நம்பகத்தன்மையே இலக்கு!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாதான், தேர்தல் வாக்குப்பதிவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முன்னணி வகிக்கிறது. 1982-இல் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாதான், தேர்தல் வாக்குப்பதிவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முன்னணி வகிக்கிறது. 1982-இல் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (மி.வா.இ.) தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான கால விரயத்தைக் குறைத்ததுடன் வாக்குச்சீட்டை அச்சடிப்பது, விநியோகிப்பது போன்றவற்றுக்கான அரசின் செலவினத்தையும் கணிசமாகக் குறைத்திருக்கிறது.
அறிவியல் வளர்ச்சியிலும், தொழில்நுட்பத்திலும் தலைசிறந்து விளங்கும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளே இன்னமும் வாக்குச்சீட்டு முறையைத்தான் கடைப்பிடிக்கின்றன. அப்படியிருக்கும்போது இந்தியா மி.வா.இ.க்கு ஏன் மாற வேண்டும் என்று கேள்வி எழுப்புவது அர்த்தமில்லாதது. இந்த ஒரு விஷயத்திலாவது நாம் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறோமே என்று பெருமைப்படாமல், பழைய முறைக்கு திரும்புவோம் என்று கூறுவது பிற்போக்குத்தனம்.
மி.வா.இ. குறித்து 2011 முதல் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதன் செயல்பாட்டில் சாதுரியமாக சில மாற்றங்களை உட்படுத்தி, பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையை சாதகமாக மாற்ற முடியும் என்று 2011-இல் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட சில பா.ஜ.க. தலைவர்களேகூட ஐயப்பாட்டை எழுப்பினர். ஆனால், 2014-இல் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை அடைந்தது முதல் அவர்கள் மி.வா.இ. குறித்து எதுவும் பேசுவதில்லை. இப்போது அவர்களைப் போலவே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவாலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியும் அதே சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்கள்.
மி.வா.இ. செயல்பாட்டின் அப்பழுக்கற்ற தன்மையை தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டியது அவசியம். தனது செயல்பாடுகளுக்காகவும் நடுநிலைமைத் தன்மைக்காகவும் பாராட்டப்படும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கேள்விக்குறியாக்கும். அதனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காமல் இருப்பதுதான் நல்லது.
2013-இல் உச்சநீதிமன்றம் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய அரசுக்கும் ஓர் ஆலோசனை வழங்கியது. மி.வா.இ. உடன் வாக்காளர் வாக்குப்பதிவு சரிபார்ப்பு முறை (வா.வா.ச.மு.) இணைக்கப்பட்டால் இதுபோன்ற சந்தேகங்களுக்கு இடமிருக்காது என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை. வா.வா.ச.மு. இணைக்கப்படாமல் இருந்ததற்கு முக்கியமான காரணம் அதற்கான முதலீடு. ஒரு வா.வா.ச.மு. இயந்திரத்தின் விலை ரூ.19,650. தேர்தல் ஆணையத்தால் ஏற்கெனவே 55 ஆயிரம் வா.வா.ச.மு. இயந்திரங்கள் வாங்கப்பட்டு விட்டன. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைக்கான தேர்தல்களில் கோவா மாநிலத்தில் அத்தனை மி.வா.இ.உடனும் வா.வா.ச.மு. இணைக்கப்பட்டது. அதேபோல பஞ்சாப் மாநிலத்திலும் மூன்றில் ஒரு பகுதி இடங்களில் வா.வா.ச.மு. இணைக்கப்பட்டிருந்தது.
2019-இல் மக்களவைக்கும், ஏழு மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்தப்பட்டால் இன்னும் 16,15,066 வா.வா.ச.மு. இயந்திரங்கள் தேவைப்படும். இதற்காக மத்திய அமைச்சரவை ரூ.3,174 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் குஜராத், ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்களில் எல்லா மி.வா.இ.யும் வா.வா.ச.மு. இயந்திரம் இணைக்கப்பட்டதாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
மி.வா.இ.உடன் வா.வா.ச.மு. இயந்திரம் இணைக்கப்பட்டால் ஒவ்வொரு வாக்கும் மி.வா.இ.யில் பதிவு செய்யப்படும்போது, அது எந்த சின்னத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை அது வாக்காளருக்கு உறுதிப்படுத்தும். அதனால், தான் விரும்பிய சின்னத்தில்தான் தனது வாக்கு பதிவாகியிருக்கிறது என்பதை வாக்காளர் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இப்போது அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்கள் மி.வா.இ.யில் தந்திரமாக சில தொழில்நுட்ப சூட்சுமங்களை செய்து எந்த சின்னத்திற்கு வாக்குப் போட்டாலும் ஒரே சின்னத்தில் பதிவாகும்படி செய்துவிட முடியும் என்கிற புதிய குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அது சாத்தியமில்லை என்று கூறியும் அதை பலர் நம்ப மறுக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடும் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.
இதுகுறித்த விமர்சனங்களை இதுவரை மறுத்து வந்த தேர்தல் ஆணையம், இப்போது மி.வா.இ.யின் செயல்பாட்டிலும் நம்பகத்தன்மையிலும் குறை கண்டுபிடிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பை வழங்க முடிவு எடுத்திருக்கிறது. வருகிற ஜூன் 3-ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையத்தில் தங்களது குற்றச்சாட்டை நிரூபிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது. மி.வா.இயந்திரத்தில் இப்போது இருப்பதில் எந்தவித மாற்றமும் செய்யாமல் உள்ளது உள்ளபடியே தவறு இருந்தால் நிரூபிக்க வாய்ப்பளித்திருக்கிறது ஆணையம்.
ஆணையம், மி.வா. இயந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்று கருதுபவர்களுக்கு மி.வா. இயந்திரத்தை முன்கூட்டியே கொடுத்து பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும். தவறு காணும் முயற்சி, ரகசியமாக அதிகாரிகளின் முன்னால் மட்டுமே நடைபெறாமல் ஊடகங்களின் பார்வையில் நடத்தப்படுவது அவசியம். அதன் மூலம் பொதுமக்களுக்கும் மி.வா.இ. குறித்த நம்பகத்தன்மை உறுதிப்படும்.
அரசுக்கும் சரி, தேர்தல் ஆணையத்துக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி வாக்கெடுப்பு முறையில் அப்பழுக்கில்லாத தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். இதை யாரும் கெளரவப் பிரச்னையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com