வேண்டாமே விமர்சனம்!

இந்தியாவில், அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் எல்லா செயல்பாடுகளையும் அரசியலாக மட்டுமே பார்க்கும் அவலம் காணப்படுகிறது.

இந்தியாவில், அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் எல்லா செயல்பாடுகளையும் அரசியலாக மட்டுமே பார்க்கும் அவலம் காணப்படுகிறது. வளர்ச்சிப் பணிகளிலும், சமுதாய மேம்பாடு குறித்த பிரச்னைகளிலும் அரசியலை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, எல்லா கட்சியினரும் மனமாச்சரியங்களை மறந்து இணைந்து செயல்படும் கலாசாரம் அறவே இல்லாதாகி விட்டிருக்கிறது.
தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்னை தண்ணீர்தான். காவிரியிலும் தண்ணீர் இல்லை என்கிறபோது, தமிழகம் நிலத்தடி நீரைத்தான் நம்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே வருகிறது. விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லை, குடிநீருக்கும் தட்டுப்பாடு என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுவதைத் தடுக்கவும், நிலத்தடி நீரை உயர்த்தவும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் என்கிற துறையை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த ஆணையம் நிலத்தடி நீரைப் பெருக்கும் திட்டம் ஒன்றை 2013-இல் உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள 1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்பில், நிலத்தடி நீரைப் பெருக்கும் வழிமுறைகளுக்கு சாத்தியமான பகுதிகள் 68,839 ச.கி. மீட்டர் என்று அடையாளம் கண்டிருக்கிறது.
நதிகளைத் தூர் வாருதல், ஆழ்துளைகளை அமைத்து நீரை நிலத்தில் செலுத்துதல், சிறிய குளங்கள் வெட்டுதல், ஏரி, குளங்களுக்கு வந்து சேர முடியாமல் வீணாகும் நீருக்கான வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளுக்கு நீர் வந்து சேர உதவுதல் ஆகியவற்றை முனைப்புடன் செய்து முடித்தால்தான் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து தப்ப முடியும்.
தமிழக அரசின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் 39,202 ஏரிகள் உள்ளன. இதில் 13,710 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் பெரியதும் சிறியதுமாக ஏறத்தாழ 40,000 கோயில்கள் இருக்கின்றன. தல புராணத்துடன் கூடிய குறிப்பிடும்படியான கோயில்கள் என்று சொன்னால் அவை 2,359. இந்தக் கோயில்கள் அனைத்துக்குமே குளங்கள் உள்ளன. அவற்றில் 55% கோயில் குளங்கள் மட்டுமே சிதிலமடையாமல், ஓரளவு பராமரிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
தொன்று தொட்டு தமிழர்கள், தாங்கள் வாழும் பகுதியில் கோயில்களை நிர்மாணித்ததுடன் கோயிலை ஒட்டிக் கோயில் குளங்களையும் வெட்டினார்கள். இவை ஊர் மக்கள் குளிப்பதற்கு மட்டுமல்லாமல், நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கும் உதவின. 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று கூறப்பட்டது, 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பதற்காக மட்டுமல்ல, தண்ணீர் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்பதற்காகவும்தான். கோயில் குளங்கள் நிலத்தடி நீரை உறுதிப்படுத்துவதுதான் அதற்குக் காரணம்.
தமிழகத்திலுள்ள அத்தனை ஏரிகளையும், குளங்களையும் தூர் வாருவது என்பது அரசாங்கம் மட்டுமே செய்து முடிக்கக் கூடிய பணி அல்ல. இப்போது நாம் மிகவும் மோசமான வறட்சியை எதிர்கொள்ளும் நிலையில், பருவமழை தொடங்குவதற்குள் அத்தனை ஏரிகளையும், குளங்களையும் மக்களின் பங்களிப்புடன்தான் தூர் வாரி முடிக்க முடியும். நீர்நிலைகளைத் தூர் வாரும் சமூகக் கடமையை நிறைவேற்றும் பணியில் தி.மு.க. தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது, முன்மாதிரியான ஆக்கபூர்வ செயல்பாடு.
கடந்த 9-ஆம் தேதி தனது தொகுதியான கொளத்தூரில் உள்ள தான்தோன்றியம்மன் கோயில், சிவன் கோயில், முத்து மாரியம்மன் கோயில் குளங்களைத் தூர் வாரும் பணியை, தானே மண்வெட்டி எடுத்து வெட்டித் தொடங்கி வைத்தார் தி.மு.க.செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். 'நீர்நிலைகளையும், குளங்களையும் தூர் வாருங்கள்' என்கிற மு.க. ஸ்டாலினின் வெளிப்படையான உத்தரவைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் குளங்களைத் தூர் வாருவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஓர் அரசியல் இயக்கம் இப்படியொரு சமுதாய முக்கியத்துவம் உள்ள பணியில் ஈடுபடுவதை அரசியலாக்க முற்படும் அநாகரிகம் முகம் சுளிக்க வைக்கிறது. பகுத்தறிவுவாதிகளான தி.மு.க.வினர் கோயில் குளங்களைத் தூர் வாருவது, இந்துக்களின் வாக்குகளைக் குறிவைத்துத்தான் என்று ஒரு விமர்சனம்; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நிறைய அன்னதானம் செய்யுங்கள் என்று பரிந்துரைத்த ஜோசியர், மு.க. ஸ்டாலினிடம் கோயில் குளங்களைத் தூர் வாருங்கள் என்று கூறியிருப்பதாகவும் அதனால்தான் இந்த முனைப்பு என்றும் இன்னொரு விமர்சனம். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதெல்லாம் செய்யாமல் விட்டுவிட்ட பணிதானே இது என்று தூர் வாரும் பணியைக் கொச்சைப்படுத்தும் தேவையற்ற விமர்சனம்.
நாத்திகர்களான தி.மு.க.வினர் ஆத்திகர்களாக மாறிக் கோயில் குளங்களைத் தூர் வாருகிறார்கள் என்று ஆத்திகர்கள் மகிழ்ச்சி அடையட்டும். ஆத்திகத்தின் அடையாளமாகவே இருந்தாலும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் கோயில் குளங்களைத் தூர் வாருவது பகுத்தறிவுக்கு உள்பட்டதுதானே என்று நாத்திகர்கள் பெருமிதம் கொள்ளட்டும். நமக்குத் தேவை குளங்கள் தூர் வாரப்படுவது, அதை யார் எதற்காக செய்தால்தான் என்ன?
தி.மு.க.வினர் கோயில் குளங்களைத் தூர்வாருவது அரசியல் ஆதாயத்துக்காகக் கூட இருக்கலாம். 'பராசக்தி' திரைப்படத்தில் வரும் வசனமான 'ஆகாரத்துக்காகத் தடாகத்தை சுத்தப்படுத்து
கிறதே மீன், அதைப்போல, அதன் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது' என்று எடுத்துக் கொள்வோம்.
ஒரு வித்தியாசமான அரசியல் பாதையில் பயணிக்க முற்பட்டிருக்கிறார் தி.மு.க.வின் செயல் தலைவர். அவரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, இதுபோன்ற ஆக்கபூர்வமான செயல்பாட்டில் ஏனைய அரசியல் கட்சிகளும் ஈடுபட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com