மீண்டும் ஷின்சோ அபே!

தனது பதவிக்காலம் முடிய இன்னும் ஓர் ஆண்டு இருக்கும்போதே பிரதமர் ஷின்சோ அபே, 'டயட்' எனப்படும் ஜப்பானிய நாடாளுமன்றத்தின் மக்களவையைக் கலைத்துத் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்தது,

தனது பதவிக்காலம் முடிய இன்னும் ஓர் ஆண்டு இருக்கும்போதே பிரதமர் ஷின்சோ அபே, 'டயட்' எனப்படும் ஜப்பானிய நாடாளுமன்றத்தின் மக்களவையைக் கலைத்துத் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்தது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. டோக்கியோ மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முதல் பெண்மணியான யூரிகோ கொய்கேயின் அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கு ஆளுங்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
முன்னாள் தொலைக்காட்சித் தொகுப்பாளரான யூரிகோ கொய்கே, 2006-07இல் பிரமதர் ஷின்சோ அபேயின் முதலாவது அமைச்சரவையில் சிறிது காலம் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். கடந்த ஆண்டு உள்ளூர் அரசியல் கட்சி ஒன்றை அறிவித்து, டோக்கியோ மாநாகர சட்டப்பேரவைக்கு ஜூலையில் நடந்த தேர்தலில், ஆளுங்கட்சியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தவர். 
யூரிகோ கொய்கே தனது வளர்ச்சியின் அடுத்தகட்டமாக, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் புதியதாக 'நம்பிக்கைக் கட்சி'யை அறிவித்து, ஜப்பானின் மக்களவைக்கான அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முற்பட்டார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 2014 மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் களம் இறங்கியதுபோல...
யூரிகோ கொய்கே, பிரதமர் ஷின்சோ அபேக்கு எதிராகக் களம் இறங்கியபோது, ஷின்சோ அபேயின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியைவிட அதிகமாக பாதிக்கப்பட்டது, அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான டெமாக்ரடிக் கட்சிதான். ஏற்கெனவே உட்கட்சி குழப்பத்தில் ஆழ்ந்த டெமாக்ரடிக் கட்சி, ஒரு கட்டத்தில் யூரிகோ கொய்கேயின் நம்பிக்கைக் கட்சிச் சின்னத்தில் போட்டியிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு பலவீனப்பட்டிருந்தது. மும்முனைப் போட்டி உறுதியானபோதே பிரதமர் ஷின்சோ அபேயின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. 
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி நடந்த ஜப்பான் மக்களவைத் தேர்தலில், ஷின்சோ அபேயின் தலைமையிலான ஆளும் கூட்டணி 465 இடங்களைக் கொண்ட ஜப்பான் மக்களவையில் 313 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. மூன்றாவது முறையாக ஷின்சோ அபே பிரதமராகியுள்ளார். அபேயின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 284 இடங்களிலும் கூட்டணி கட்சியான கொமிடோ 29 இடங்களையும் வென்றன.
அதிகாரத்தின் மீதான தனது பிடியை மக்களவை வெற்றியின் மூலம் மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் ஷின்சோ அபே. அவர் மீதான தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அவரது செல்வாக்கை எள்ளளவும் பாதிக்கவில்லை என்பதைத் தேர்தல் வெற்றி நிரூபிக்கிறது. 2018-இல் நடைபெற இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைமைக்கான தேர்தலில், மூன்றாவது முறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதும், 2021 செப்டம்பரில் தனது தலைமையை உறுதிப்படுத்திக் கொள்வதும் சாத்தியமாகியிருக்கிறது.
பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு ஜப்பானின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதில்தான் முனைப்புக் காட்டும். இப்போதைய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஜப்பான் முழுமையான ராணுவத்தை ஏற்படுத்திக் கொள்வதையோ, இன்னொரு நாட்டுடன் போரில் ஈடுபடுவதையோ தடை செய்கிறது. 
ஜப்பான், இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டதன் விளைவால், ஹிரோஷிமா - நாகசாகியில் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அது, அந்த தேசத்தையே உலுக்கிவிட்டிருந்தது. இனிவரும் காலத்தில் எந்த ஒரு ஜப்பான் தலைமையும் அதுபோல நாட்டைப் போரில் ஈடுபடுத்திவிடக் கூடாது, வலியப்போய் ஆபத்துகளை விலைக்கு வாங்கக் கூடாது என்பதற்காக, அமெரிக்காவின் வற்புறுத்தலால், ராணுவத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், போரில் ஈடுபடுவதற்கும் அரசியல் சட்டம் தடையை ஏற்படுத்தியது.
அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது பிரிவில் திருத்தத்தை ஏற்படுத்தி ஜப்பான் தற்காப்புக்கு ராணுவத்தை ஏற்படுத்திக் கொள்வதை அனுமதிப்பது என்பதுதான் பிரதமர் ஷின்சோ அபே நீண்ட நாளாக வலியுறுத்திவரும் வாதம். நாடாளுமன்றத்தில், அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு முந்தைய ஆட்சியில் இருந்தும்கூட, அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு வேறு பல தேசிய பிரச்னைகள் காரணமாக அமைந்தன. இரண்டாம் உலகப்போரின் எதிர்மறை மனநிலையிலிருந்து ஜப்பானிய மக்களை மீட்டெடுப்பதும்கூட அவருக்கு அவசியமாக இருந்தது.
தன்னைச் சுற்றி வரலாற்று ரீதியான விரோதம் கொண்டுள்ள சீனாவை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில், உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான ஜப்பான் தனக்கென்று ராணுவம் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனம். இதுவரை தனது பாதுகாப்புக்கு அமெரிக்காவை நம்பி இருந்த ஜப்பான், இப்போது அதிபர் டிரம்பின் வரவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு வடகொரியா சமீபகாலமாக அணுஆயுத சோதனையில் இறங்கியிருப்பது ஜப்பானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இவையெல்லாம் ஷின்சோ அபே அரசியல் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தத் தூண்டுகின்றன.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் மும்முரமாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஷின்சோ அபே மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவி ஏற்கிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருக்கும் பிரதமர் ஷின்சோ அபேயின் வெற்றி, இந்திய - ஜப்பான் உறவுக்கு மேலும் வலுசேர்க்கும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com