தொடருமா தனிமனித அரசியல்?

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் மட்டும்தான் அரசியல் இயக்கங்கள் என்கிற வரைமுறை வளையத்துக்குள் அடங்கும்.

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் மட்டும்தான் அரசியல் இயக்கங்கள் என்கிற வரைமுறை வளையத்துக்குள் அடங்கும். ஏனைய கட்சிகளில், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் தனிநபர்களை முன்னிறுத்திய கட்சிகள். ஏனைய கட்சிகள் எல்லாமே குடும்பக் கட்சிகள்தான்.
பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி குடும்பக் கட்சிகளை மட்டுமல்லாமல் தனிநபர் கட்சிகளையும் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. எப்படி சவால்களை எதிர்கொண்டு ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருப்பது, அதன் வருங்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தொடர்ந்து இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், ஒரு மக்களவைத் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியைத் தழுவியது என்பது மட்டுமல்ல, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்திலுள்ள 84 தனித் தொகுதிகளில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. உடனடியாக சுதாரித்துக் கொள்ளாவிட்டால், அடுத்த தேர்தலுக்குள் மாயாவதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அழிவை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.
அதேபோலத்தான் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலிலும், தில்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல்களிலும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அடைந்திருக்கும் படுதோல்வி, அந்தக் கட்சி தொடர்ந்து ஒரு சக்தியாக வலம் வருமா என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது. ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்குச் சரிவுக்கு பா.ஜ.க.வின் வளர்ச்சி காரணமல்ல. முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் செயல்பாடும், எந்தவித இலக்குமில்லாமல் பயணிக்கும் அவரது ஆட்சியின் தோல்வியும்தான் காரணம்.
பிகாரில் முதல்வர் நிதீஷ்குமார் இன்னும் எத்தனை காலம் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா கட்சியுடனான கூட்டணியைத் தொடர்வார் என்பது அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் சந்தேகம். மீண்டும் மாட்டுத் தீவன ஊழல் விவகாரம் தலைதூக்கி இருப்பதும், லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினர் அவருக்குத் தரும் அழுத்தமும், கூடிய விரைவில் அவர் கூட்டணியிலிருந்து வெளியேறுவார் என்று கருத இடமளிக்கிறது.
எஞ்சி இருக்கும் தனிநபர் கட்சிகள் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமும். மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவையில் 294 இடங்களில் 211 இடங்களை வென்று ஆட்சி அமைத்தபோது, பா.ஜ.க. மூன்று இடங்களுடன் நான்காவது இடத்தில் இருந்தது. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில் இடதுசாரிகளைப் பின் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்துக்கு வந்திருப்பது எதிர்பாராத முன்னேற்றம்.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களைப் போல அல்லாமல், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. காலூன்றுவது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது. இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும் சரியான தலைமை இல்லாததால், மம்தா பானர்ஜியை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்களுக்கு அமைப்பு ரீதியான பலம் இன்னமும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, வங்காள மொழி பேசும் செல்வாக்குள்ள தலைவர் ஒருவரை முன்னிறுத்தாமல் பா.ஜ.க. மேற்கு வங்க அரசியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவது சுலபமல்ல.
பா.ஜ.க.வின் வளர்ச்சியால் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஜில்லா பரிஷத் தேர்தல்களில், 853 இடங்களில் பிஜு ஜனதா தளம் 474 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது. கடந்த 2012-இல் 651 இடங்களில் அந்தக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 2012-இல் வெறும் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க., இப்போது 297 இடங்களை வென்று பிஜு ஜனதா தளத்திற்கு சவாலாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. பா.ஜ.க.வின் வளர்ச்சிக்குக் காரணம் எதிர்க்கட்சியான காங்கிரஸின் செல்வாக்குச் சரிவு என்றாலும்கூட, விரைவிலேயே நவீன் பட்நாயக்கிற்கும் பிஜு ஜனதா தளத்திற்கும் பா.ஜ.க. சவாலாக இருக்கப் போகிறது என்பது நிச்சயம்.
தொடர்ந்து நான்கு முறை முதல்வராக இருந்து சரித்திரம் படைத்திருக்கும் நவீன் பட்நாயக் தேர்தல் அரசியலைக் கரைத்துக் குடித்தவர். ஆட்சியையும், தனது செல்வாக்கையும் தக்க வைத்துக் கொள்ளும் சாதுர்யத்தையும் கற்றுத் தேர்ந்தவர். சமீபத்தில், காங்கிரஸின் காமராஜர் திட்டம் போல, தனது அமைச்சரவையில் உள்ள சில மூத்த அமைச்சர்களைக் கட்சிப் பணிக்கு அனுப்பிவிட்டு, பத்து புதுமுகங்களைத் தனது 23 பேர் கொண்ட அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க.வின் வளர்ச்சி காங்கிரஸின் செலவில் இருக்க வேண்டுமே தவிர, தனது செல்வாக்குச் சரிவில் அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் முதல்வர் நவீன் பட்நாயக்.
தனிமனிதக் கட்சிகளின் ஆதிக்கம் தொடருமா, இல்லை அமித்ஷாவின் முனைப்பான அத்தனை மாநிலங்களிலும் தாமரை மலர வேண்டும் என்கிற கனவு பலிக்குமா என்பதை நிதீஷ்குமாரும், மம்தா பானர்ஜியும், நவீன் பட்நாயக்கும்தான் தீர்மானிப்பார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com