போரல்ல தீர்வு!

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நிலவும்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் அசாதாரண சூழலைவிட, அது குறித்து நாம் யாருமே கவலைப்படாமல் இருப்பதுதான் அதைவிட அசாதாரணமாகத் தெரிகிறது. கடந்த மே மாதம் 1-ஆம் தேதி இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் ராணுவத்
தினரால் இரண்டு இளம் ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, நமது இந்திய ராணுவமும் பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து சில முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி அழித்திருக்கிறது.
பிரச்னைக்குரிய எல்லைப் பகுதிகளின் ராணுவ முகாம்கள் அழிக்கப்படுவதும், அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெறுவதும் புதிதல்ல. ஆனால் அப்படி நடத்தப்படும் தாக்குதல்கள் படமெடுக்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படுவது என்பது இதுவரையிலும் கேட்டறியாத ஒன்று. இந்திய ராணுவம் வெளியிட்ட விடியோ ஆதாரங்களைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ராணுவமும் விடியோ படங்களை வெளியிட்டு, எல்லைப்புறத்தில் இருக்கும் பதற்றத்தை வரவேற்பறை வரை கொண்டுவர முற்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நடத்திய துல்லியத் தாக்குதல்களும், உயர்மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்ட முடிவும் எதிர்பார்த்த அளவில் எல்லைப்புற ஊடுருவலையோ, காஷ்மீரத்தில் தீவிரவாதத்தையோ குறைத்து விட்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவதால் நிறையப் பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்பது தெரிந்திருந்தும், இதுபோல செயல்பாடுகளை பாகிஸ்தான் கைவிடவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கடந்த 27 ஆண்டுகளாக எல்லைப்புற வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல அடுக்குப் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து, பாகிஸ்தான் ராணுவமோ தீவரவாதிகளோ ஊடுருவ முடியாமல் தடுக்கும் முயற்சியும் தொடர்ந்து நடைபெறுகிறது. அப்படி இருந்தும் தீவிரவாதிகளின் ஊடுருவல்களும் குறைந்தபாடில்லை; பாகிஸ்தானியப் படைகள் நமது எல்லைக்குள் நுழைந்து தாக்கு
வதும் குறைந்தபாடில்லை.
இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. நமது ராணுவம் பெரும் பொருட்செலவில் எல்லையை ஒட்டி அமைக்கும் கம்பி முள்வேலிகள், அந்தப் பகுதியில் ஆண்டுதோறும் ஏற்படும் பனிப்பொழிவால் சேதமடைந்து விடுகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நிறைய சிறு நதிகளும், ஓடைகளும் பாய்கின்றன. இவற்றில் கம்பி வேலி போட்டுவிட முடியாது. அதைத் தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாம் ஒரு பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து ஊடுருவலைத் தடுக்க முற்படும்போது, தீவிரவாதிகள் இன்னொரு புதிய பாதையைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதனால் இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பது என்பது இயலாத ஒன்றாகத் தெரிகிறது.
இதற்கிடையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளைக் கல்லெறிந்து தாக்க முயன்ற கூட்டத்தைக் கட்டுப்படுத்த, பொதுமக்களில் ஒருவரை ராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி, அவர்களைக் காப்பாற்றி அழைத்துச் சென்ற செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓர் இளம் ராணுவ அதிகாரி மேஜர் லீதுல் கோகோய் கையாண்ட உத்தியை இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி விபின் ராவத் பாராட்ட முற்பட்டிருப்பது, விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.
"துப்பாக்கியால் சண்டை போடுபவர்களை நாங்கள் எதிர்கொள்ள முடியும். கல்லெடுத்து சரமாரியாக வீசுபவர்களை நாங்கள் துப்பாக்கியால் தாக்கவும் முடியாது, எதிர்கொள்ளவும் வேண்டும் என்றால் என்னதான் செய்வது? எங்கள் வீரர்கள் கல்லடி பட்டுக் காயமடையட்டும் என்று நாங்கள் விட்டுவிட முடியுமா? காஷ்மீரத்தில் பாகிஸ்தான் நடத்துவது நேரடியான போர் அல்ல, மறைமுகப் போர். இதுபோன்ற கீழ்த்தரமான தாக்குதல்களை, நாங்களும் சில புதிய உத்திகளை பயன்படுத்தித்தான் எதிர்கொண்டாக வேண்டும். பின்வாங்க முடியாது' என்கிற தலைமைத் தளபதி விபின் ராவத்தின் விளக்கம் நியாயமானதாக இருந்தாலும், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும் செயல்களை ஏற்றுக்கொள்ள மனசாட்சி மறுக்கிறது.
ஆண்டுக்கு ஆண்டு ஊடுருவல்களும், எல்லைப்புறத் தாக்குதல்களும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் கடந்த ஆண்டுதான் மிக அதிகமான ஊடுருவல்கள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி எல்லைப்புறத்தில் பதற்றம் அதிகரிக்க அதிகரிக்க, அதை எதிர்கொள்ள பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டும் என்று சிலர் குரலெழுப்புகிறார்கள். அதன் விளைவு நமக்கு சாதகமாக இருக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
குறைந்தகால நேரடிப் போர்களின் காலம் முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் அமெரிக்காவும், இப்போது சிரியாவில் ரஷியாவும் சிக்கியதுபோன்ற சூழலை நாமும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். குரங்கு கையில் பூமாலை கிடைத்தாற்போல, பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பதையும், அதற்கு சீனா பக்கபலமாக இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், உலக அரங்கில் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தையும் இஸ்லாமாபாத் பொறாமையுடன் பார்க்கிறது. நமது பொருளாதாரத்தை சீர்குலைக்க வழிவகை தேடுகிறது. இந்தியாவைப் போருக்கு இழுப்பதன் மூலம் நமது பொருளாதார வளர்ச்சியை முடக்க நினைக்கிறது. அதற்கு இடம் அளித்து விடாமல், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதில்தான் நரேந்திர மோடி அரசின் ராஜதந்திர வெற்றி இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com