ஆன் மார்ச்..!

பாரீஸில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களிலும், பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் முடிவு வரவேற்பைப் பெற்றிருக்கும் என்று நம்பலாம்.

பாரீஸில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களிலும், பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் முடிவு வரவேற்பைப் பெற்றிருக்கும் என்று நம்பலாம். அதற்குக் காரணம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் சிதைந்து கிடந்த ஐரோப்பாவை மீண்டும் ஒருங்கிணைக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்பு என்கிற லட்சியம் பொய்த்து விடாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்பதுதான்.
பிரான்ஸ் நாட்டு அதிபராக 39 வயதேயான இமானுவல் மேக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நெப்போலியன் போனபார்ட்டுக்குப் பிறகு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இளைஞர் இவர்தான். அதுமட்டுமல்ல, இடதுசாரிகள், வலதுசாரிகள் என்று பிரிந்து கிடக்கும் பிரான்ஸ் நாட்டு அரசியலில் இரண்டையும் சாராத மத்தியப் பாதையில் பயணிக்கப்போவதாகக் கூறும் ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய திருப்பம்.
இமானுவல் மேக்ரானுக்கு மிகப்பெரிய அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. ஒரு வருடத்துக்கு முன்னால் இமானுவல் மேக்ரான் போட்டியிலேயே இல்லை. முந்தைய அதிபர் பிராங்சுவா ஹொலாந்தின் அமைச்சரவையில் சிறிது காலம் பொருளாதார அமைச்சராக இருந்த நிர்வாக அனுபவம் மட்டும்தான் இவருக்கு இருக்கிறது. ஒரு வருடம் முன்னால்தான் 'ஆன் மார்ச்' (முன்னேற்றம்) என்கிற தனது கட்சியைத் தொடங்கினார் இமானுவல் மேக்ரான். அப்பொழுது யாருமே, அவரும், அவருடைய கட்சியும் பிரான்ஸ் மக்களின் நம்பிக்கையைப் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள்.
பிரான்ஸ் நாட்டின் இடதுசாரி, வலதுசாரி அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டிருக்கிறார்கள். இவர் அவர்களில் ஒருவர் அல்ல என்பது அரசியல் போக்கில் அதிருப்தி அடைந்
திருந்த பிரான்ஸ் நாட்டு மக்கள் மத்தியில் இவருக்கு ஆதரவை அதிகரித்தது. அதே நேரத்தில், இவர் பொருளாதாரம், தொழிலாளர் நலம், வெளியுறவுக் கொள்கை போன்றவற்றில் மாறுதல் கொண்டுவர விரும்பாதது, பல இடதுசாரி, வலதுசாரி வாக்காளர்களையும் இவரை ஆதரிக்க வைத்தது.
அதிர்ஷ்டம், தனிப்பட்ட கவர்ச்சி, நடுநிலைக் கொள்கை இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவரை எதிர்த்தவர்களின் பலவீனங்களும் குறைகளும் இமானுவல் மேக்ரானை அதிபர் தேர்தலில் வெற்றி பெற வைத்துவிட்டன. இதுவரை தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாத ஒரு கட்சியின் தலைவர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது சரித்திர நிகழ்வு. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மேக்ரானின் வெற்றி ஓர் உதாரணம்.
இந்த வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய ஆபத்தும் காத்திருக்கிறது. அடுத்து நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இமானுவல் மேக்ரானின் 'ஆன் மார்ச்' கட்சி பெரும்பான்மை பலம் பெறாமல் போனால், இந்த வெற்றியினால் எந்தவித பயனும் இருக்கப் போவதில்லை. அவரால் எந்தவிதச் சட்டத்தையும் நிறைவேற்றவோ, அவரது கொள்கைகளையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவோ முடியாது.
பிரான்ஸ் நாட்டில் வலதுசாரிக் கொள்கைக்கான ஆதரவு கணிசமாகப் பெருகி வந்தது. பாரீஸ் நகரத் திரையரங்கில் 129 பேர் கொல்லப்பட்டது, நைஸ் என்கிற இடத்தில் வெடிகுண்டு வாகனத் தாக்குதலில் 86 பேர் மரணமடைந்தது, மேற்கு ஆசியாவிலிருந்து குடியேறிய முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தியது என்று வலதுசாரிகளின் கரத்தை வலுப்படுத்தும் பல காரணிகள் இருந்தன. மேக்ரானுக்கு எதிராகப் போட்டியிட்ட மரீன் லெபெனுக்கு ஆதரவு அதிகரித்த வண்ணம் இருந்தது.
பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நான்கு இளைஞர்களில் ஒருவருக்கு வேலை இல்லாத நிலை. அடிக்கடி நிகழும் பயங்கரவாதத் தாக்குதலால் மக்கள் மனதில் பாதுகாப்பின்மையும் பீதியும் அதிகரித்து வந்திருக்கின்றன. இந்தச் சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 'ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவது', 'குடியேற்றத்தைத் தடுப்பது' என்று முழக்கமிட்டார் மரீன் லெபென்.
அதிபர் தேர்தலில் இரண்டாவது சுற்றில் 66% வாக்குகள் பெற்று இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்றிருக்கிறார் என்றாலும், லெபென் 34% வாக்குகள் பெற்றிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 2002-இல் இவரது தந்தை அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது வெறும் 18% வாக்குகள்தான் பெற முடிந்தது. அதுமட்டுமல்ல, கடந்த 40 ஆண்டுகால பிரான்ஸ் அதிபர் தேர்தல் வரலாற்றில் மிகக்குறைந்த வாக்குப்பதிவு இந்த முறைதான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. இப்போது இவருக்கு வாக்களித்தவர்களெல்லாம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி வேண்டுமானாலும் வாக்களிக்கக்கூடும்.
ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவது என்று பிரிட்டன் முடிவெடுத்ததும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும் குடியேற்றத்திற்கு எதிரான சிந்தனை வலுவடைந்து, ஐரோப்பியக் கூட்டமைப்பே கலைந்து விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தின. சமீபத்தில் நடந்த ஆஸ்திரியா, நெதர்லாந்து நாட்டுத் தேர்தல்கள் அந்த அச்சத்தைப் போக்கின. இப்போது, பிரான்ஸ் மக்களும் மேக்ரானை அதிபராகத் தேர்ந்தெடுத்து ஐரோப்பியக் கூட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கிறார்கள்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறாரே தவிர, இமானுவல் மேக்ரான் இன்னும் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அவரது 'ஆன் மார்ச்' கட்சி வெற்றி பெறுவதைப் பொருத்துத்தான் அவரது வருங்காலமும், பிரான்ஸின் வருங்காலமும் அமையும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com