ஏன் இந்தத் தயக்கம்?

கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளோ, முறைகேடுகளோ நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் மீது எழவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளோ, முறைகேடுகளோ நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் மீது எழவில்லை. இந்த ஆட்சியைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும், பிரதமரின் நேர்மையையோ, ஆட்சியின் ஊழலற்ற தன்மையையோ யாருமே சந்தேகிக்கவில்லை. அப்படி இருந்தும்கூட, மத்திய அரசு லோக்பால் சட்டத்தை அமல்படுத்தாமல் தள்ளிப்போட்டுக்கொண்டு வருவது ஏன் என்பது தெரியவில்லை.
2011-இல் அண்ணா ஹசாரே தலைமையிலான ஜன் லோக்பால் இயக்கத்தின் போராட்டம்தான், மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு எதிரான மனநிலையை நாடுதழுவிய அளவில் உருவாக்கியது. மன்மோகன் சிங் அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களும், ஒன்றன் பின் ஒன்றாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற எண்ணத்திற்கு மக்கள் மத்தியில் வலு சேர்த்தன.
அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் இயக்கத்தை ஆதரித்ததில் பா.ஜ.க.வுக்கு முக்கியமான பங்கு உண்டு. அந்த இயக்கம் கொடுத்த அழுத்தம்தான் மன்மோகன் சிங் அரசு லோக்பால், லோக் ஆயுக்த சட்டம், 2013-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் காரணமாக இருந்து, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய முந்தைய காங்கிரஸ் ஆட்சி, ஊழலுக்குக் கடிவாளம் போடும் லோக்பால் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்குத் தயங்குகிறது.
பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை, லோக்பால் சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் திருத்தங்கள் சிலவற்றை இந்த அரசு கொண்டுவந்திருக்கிறதே தவிர, அதை நடைமுறைப்படுத்தவோ, வலுப்படுத்தவோ முனைப்புக் காட்டவில்லை என்பதுதான் ஆச்சரியப்படுத்துகிறது. சட்டம் இயற்றப்பட்டு, 2014-இல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்ட பிறகு, இதுவரை லோக்பால் சட்டத்தில் இரண்டு திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன.
கடந்த ஆண்டு அரசு கொண்டுவந்த இரண்டாவது திருத்தத்தின்படி, அரசு ஊழியர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், சமூக சேவை நிறுவனங்கள் உள்ளிட்டோர் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களது சொத்துக் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதில் மிகவும் கண்டனத்துக்குரிய திருத்தம் என்னவென்றால், அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்வதிலிருந்து முற்றிலுமாக விலக்களிக்கப்பட்டு விட்டனர் என்பதுதான். அந்தச் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு உள்படுத்தப்படாமலே வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுவிட்டது; அதை காங்கிரஸ் ஆதரித்தது.
கடந்த மாதம் லோக்பால் பிரச்னை மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. இதேபோல பலமுறை உச்சநீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்னை வருவதும், நீதிமன்றம் அரசைக் கண்டிப்பதும் வழக்கமாகி விட்டிருக்கிறது. லோக்பால், லோக் ஆயுக்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எந்தவித சட்டத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் மறுபடியும் தெளிவுபடுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்னை வரும்போதும், லோக்பால் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவில் முடிவு எட்டப்படாததால் தாமதம் ஏற்படுவதாக அரசு விளக்கம் கொடுப்பது வழக்கம். அதில் முக்கியமான திருத்தம் லோக்பாலை நியமிப்பதற்கான தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறுவது குறித்தானது. எதிர்க்கட்சி வரிசையில் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக கொள்ளலாமா, கூடாதா என்பதுதான் நிலைக்குழுவின் விவாதப் பொருளாக தொடரும் பிரச்னை.
லோக்பாலைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் பிரதமர், மக்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரது சார்பில் ஒரு நீதிபதி, இந்தக் குழுவால் அடையாளம் காணப்படும் நீதித்துறையைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஆகியோர் அடங்குவர். இவர்களில் ஒருவர் இல்லாமல் இருந்தாலும்கூட, லோக்பாலைத் தேர்வு செய்வதில் சட்டத் தடையில்லை என்பதை உச்சநீதிமன்றம் இரண்டு முறை தெளிவுபடுத்திவிட்டது.
தலைமைத் தகவல் ஆணையர், மத்திய புலன் விசாரணைத் துறையின் இயக்குநர் ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யும் குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், அதிக எண்ணிக்கை பலம் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறும்போது, லோக்பால் தேர்ந்தெடுப்பதற்கும் அதையே பின்பற்றுவதற்கு ஏன் தயங்க வேண்டும் என்று தெரியவில்லை. மக்களவையில் 10% இடங்கள் பெற்ற கட்சிதான் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. இது, முதலாவது மக்களவைத் தலைவராக இருந்த ஜி.வி. மவ்லங்கர் வகுத்த வழிமுறைதானே தவிர இதற்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமோ, அவை நடவடிக்கைக் குறிப்போ எந்தவிதமான விதிமுறையும் வகுக்கவில்லை.
சாக்குபோக்குகளால் தள்ளிப்போட முயற்சிக்காமல், லோக்பால், லோக் ஆயுக்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புக் காட்டுவதுதான் நரேந்திர மோடி அரசுக்குப் பெருமை சேர்க்குமே தவிர, இதைத் தள்ளிப்போடுவது வலுச்சேர்க்காது. மடியில் கனமில்லாதபோது வழியில் பயமெதற்கு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com