நாயக் எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மத்திய நிதியமைச்சருக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மத்திய நிதியமைச்சருக்கு எழுதியிருக்கும் கடிதம் ஒன்று, அரசியல் சாசனம் குறித்த அடிப்படைக் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறது. அந்தக் கடிதத்தை எழுதியிருப்பவர் கோவா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தாராம் நாயக். அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, சட்ட அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும் கூட என்பதால், அவர் எழுப்பி இருக்கும் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.
நாடாளுமன்றத்தின் உரிமைகளிலும், நிர்வாகத்தின் செயல்பாடுகளிலும் நீதித்துறை வரம்பு மீறித் தலையிடுவதை ஆளும் பா.ஜ.க. அரசு தடுக்க வேண்டும் என்று கோரும் அந்தக் கடிதத்தில் அரசியல் சாசனத்தின் "அடிப்படைத்தன்மை' குறித்தும் அவர் கேள்வி எழுப்புகிறார். அரசியல் சாசனத்தில் "அடிப்படைத் தன்மை' என்பதைக் காரணம் காட்டி நீதித்துறை தனது வரம்பை மீறுவதை சுட்டிக்காட்டி, இது அரசால் தடுக்கப்பட வேண்டும் என்று கோருகிறது அவரது கடிதம்.
நீண்டகாலமாகப் பேசப்படாமலும், விவாதிக்கப்படாமலும் இருந்த பிரச்னை நீதித்துறைச் செயல் முனைப்பு. நாடாளுமன்றத்தின் தனியுரிமைகளைத் தனதாக்கிக் கொள்ளும் நீதித்துறையின் செயல் முனைப்பு, சுதந்திரம் அடைந்தது முதலே ஆட்சியாளர்களின் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகி வந்திருக்கிறது.
அரசியல் சாசனத்தின் காப்பாளர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றமா அல்லது சட்டம் குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கும் நீதித்துறையா என்பதுதான் அவ்வப்போது எழுப்பப்பட்டு, பிறகு அடங்கிப் போகும் கேள்வி. எப்போதெல்லாம் வலிமையான மக்கள் செல்வாக்குள்ள பிரதமர் பதவிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் இந்தக் கேள்வி மேலெழுவதும், பலவீனமான அரசுகள் அமையும்போது நீதித்துறை அரசியல் சாசனத்திற்கு தான் மட்டுமேதான் காப்பாளர் என்று கருதி செயல்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 368, அரசியல் சாசனத்தைத் திருத்துவதிலோ, மாற்றுவதிலோ எந்தவித வரம்பையும் நாடாளுமன்றத்திற்கு விதிக்கவில்லை என்பதுதான் உண்மை. அதன் அடிப்படையில், இந்தியக் குடிமகனின் பேச்சுரிமையையோ, மதம் சார்ந்த உரிமையையோ பறிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு.
இந்தப் பிரச்னையில் முதல் முதலில் வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பு கோலக்நாத் வழக்கில் வழங்கப்பட்டது. 1967-இல் (அப்போது பிரதமர் இந்திரா காந்தி ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்கவில்லை) கோலக்நாத் வழக்கில், அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அரசியல் சாசனத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அடிப்படைத்தன்மையை, நாடாளுமன்றத்தின், அதாவது ஆட்சியில் இருக்கும் அரசின், எந்த முடிவும் பாதிப்பதாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அடுத்தாற்போல, 1973-இல் தலைமை நீதிபதி சிக்ரி தலைமையிலான 12 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, கேசவானந்த பாரதி வழக்கில் வழங்கிய தீர்ப்பு, இன்றுவரை அரசியல் சாசனம் குறித்த நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பை வரையறை செய்யும் தீர்ப்பாகவே தொடர்கிறது. அரசியல் சாசனத்தை மாற்றவோ, திருத்தவோ, அதன் ஷரத்துக்களை அகற்றவோ நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உண்டா இல்லையா என்பதுதான் கேசவானந்த பாரதி வழக்கு எழுப்பிய கேள்வி. இதில் அடிப்படை உரிமைகளும் அடங்கும்.
கேசவானந்த பாரதி வழக்கின் 703 பக்க தீர்ப்பில், 12 நீதிபதிகளில் 7 பேர், அரசியல் சாசனத்தின் அடிப்படைத்தன்மை மாற்றப்படாமல் இருக்கும்வரை, ஏனைய பகுதிகளை மாற்றவோ, திருத்தவோ, அகற்றவோ நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு வழங்கினர். இன்னொரு வகையில் பார்த்தால், சட்டப் பிரிவு 368-இன்படி, அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது என்று கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
அரசியல் சாசனத்தின் அடிப்படைத்தன்மை என்பது என்ன என்பதை நீதித்துறை முழுமையாகத் தெளிவுபடுத்தவில்லை. இதுகுறித்த வரைமுறைகள் வகுக்கப்படாமல், விசாரணைக்கு வரும் அந்தந்த வழக்குகளின் தன்மைக்கு ஏற்ப நீதிமன்றமே அது அடிப்படைத்தன்மைக்கு உட்பட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது, அரசியல் சாசனத்தின் அடிப்படைத்தன்மை என்பது அந்தந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளின் கண்ணோட்டத்தைப் பொருத்தது.
மதச்சார்பின்மை, சட்டத்தின் மேன்மை, கருத்து சுதந்திரம் இவற்றைப் பாதுகாப்பதுதான் அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மை என்று பரவலாகக் கருத்தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. சமீபகாலமாக, நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லாமல் இருக்கும் நிலையில், இப்போது சாந்தாராம் நாயக், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் நீதிமன்றம் வரம்புமீறி நுழைவது குறித்துக் கேள்வி எழுப்பி இருப்பது, மறுபடியும் பழைய விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
அரசியல் சாசனம் குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தனக்குரியது என்று நீதித்துறை செயல்படுவதைக் கேள்வி கேட்பது சாந்தாராம் நாயக் மட்டும்தானா அல்லது அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும் இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறதா என்பதைப் பொருத்து அடுத்த நகர்வு அமையும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com