மகளிர் வேலைவாய்ப்பு!

கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாடும், உரிமை பெறுவதும் கணிசமாக அதிகரிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. மகளிருக்கு எதிரான வன்முறை குடும்பங்களில் குறைந்திருக்கிறது

கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாடும், உரிமை பெறுவதும் கணிசமாக அதிகரிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. மகளிருக்கு எதிரான வன்முறை குடும்பங்களில் குறைந்திருக்கிறது. பால்ய விவாக நிகழ்வுகள் அநேகமாக இல்லாதாகி விட்டிருக்கின்றன. குடும்பங்களில் மகளிருக்கும் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் பங்கு அதிகரித்திருக்கிறது.
கல்வியிலும் மகளிரின் பங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் கல்வி பெறும் மகளிரின் எண்ணிக்கை 58.3 விழுக்காட்டிலிருந்து 68.8 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வு எல்லா வயது பிரிவினரிடமும் சமச்சீராக அதிகரித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய மாற்றம். இன்னோர் ஆய்வின்படி ஏறத்தாழ 53 விழுக்காடு மகளிர், வங்கிக் கணக்குகளை அவரவர் பெயரில் வைத்திருப்பதாக தெரிகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 15.1 விழுக்காடு மகளிர் மட்டும்தான் வங்கிக் கணக்கு வைத்திருந்தனர்.
மகளிர் நலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது திருமண வயது, மகப்பேறு வயது ஆகியவற்றில், நாடு தழுவிய அளவில், வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு 21 வயதுக்கு கீழே உள்ள மகளிரின் திருமணங்களும் மகப்பேறும் கணிசமாக குறைந்திருப்பதாக தெரிகிறது.
ஆண், பெண் விகிதாச்சாரம் முன்பெல்லாம் பெண்களுக்கு எதிரானதாக இருந்ததுபோய் அதிலும் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. ஆறு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, ஆறு வயதுக்கு உட்பட்ட ஆயிரம் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் 914 லிருந்து 919 ஆக அதிகரித்திருக்கிறது. இது சிறியதாக தெரிந்தாலும் மாற்றத்திற்கான அறிகுறி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்னால் தொடர்ந்து இந்த எண்ணிக்கை குறைந்தவண்ணம் இருந்தது.
வேலைவாய்ப்பில் மகளிரின் பங்கு குறித்து பார்க்கும்போது மகிழ்ச்சியடைய முடியவில்லை. கிராமப்புற வேலைவாய்ப்பில் வெறும் 24.8 விழுக்காடும் நகர்ப்புற வேலைவாய்ப்பில் வெறும் 14.7 விழுக்காடும்தான் மகளிரின் பங்காக இருந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் மகளிரின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது என்பது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கிறது.
வேலைக்குப் போகும் மகளிரில் வெறும் 15 விழுக்காடு மட்டுமே நிறுவனங்கள் சார்ந்த பணிகளில் ஈடுபடுகிறார்கள். ஏறத்தாழ 85 விழுக்காடு மகளிர், அமைப்புசாரா பணிகளில்தான் ஈடுபடுகிறார்கள். நிறுவனம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் பெண்களும் சரி தொடர்ந்து அந்த பணியில் ஈடுபடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. திறமையிருந்தும்கூட மகளிர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவோ உயர்பதவிகளுக்கு விருப்பப்படவோ துணிவதில்லை என்கிறது ஓர் ஆய்வு.
வேலைபார்க்கும் மகளிரில் பலரும் மகப்பேறை தொடர்ந்து தங்களது வேலையை விட்டுவிடுகிறார்கள் என்பதால்தான் இப்போது மத்திய அரசு பேறுகால விடுமுறை நாட்களை அதிகரித்து சட்டம் இயற்றியிருக்கிறது. போதிய அளவு குழந்தைக் காப்பகங்கள் இல்லாமல் இருந்த நிலைமையிலும் மாற்றங்கள் வரத்தொடங்கியிருக்கின்றன. ஆனாலும்கூட பெருமளவில் இந்தியப் பொருளாதாரத்தில் மகளிரின் பங்களிப்பு ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் உண்மை நிலை.
கடந்த திங்கள்கிழமை உலக வங்கி இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் காணப்படும் சில அதிர்ச்சித் தரும் தகவல்கள் நமது ஆட்சியாளர்களை நிமிர்ந்து உட்கார்ந்து சிந்திக்க வைக்க வேண்டும்.
இந்த அறிக்கையின்படி உலகிலேயே மிக குறைவான அளவு வேலைப் பார்க்கும் மகளிர் உள்ள நாடுகளில் இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி அவர்கள் கணிப்பு நடத்திய 131 நாடுகளின் பட்டியலில் இந்தியா 120-ஆவது இடத்தில் இருக்கிறது. வேலைவாய்ப்பு அதிகரிப்பு இந்தியாவில் குறைவாகவே காணப்படுகிறது என்பதுடன்அப்படியே வேலைவாய்ப்புகள் உருவானாலும் அவை ஆண்களால் தட்டிச் செல்லப்படுவதாகவும் மகளிருக்கு வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பணிக்குச் செல்லும் மகளிரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இத்தனைக்கும் இந்தியாவில் 42 விழுக்காடு மகளிர் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பட்டதாரி மகளிரின் எண்ணிக்கை 116 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் ஆண் பட்டதாரிகளின் எண்ணிக்கை வெறும் 65 விழுக்காடுதான் அதிகரித்திருக்கிறது. கல்வித் தகுதியிலும் எண்ணிக்கையிலும் மகளிரின் பங்கு அதிகரித்தாலும் வேலைவாய்ப்பில் குறைந்து வருவது கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போவது என்பது குடும்பத்தின் பொருளாதார நிலைமையையும் வாழ்க்கை தரம் உயர்வதையும் உறுதிப்படுத்துவதுடன் குழந்தைகளின் கல்வி வருங்காலத்தையும் உறுதிப்படுத்துகிறது.
பேறுகால விடுப்புச் சட்டம், படித்த நகர்ப்புற நிறுவன ரீதியிலான பணிக்குச் செல்லும் மகளிர் தொடர்ந்து பணியில் ஈடுபவதை உறுதிப்படுத்தும் என்று நம்பலாம். அமைப்பு சாரா பணிகளில் ஈடுபடும் அதிகம் படிக்காத மகளிரின் நலத்தை பேணவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழக அரசு கடந்த 2010-இல் அமைப்பு சாரா மகளிர் நலனுக்காக சில செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
அதிகளவிலான மகளிர் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இந்தியப் பொருளாதாரம் உண்மையான வளர்ச்சி அடைந்திருப்பதாகக் கருத முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com