பிணையும் பரிந்துரையும்!

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சட்ட அமைச்சர்

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எல்லா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளும் நீண்ட நாட்களாக விசாரணைக் கைதிகளாகச் சிறையில் இருப்பவர்களைப் பிணையில் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார். இப்போது, சட்ட ஆணையம் தனது 268-ஆவது அறிக்கையில், அதே பிரச்னையைத்தான் வலியுறுத்தி இருக்கிறது.
பிணை என்பது வழக்கம், சிறை என்பது தவிர்க்க முடியாத நடைமுறை என்கிற கோட்பாடு, பணக்காரர்களுக்கும், செல்வாக்குள்ளவர்களுக்கும் மட்டும்தான் என்பதை சட்ட ஆணையத்தின் அறிக்கை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. வசதியும், வாய்ப்பும், செல்வாக்கும் உள்ளவர்களுக்கு எளிதாகப் பிணை கிடைத்துவிடுவதும், வசதியும் ஆதரவும் அற்றவர்கள் சிறையில் வாடுவதும் வழக்கமாகிவிட்டது என்று சட்ட ஆணையமே கூறுகிறது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ். சௌஹான் தலைமையிலான சட்ட ஆணையம், பிணைக்கான நடவடிக்கைகளை எளிமையாக்குவதற்கான பல பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் பிணை வழங்குவதற்கான நடைமுறை, குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு சாதகமானதாக இல்லை என்பது மட்டுமல்ல, எளிதில் நடைமுறைப்படுத்துவதாகவும் இல்லை என்கிறது ஆணையத்தின் அறிக்கை.
"ஒருவரை சிறையெடுப்பதா, பிணையில் விடுவதா என்பது, குற்றம் சாட்டப்பட்டிருப்பவரின் பாலினம், இனம், ஜாதி, மதம், சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அமையக் கூடாது' என்கிறது ஆணையத்தின் அறிக்கை. அதாவது, இப்போதைய நடைமுறையில் இவையெல்லாம் ஒருவரைப் பிணையில் விடுவதற்குக் காரணிகளாக இருக்கின்றன என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
விசாரணைக் கைதி என்பவர், குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணையில் இருக்கும்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர். குற்றவாளி என்று நிரூபிக்கப்படாதவர். சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு, பிணையும் தரப்படாமல், வழக்கையும் விரைந்து முடிவுக்குக் கொண்டு வராமல் சிறையில் அடைக்கப்படும் விசாரணைக் கைதிகள், சகவாச தோஷத்தால், சமூக விரோதக் குற்றங்களில் ஈடுபடுபவர்களாக மாறிவிடுகிறார்கள்.
கடந்த 2015-இல் கிடைக்கப் பெற்ற புள்ளிவிவரப்படி, இந்திய சிறைச்சாலைகளில் 2.82 லட்சம் விசாரணைக் கைதிகள் இருந்தார்கள். இன்றைய நிலையில், சிறையிலுள்ள கைதிகளில் 67% பேர் விசாரணைக் கைதிகள்தானே தவிர, தண்டனை பெற்ற குற்றவாளிகள் அல்லர். விசாரணைக் கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் முப்பது வயதுக்கும் கீழேயுள்ள இளைஞர்கள் என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். இவர்களில் பலரும் முறையான கல்வி பெறாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
பல விசாரணைக் கைதிகள் பிணையில் செல்ல முடியாமல் இருப்பதற்குக் காரணம் வறுமையும், பிணை பெறுவது குறித்த அறியாமையும், இயலாமையும்தான். காவல்துறையினரும், சிறை அதிகாரிகளும் இதுபோன்ற விசாரணைக் கைதிகளுக்கு உதவும் மனநிலையில் இருப்பவர்களல்ல. விசாரணைக் கைதிகளிடம் பொருளாதார வசதி இல்லாததால் வழக்குரைஞர்களை நாடவோ, பிணையில் வெளியில் வரவோ முடிவதில்லை.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன்படி, நியாயமான, விரைவான விசாரணை நடத்தப்படுவது என்பது ஒவ்வொரு கைதியின் உயிருக்கும், சுதந்திரத்திற்குமான அடிப்படை உரிமை என்று 1980-இல் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பே வழங்கி இருக்கிறது. 2005-இல் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, ஒருவர் செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்கான தண்டனைக் காலத்தில் பாதி அளவு சிறையில் விசாரணைக் கைதியாகக் கழித்திருந்தால், அவரை உடனடியாக சொந்தப் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று திருத்தமே கொண்டு வரப்பட்டது. 2014-இல் உச்சநீதிமன்றம் இந்த நடைமுறையை பின்பற்றுமாறு, அனைத்துக் கீழமை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டது.
இந்திய சிறைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. 2015 நிலவரப்படி, அதன் கொள்திறத்தைவிட அதிகமான கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் குற்றம் நிரூபிக்கப்பட்ட தண்டனைக் கைதிகளும் அல்ல. விசாரணைக் கைதிகள் குறித்து முறையான விசாரணை நடத்தி, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டால், பாதிக்கு மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள்.
விசாரணைக் கைதிகள் பிரச்னையில் தமிழகம் முன்மாதிரியாக ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்வரை, பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், அவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கவும், வழக்குரைஞர்களை அமர்த்தவும் அரசே உதவுகிறது.
2005-இல் அறிவிக்கப்பட்ட பிணைக்கான புதிய விதிமுறைகளை மேலும் விரிவுபடுத்த சட்ட ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. உதாரணமாக, ஏழு ஆண்டு வரையிலான தண்டனை பெறும் குற்றங்களில், அதில் மூன்றில் ஒரு பங்கு காலம் சிறையில் கழித்திருந்தாலோ, அதற்கு மேலான தண்டனைக்குரிய குற்றங்களில், அதன் பாதி அளவு சிறையில் கழித்திருந்தாலோ, உடனடியாகப் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்தப் பரிந்துரை குறித்து படிப்பறிவும், வசதியும் இல்லாத விசாரணைக் கைதிகளுக்கு யார், எப்படித் தெரிவிப்பது?
சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு, விசாரணைக் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும். இது சட்டப் பிரச்னை மட்டுமல்ல, மனிதாபிமான, மனித உரிமை பிரச்னையும்கூட!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com