வேண்டாம் இந்த விபரீதம்!

உலகம் முழுவதும் மரபணு மாற்றப்பட்ட உணவு மனித

உலகம் முழுவதும் மரபணு மாற்றப்பட்ட உணவு மனித உடல் நலத்துக்கு ஏற்றதுதானா இல்லையா என்கிற விவாதம் முற்றுப் பெறாமல் தொடர்கிறதே தவிர, அதனால் எந்தவித பாதிப்பும் கிடையாது என்று இதுவரை தீர்மானமாக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாகவே எப்படியாவது மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்கிற பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனமான "மன்சாட்டோ'வின் முனைப்பு தடுக்கப்பட்டு வந்தாலும், விக்கிரமாதித்தனை விட்டகலாத வேதாளத்தைப் போல அந்த நிறுவனம் அவ்வளவு எளிதாக இந்தியாவை விட்டுவிடுவதாக இல்லை.
மரபணு மாற்றப்பட்ட பருத்தி, உற்பத்தியை அதிகரிக்கும், பூச்சிகள் தாக்காது என்பதால் பூச்சி மருந்துப் பயன்பாடு குறையும் என்றெல்லாம் கூறப்பட்டு குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் உற்பத்தி அளவு அதிகரித்தது என்றாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் உற்பத்தி குறைந்தது மட்டுமல்ல, விளைநிலம் பாழானதும், விதைக்கு வெளிநாட்டு நிறுவனத்தை அண்டியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும்தான் மிச்சம். மகாராஷ்டிரத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கும், மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தி சாகுபடிக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த சூழலில், இப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபணு மாற்றத் தொழில்நுட்ப அனுமதிக் குழு கடந்த வியாழக்கிழமை மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்கலாம் என்று பரிந்துரைத்திருக்கிறது. நேரடி உணவுப் பொருளுக்கான மரபணு மாற்றப்பட்ட பயிருக்கான முதலாவது அனுமதி இதுதான். இதுகுறித்த இறுதி முடிவு எடுக்க வேண்டியது சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவேதான். அவரது அனுமதி பெறப்பட்டால், இந்த ஆண்டு முதல் பி.டி. கடுகு வேளாண்மை தொடங்கி விடும்.
மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருள்களின் உற்பத்தி குறித்து சர்வதேச அளவில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் பலர், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக இருப்பதால் அவற்றைத் தவிர்க்கும்படி நோயாளிகளை வற்புறுத்தும்படி மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருள்களை பயன்படுத்துவதால் குழந்தைப்பேறின்மை அதிகரிப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மீதான தடையைப் பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்தினால் முந்தைய மன்மோகன் சிங் அரசு, தனது பதவிக்காலம் முடியும் தறுவாயில் அகற்றிவிட்டுச் சென்றது. அப்போது இதை வன்மையாகக் கண்டித்தது பாரதிய ஜனதாக் கட்சி. மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளினால் நிலம், உற்பத்தி, அதில் விளையும் பொருள்களை உண்பதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவை குறித்து அறிவியல் ரீதியிலான எல்லா சோதனைகளையும் நடத்தி, எந்தவித பாதிப்பும் இல்லை என்று தீர்மானமாகத் தெரியாமல் இதற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. தெளிவாகவே கூறியிருந்தது.
பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு 2014 ஜூலை 18-ஆம் தேதி ஓர் அறிவிப்பு வருகிறது. அதன்படி, அரிசி, கோதுமை உள்பட 21 பொருள்களுக்கு மரபணு மாற்ற விதைகளைப் பயிரிட்டு சோதனை நடத்த, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபணு மாற்றத் தொழில்நுட்ப அனுமதிக் குழு அனுமதி வழங்கியது.
நல்லவேளையாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரண் மன்ஞ்சும் இதற்கு எதிராகக் களம் இறங்கி, எதிர்ப்புக் குரல் எழுப்பியதால் சுற்றுச்சூழல் அமைச்சகம், முழுமையான கலந்தாலோசனைக்குப் பிறகுதான் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றுகூறி, அப்போதைக்குப் பிரச்னையை நிறுத்தி வைத்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சுதேசி ஜாக்ரண் மன்ஞ்சும் மட்டுமல்ல, உச்சநீதிமன்றமே இந்தப் பிரச்னை குறித்து மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது.
மரபணு மாற்ற விதைகளினால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு, காலப் போக்கில் விளைச்சல் குறைந்து விடுகிறது என்பது மட்டுமல்ல. இந்த விதைகளைத் தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனத்திடம்தான் ஒவ்வொரு வேளாண்மைக்கும் அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் விவசாயி வாங்கியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. நம்மிடம் இப்போது இருக்கும் பல வகையான பயிர் வகைகள் மொத்தமாக அழிக்கப்பட்டு, மரபணு மாற்ற விதைகள் மட்டுமே பயிரிட முடியும், பயன்படுத்த முடியும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டு விடுவோம். நமது பாரம்பரிய விளைபொருள்கள் வழக்கொழிந்து இல்லாததாகிவிடும்.
அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹென்ரி கிசிஞ்சர், "கச்சா எண்ணெயை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், தேசங்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். உணவுப் பொருள்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், உலகில் வாழும் மக்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்' என்று ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது.
÷சுதேசி ஜாக்ரண் மஞ்ச் மட்டுமல்ல, எல்லா அரசியல் கட்சிகளும், வருங்கால இந்தியாவின் மீது அக்கறையுள்ள எல்லா அமைப்புகளும் ஒருசேரப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அமைச்சர் இன்னும் அனுமதி வழங்கிவிடவில்லை. வழங்கிவிடக் கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com