தோல்வியேகூட வெற்றி!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. பல நம்பிக்கையூட்டும் திட்டங்களால் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய வெற்றி, மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்த ஆட்சியின்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை சற்றும் குலையாமல் அப்படியே தக்க வைத்துக் கொண்டிருப்பது. இரண்டாவது ஆண்டு நிறைவு பெறும்போது இருந்ததைவிட இப்போது மூன்றாவது ஆண்டு நிறைவு பெறும்போது, இந்த ஆட்சி கூடுதல் வலிமையுடன் காணப்படுகிறது என்பதுதான் ஆச்சரியமான சாதனை.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் மாதத்தை மாற்றியதும், ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்ததும், மோடி அரசின் மூன்றாவது ஆண்டு சாதனைகளில் முக்கியமானவை. நரேந்திர மோடி அரசின் கடந்த ஓர் ஆண்டு செயல்பாட்டில், பொருளாதாரம் சார்ந்த சில துணிச்சலான முடிவுகள் மிகப்பெரிய பங்கு வகித்தன.
திவால் சட்டம் (Insolvency and Banktruptcy code) ஒரு மிக முக்கியமான முடிவு. அதேபோல வருகிற ஜூலை மாதம் முதல் சேவை மற்றும் சரக்கு வரி நடைமுறைக்கு வர இருப்பதும் மிகவும் துணிச்சலான முடிவு.
கடந்த ஓராண்டில் நரேந்திர மோடி அரசின் மிகவும் துணிச்சலான, அதே நேரத்தில் யாரும் சற்றும் எதிர்பாராத முடிவு, ரூ.500, ரூ.1000 செலாவணிகளை செல்லாததாக்கியது. புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 96% நோட்டுகளை திடீரென்று ஒருநாள் செல்லாததாக அறிவித்த முடிவால், ஒரு மாதம் ஒட்டுமொத்த இந்தியாவே செலாவணித் தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்தது. அப்படி இருந்தும்கூட, மொத்த உற்பத்தி விழுக்காடு (ஜி.டி.பி.) வளர்ச்சி பாதிக்கப்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டுவருவதுதான் தனது முதல் வேலையாக இருக்கும் என்று 2014 பொதுத்தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தாலும், அது மூன்று ஆண்டுகளில் இன்னமும் சாத்தியமாகாமலே தொடர்கிறது. அதற்கு பதிலாக, உள்நாட்டில் புழக்கத்தில் இருந்த கருப்புப் பணத்தைக் கணிசமாகவே குறைத்த சாதனையை அவரது அரசு செய்திருக்கிறது.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட, தாங்களாகவே முன்வந்து வருவாயைத் தாக்கல் செய்யும் திட்டத்தின் மூலம், ரூ.65,250 கோடி கருப்புப் பணம் கணக்கில் காட்டப்பட்டது. ரூபாய் நோட்டுச் செலாவணி செல்லாததாக்கப்பட்டதும், தானே முன்வந்து கணக்குக் காட்ட வாய்ப்பளித்ததும், புழக்கத்தில் உள்ள கருப்புப் பணத்தை கணிசமாகவே குறைத்திருக்கிறது என்று நம்பலாம்.
கடந்த ஆண்டின் இன்னொரு சாதனை, நேரடி மானியங்களை உறுதிப்படுத்தி, அதன் மூலம் அரசின் மானியங்கள் தவறான முறையில் மடைமாற்றம் செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. 45 துறைகள் சார்ந்த 217 திட்டங்களுக்கான மானியங்களை, நேரடியாக பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பிரதமரின் "ஜன்தன்' திட்டத்தின் மூலம் 33.33 கோடி பயனாளிகளுக்கு 2016-17இல் ரூ.74,502 கோடி நேரடி மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. நேரடி மானியம் வழங்குவதன் மூலம் ரூ.49,000 கோடி அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது.
நெடுஞ்சாலை அமைப்பதில் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2015-16 இல் நாளொன்றுக்கு 16 கி.மீ. சாலை போடப்பட்டது என்றால் 2016-17இல் நாளொன்றுக்கு 23 கி.மீ. சாலை போடப்பட்டிருக்கிறது. இதில் கவலைப்பட வேண்டியது என்னவென்றால், சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், விபத்து மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன என்பதுதான்.
கடந்த ஓராண்டில் மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளாகவே நரேந்திர மோடி அரசால் அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கிவிட முடியவில்லை. 2016-17இல் வெறும் 2.13 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்தான், தயாரிப்பு, கட்டுமானப் பணிகள், போக்குவரத்து, விடுதிகள், ஓட்டல்கள், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய எட்டு துறைகளிலும் சேர்த்து உருவாக்க முடிந்திருக்கிறது.
இந்நிலையில் 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களில் 30% பேர் வேலை, கல்வி, பயிற்சி எதிலுமே ஈடுபடாமல் இருக்கிறார்கள். சீனாவில் இது வெறும் 11.29% மட்டுமே. ரூபாய் நோட்டை செல்லாததாக்கியது வேலைவாய்ப்பு உருவாகாமல் தடுத்தது என்பது மட்டுமல்ல, சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டதால் 1.52 லட்சம் தினசரித் தொழிலாளர்களுக்கும், பகுதி நேர வேலையாட்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.
மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய தோல்விகள் எல்லாமே, பிரதமருக்கும் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக, ஆட்சியை பலப்படுத்தியிருக்கின்றன என்பதுதான். ரூபாய் நோட்டு செல்லாததாக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகள், மக்களை வெறுப்படையச் செய்வதற்கு பதிலாக, அரசின் துணிச்சலைப் பாராட்டச் செய்தது. எல்லைப்புறப் பிரச்னையிலும், மாவோயிஸ்ட் பிரச்னையிலும் அரசின் செயல்பாடுகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. ஆனால், மக்கள் மனதில் அவை தேசப்பற்றை மேலும் அதிகரித்திருக்கின்றன. இதேபோலத்தான் வேலைவாய்ப்புப் பிரச்னையும்.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆண்டில் மிகப்பெரிய சாதனைகளும் உண்டு. மிகப்பெரிய தோல்விகளும் உண்டு. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, எப்போதும் இல்லாத அளவுக்கு அவர்மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அதுதான் மோடி மேஜிக் போலும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com