சரியான முன்னுதாரணம்!

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், முன்னாள் நிலக்கரித் துறைச் செயலாளர் ஹெச்.சி. குப்தா உள்ளிட்ட மூன்று பேருக்கு தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கி இருப்பது, சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். 1993-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வழங்கப்பட்ட அத்தனை நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளையும் 2014-இல் உச்சநீதிமன்றம் சட்டவிரோதமானவை என்று கூறி ரத்து செய்ததன் தொடர்ச்சியாக இப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு, துறையின் செயலாளர் உள்பட மூன்று பேர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு இது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் அரசு அதிகாரிகள்மீது கிரிமினல் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. இதற்கு முந்தைய இரண்டு வழக்குகளிலும், ஒதுக்கீடு பெற்ற தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள்தான் தண்டிக்கப்பட்டார்கள். தனியார் நிறுவன அதிகாரிகளால் தவறான தகவல்கள் தரப்பட்டாலும், அதைத் தீர விசாரித்து முடிவெடுப்பதில் அதிகாரிகள் தவறிவிட்டனர் என்பதை அந்த வழக்குகளில் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வழக்குப் பதிவு செய்தது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ருத்ராபுரி நிலக்கரிச் சுரங்கத்தை, கே.எஸ்.எஸ்.பி.எல். என்கிற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக மத்தியப் புலனாய்வுத் துறை, தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நிலக்கரித் துறையின் முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடுத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்தது.
தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பில், முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா மட்டுமல்லாமல், முன்னாள் செயலர் கே.எஸ். கிரோபா, முன்னாள் இயக்குநர் கே.சி. சமாரியா ஆகியோரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பாகி இருக்கிறது. கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவன இயக்குநர் பவன்குமார் அலுவாலியாவும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்காக துறையின் செயலரான ஹெச்.சி. குப்தாவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுதான் யார் யாருக்கு எந்தெந்த நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது என்று தீர்மானித்து அமைச்சகங்களுக்கு பரிந்துரை வழங்கியது. எந்தவிதமான விதிமுறைகளோ, வெளிப்படைத் தன்மையோ இல்லாமல் அந்தக் குழு செயல்பட்டு வந்தது. உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் இந்த வழிமுறைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.
தகுதி குறித்து தேர்வுக் குழு கவலைப்படாமல் பலருக்கும் நிலக்கரிச் சுரங்கங்களின் ஒதுக்கீட்டை வழங்கி வந்தது என்பது வெளிப்படையாகவே தெரிந்தாலும், சந்தேகத்துக்கு இடமின்றி அரசு ஊழியர்களான உயர் அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக அதை பயன்படுத்திக் கொண்டதை நிரூபிக்க முடியுமா என்கிற ஐயப்பாடு இருந்தது. இப்போது அது விலகி இருக்கிறது. ஹெச்.சி. குப்தாவும் அவருடன் பணியாற்றிய இரண்டு மூத்த அதிகாரிகளும் தங்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி கமல் ஸ்பாஞ்ச் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரிகள் மூவர் தண்டனை பெற்றிருக்கிறார்கள் என்பதாக மட்டும் இந்தத் தீர்ப்பை நாம் பார்க்கக் கூடாது. அது வெளிப்படையாகத் தெரியும் தீர்ப்பு, அவ்வளவே. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பரத் பராஸர் இதன் மூலம் அரசின் நடைமுறைகளையும், நிர்வாகத்தில் இருக்கும் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலைமையையும் வெளிச்சம் போட்டிருக்கிறார். வழக்கு விசாரணையின் வாதங்களை வைத்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு பொறுப்பற்றத்தனம் தமது நிர்வாக அமைப்பில் இருக்கிறது என்பது வெளிப்படுகிறது.
ஒவ்வொரு விண்ணப்பத்தின் முழுமையையும், தகுதியையும் தங்களால் தீர்மானிக்க முடியாததற்குக் காரணம், அது சம்பந்தப்பட்ட அரசுப் பிரிவின் வேலை என்பதாகத் துறையின் முன்னாள் செயலரும், இணைச் செயலரும் வாதிட்டனர். சம்பந்தப்பட்ட பிரிவோ, அது தங்களது வேலை இல்லையென்றும், விண்ணப்பங்களைப் பெற்றுத் தங்களுக்கு அனுப்பித்தந்த மாநில அரசின் வேலை என்பதாக வாதிட்டது. மொத்தத்தில் யாரும் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான் இந்திய அரசு நிர்வாக முறையின் நடைமுறை உண்மை.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கின் தீர்ப்பின் மூலம், எந்தவொரு முறைகேட்டிற்கும், அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் பொறுப்பேற்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அடிப்படையில் இந்தியாவில் அரசு தொடர்பான வழக்குகளில், தவறுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமாகும். அமைச்சர்களின் தலையாட்டி பொம்மையாகவும், ஊழலில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.
அமைச்சர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தற்போதைய முறைக்குப் போடப்பட்டிருக்கும் கடிவாளம் இந்தத் தீர்ப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com