அடுத்தது என்ன?

ஆங்கிலத்தில் 'நீட்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு நடக்குமா நடக்காதா, தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்படுமா

ஆங்கிலத்தில் 'நீட்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு நடக்குமா நடக்காதா, தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்படுமா அளிக்கப்படாதா போன்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. மாநிலப் பட்டியலில் இருந்த 'கல்வி', அவசரநிலைச் சட்டகாலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டதால், பொதுத் தகுதித் தேர்வு பிரச்னையில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும், உள்துறையும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் ஒருவேளை தமிழகத்துக்கு தேசிய பொது நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கிடைத்திருக்கலாம். அப்போதும்கூட அந்த விலக்கு இந்தக் கல்வியாண்டுக்கானதாக மட்டும்தான் இருக்குமே தவிர நிரந்தர விலக்காக அமையாது.
மருத்துவப் படிப்புக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு எழுப்பும் பிரச்னைகள் மூன்று. முதலாவது பிரச்னை, மாநில சமச்சீர் கல்வி முறையில் படிக்கும் மாணவர்களால், சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய முறையில் படிக்கும் மாணவர்களுடன் தேசிய பொது நுழைவுத் தேர்வில் போட்டியிட முடியுமா என்பது. தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்துவதே சி.பி.எஸ்.இ. வாரியம் என்பதால், கேள்வித்தாள்கள் அந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படுவதால், மாநில வழிக் கல்வி முறையில் படிக்கும் மாணவர்களால் போட்டி போட முடியாது.
தமிழகத்தைப் பொருத்தவரை ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தில் படிக்கிறார்கள். இந்த மாணவர்கள் தேசிய பொது நுழைவுத் தேர்வு எழுதும் அளவுக்குத் தகுதி பெறும் நிலையை அடைய, சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தினால்கூட, அடுத்த பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் 90 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு பொய்த்துவிடும். இது முதலாவது பிரச்னை.
இரண்டாவது பிரச்னை, தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துகிறோம் என்று புற்றீசல் போல ஆங்காங்கே பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. எந்தவிதத் தேர்ச்சியும் இல்லாத ஆசிரியர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பயிற்சி நிலையங்கள், மாணவர்களின் மருத்துவக் கனவை பயன்படுத்தி லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றன. தனியார் பள்ளிகளிலும் தனி வகுப்புகள் நடத்தப்பட்டு கட்டண வசூல் நடக்கிறது. இதை அரசு வேடிக்கை பார்க்க முடிகிறதே தவிர, தடுக்க வழியில்லை.
மூன்றாவது பிரச்னை, மாநிலங்களின் உரிமை தொடர்பானது. தனது மாநிலத்தில், எந்த முறையில் கல்வி வழங்கப்பட வேண்டும், தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை கூட மாநில அரசுக்குக் கிடையாது என்று சொன்னால் அது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையையே சிதைப்பதாகும்.
இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் கலந்து கொண்டு தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும்போது, மருத்துவத்துக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வில் போட்டியிட முடியாது என்று சொல்வது, மாணவர்களின் திறனையும், கல்வி முறையின் தரத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமையும் என்று சிலர் வாதம் செய்கிறார்கள். தேசிய அளவிலான தேர்வுகளில் எந்தவொரு குறிப்பிட்ட கல்வி முறையும் பின்பற்றப்படுவதில்லை. ஆனால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் புத்தகங்களின் அடிப்படையில்தான் பெரும்பாலான கேள்விகளும் இருக்கின்றன என்பதால், அந்த முறையில் படித்தவர்கள்தான் பெரும்பாலும் 'நீட்' நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சமச்சீர் கல்வி முறையின் அடிப்படையில் மருத்துவத்துக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றால் அதை ஏனைய கல்வி முறையில் படிப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
இந்தப் பிரச்னைகளை எல்லாம் இனிமேல் பேசிப் பயனில்லை. இந்தியா முழுவதும் இந்த ஆண்டுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. இந்தத் தேர்வில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்து அதில் 10 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் இந்தியாவிலுள்ள 103 மையங்களில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தில் ஏறத்தாழ 80,000 பேர் இந்த நுழைவுத் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இவர்களில் சமச்சீர் கல்வி முறையில் படித்தவர்கள் அதிகமாகவே இருந்தனர்.
தேர்வு பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, தேர்வு நடத்தப்பட்ட விதம் கடுமையான விமர்சனத்தை எழுப்பி இருக்கிறது. கடந்த ஓராண்டாக, தேசிய பொது நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காகப் பெற்றோராலும், ஆசிரியர்களாலும் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளான மாணவர்கள், தேர்வு மையங்களில் நடந்த கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்ட விதம் மிகவும் அநாகரிகமானது. உள்ளாடைகளை அகற்றச் சொல்வதெல்லாம் உச்சகட்ட வரம்பு மீறல்.
'நீட்' நுழைவுத் தேர்வுக்காக இரவு பகல் பாராமல் படித்துத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வரும் மாணவர்களைத் தேர்வு எழுதுவதற்கு முன்னால் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கி அவர்
களது சிந்தனையைச் சிதற அடித்தது தற்செயலானதா அல்லது எந்தவிதமான சோதனையையும் எதிர்கொள்ளும் மனத்திடம் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவரிடம் இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கான திட்டமிட்ட செயலா? எதுவாக இருந்தாலும் கண்டனத்துக்கு உரியது.
தேசிய பொது நுழைவுத் தேர்வு என்பது தவிர்க்க இயலாததாகிவிட்டது. அதற்கு நமது மாணவர்களை நாம் எப்படித் தயார்படுத்தி தேசிய அளவில் வெற்றி பெறப்போகிறோம் என்பதை சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com