை பயன்படுத்துகிறார்களே தவிர, நேருவின் கனவான தேச நிர்மானத்துக்குத் தங்களை அர்ப்பணிப்பதில்லையே, தவறு இளைஞர்களிடமா அவர்களை பயன்படுத்திக் கொள்ளாத அரசிடமா? இந்தக் கேள்விகளுக்கும் நாம் விடை கண்டாக வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com