ஒதுக்கீடுதான் சரி!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதாவது முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% ஒதுக்கீட்டை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்ததை ஏற்றுக்கொண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது என்பதைப் பலரும் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். அப்படியல்ல. ஜாதிவாரியான இடஒதுக்கீட்டிற்கும் இதற்கும் தொடர்பில்லை. மாநில அரசின் வசம் உள்ள இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு என்று ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பான பிரச்னை இது.
தமிழகத்தைப் பொருத்தவரை, முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகளுக்கு மொத்தம் 1,225 இடங்கள் உள்ளன. இதில் 50% இடங்கள் தேசிய அளவிலான ஒதுக்கீடுக்குத் தரப்படுகின்றன. மீதமுள்ள 50% இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 'நீட்' பொதுத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் முதுநிலைப் படிப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
மேலே குறிப்பிட்ட தமிழக ஒதுக்கீடான 50% இடங்களில், அதாவது 612 இடங்களில், 50% இடங்கள் தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இதுவும்கூட தேசிய அளவிலான தகுதித் தேர்வின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதே தவிர, அவர்களது பணிமூப்பு அடிப்படையிலோ, பரிந்துரையின் பேரிலோ வழங்கப்படுவதில்லை.
தேசிய அளவிலான தகுதித் தேர்வில் அரசு மருத்துவர்கள் பெறும் மதிப்பெண்களுடன், மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள், ஊரகப் பகுதிகள், நகர்ப்புறங்களில் சில குறிப்பிட்ட பகுதிகள் ஆகியவற்றில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அந்தந்த இடத்துக்குத் தக்கபடி சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. அது தேசிய அளவிலான தகுதித் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்க்கப்படுகிறது. அதனடிப்படையில் அவர்கள் மருத்துவ மேற்படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த முறை இப்போதைய உயர்நீதிமன்றத் தீர்ப்பால் ரத்து செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், 2012-ஆம் ஆண் இந்திய மருத்துவ கவுன்சிலால் அறிவிக்கப்பட்டு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத முறையைப் பின்பற்றும்படி உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்றம். இந்த முறைப்படி, குறிப்பிட்டிருந்ததுபோலவே 50% இடங்கள் மாநிலத்துக்கு ஒதுக்கப்படுகின்றன. அந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும்போது, மலைப் பிரதேசங்கள், மிகவும் பின்தங்கிய கிராமப் புறங்கள் போன்றவற்றில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு அவர்களது பணிமூப்பு அடிப்படையில் ஓராண்டுக்கு 10%, இரண்டாண்டுக்கு 20%, மூன்றாண்டுக்கு 30% என அதிகபட்சமாகக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கலாம் என்கிற மருத்துவ கவுன்சிலின் விதிமுறையைப் பின்பற்ற அனுமதித்திருக்கிறது.
தேசியப் பொதுத் தகுதித் தேர்வில் பங்கு பெற்ற அரசு மருத்துவர்கள் மூன்றாண்டுகள் குறிப்பிட்ட பகுதிகளில் பணியாற்றி இருந்தால் அதிகபட்சமாக 30% கூடுதல் மதிப்பெண்கள் பெறுவார்கள். அவர்கள் பொதுத் தகுதித் தேர்வில் தகுதிக்குரிய மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இடம் பிடித்துவிடுவார்கள். இதனால், அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.
அதே நேரத்தில், ஒரு முக்கியமான பிரச்னை இதனுடன் இணைந்திருக்கிறது. பெரும்பாலான மருத்துவர்கள் கிராமப் பகுதிகளிலும், மலைப் பகுதிகளிலும், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணிபுரிய முற்படுவதில்லை. தாலுகா மருத்துவமனைகளில் பணிபுரிவதற்குக்கூடத் தயக்கம் காட்டுகிறார்கள். கிராமப்புறங்களில் பணியாற்றினால் மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காகத்தான் பலரும் அரசுப் பணியிலேயே சேர்கிறார்கள். அதற்கான ஊக்கம் இனிமேல் குறைந்து விடும்.
மருத்துவ கவுன்சில் குறிப்பிடுவதுபோல ஊக்க மதிப்பெண்கள் கிராமப்புறங்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல், நகர்ப்புறங்களிலேயேகூட சில முக்கியமான இடங்களைத் தகுதிக்குரியதாக மாநில அரசு அறிவித்துவிட முடியும். இதனால், மலைப்பகுதிகளில், மிகவும் பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிய யாரும் ஆர்வம் காட்டாத நிலைமை ஏற்படப்போகிறது. அதனால் பாதிக்கப்படப் போவது அப்படிப்பட்ட பகுதிகளில் வாழும் அடித்தட்டு மக்கள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
'நீட்' எனப்படும் தேசிய அளவிலான பொதுத் தகுதித் தேர்வு குறித்து மக்களவையில் பேசும்போது, மத்திய சுகாதார அமைச்சர் குறிப்பிட்டது - 'தேசிய அளவில் தகுதி நிர்ணயம் செய்து மதிப்பெண்களை அளிப்பதுடன் எங்கள் பணி முடிந்து விடுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதுமட்டும்தான் எங்கள் அறிவுறுத்தல். மாநில அளவிலான ஒதுக்கீடுகள், இடஒதுக்கீடுகளில் நாங்கள் தலையிட மாட்டோம்.'
மத்திய அரசு தலையிடவில்லைதான். ஆனால் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டிருக்கிறதே. மாநில அரசு சொந்தமாக மதிப்பெண் கணக்கிடும் முறையைப் பின்பற்ற முடியாது என உத்தரவிட்டிருக்கிறதே. இந்த உத்தரவால் அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பு பாதிக்கப்படாது. அப்பாவி கிராம மக்கள், மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவை நிச்சயமாக பாதிக்கப்படும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com