வரவேற்புக்குரிய வரம்பு மீறல்!

நீதித்துறை எல்லாப் பிரச்னைகளிலும் மூக்கை நுழைத்துத் தலையிடுகிறது

நீதித்துறை எல்லாப் பிரச்னைகளிலும் மூக்கை நுழைத்துத் தலையிடுகிறது. நியாயமாகப் பார்த்தால் நீதித்துறையின் சில தலையீடுகள் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்க வேண்டும். அத்தனை அரசியல் கட்சிகளும் கொதித்தெழுந்து, "நீதித்துறை தனது வரம்பை மீறித் தலையிடுகிறது" என்று கூக்குரல் எழுப்பி இருக்க வேண்டும். ஆனால், அரசியல் கட்சிகளுக்கு நீதித்துறையின் வரம்பு மீறலைச் கூட்டிக்காட்டவோ, எதிர்த்துக் குரலெழுப்பவோ, தார்மிக ரீதியிலான பலம் இல்லாமல் போய்விட்டது என்பதால்தான் மெளனம் காக்கின்றன. 
பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் நீதித்துறையின் வரம்புமீறல் குறித்து கருத்துத் தெரிவிக்காமல் இருப்பதற்கும் காரணம் இருக்கிறது. அரசியல்வாதிகளின் தரமற்ற போக்கும், அதிகரித்துவிட்டிருக்கும் அவர்களது ஊழலும், மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கும் அரசியல் நடைமுறைகளும் அவர்களை மெளனிகளாக்கி, வேடிக்கை பார்க்க வைத்திருக்கின்றன. தங்களது மனசாட்சியின் குரலாக நீதித்துறை கருத்துத் தெரிவிக்கும்போது, அந்த வரம்பு மீறல்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் அவர்களது மெளனத்திற்கான நியாயம்.
கடந்த புதன்கிழமை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோரின் அமர்வு, குற்றப்பின்னணி உள்ள அரசியல்வாதிகளுக்கு எதிராகத் தனது கவனத்தைத் திருப்பியிருக்கிறது. நாடு தழுவிய அளவில், அரசியல்வாதிகள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க திட்டமொன்றை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த அமர்வு குறிப்பிட்டிருக்கிறது. வருகிற டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அந்தத் திட்டம் குறித்தான விவரங்களையும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறது.
மாநிலங்களிடம் நிதியாதாரம் இருப்பதைப் பொருத்துத்தான் அதுபோன்ற சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முடியும் என்கிற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொள்ளவில்லை. விரைவு நீதிமன்றங்களைப்போல, மத்திய அரசே தன்னுடைய சொந்தச் செலவில் திட்டத்தை அறிவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலும், மாநில அரசுகளுடன் நீதித்துறையே நேரிடையாகத் தொடர்பு கொண்டு அரசியல்வாதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், அதற்குத் தேவையான மனிதவளம், கட்டமைப்பு வசதி ஆகியவற்றை தீர்மானிக்கும் என்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா அமர்வு தெரிவித்திருக்கிறது.
2014 பொதுத்தேர்தலின்போது, 1,581 நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் மீது கிரிமினல் வழக்குகள் காணப்பட்டன. 2014 மார்ச் 10-ஆம் தேதி அந்த வழக்குகளின் விசாரணை அனைத்தும் ஓர் ஆண்டுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அந்த வழக்குகளின் நிலை என்ன, எத்தனை வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த விவரங்களை, டிசம்பர் 13-ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
2013 ஜூலையில், லில்லி தாமஸ் வழக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால், உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு முன்னால், தண்டிக்கப்பட்ட உறுப்பினருக்கு மேல்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த 90 நாள் அவகாசத்தை அந்த வழக்கில் ரத்து செய்து உத்தரவிட்டது நீதித்துறை. கடந்த மார்ச் 2014-இல் பப்ளிக் இந்தியா பவுன்டேஷன் வழக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளை ஓர் ஆண்டுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்தது.
தற்போதைய 16-ஆவது மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 2004-க்குப் பிறகு கிரிமினல் குற்றங்களுக்காக வழக்குகளை எதிர்கொள்ளும் மிக அதிகமான உறுப்பினர்கள் காணப்படுவது இப்போதைய நாடாளுமன்றத்தில்தான். 2013-இல் உச்சநீதிமன்றம், கிரிமினல் குற்றச்சாட்டுள்ளவர்கள் அரசுப் பதவிகளில் தொடருவதோ, சட்டமியற்றும் பொறுப்பில் இருப்பதோ மிகப்பெரிய ஜனநாயக முரண் என்று கூறி, அவர்களுக்கு மேல்முறையீடு செய்யத் தரப்பட்டிருந்த கால அவகாசத்தை மறுத்தது. 
நமது அரசியல் கட்சிகளுக்கு மக்கள் நலமும், நேர்மையும் இருக்குமேயானால், குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பளித்திருக்க மாட்டார்கள். அரசியல் கட்சிகளின் ஆதரவுடன்தான் ஊழல் பேர்வழிகளும், குற்றப்பின்னணி உள்ளவர்களும் அரசியலில் வலம் வரவும், ஆட்சி அதிகாரத்தில் அமரவும் முடிகிறது என்பது உலகறிந்த உண்மை. 
அரசியல்வாதிகள் தங்களுக்குத் தாங்களே சுய கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டிருந்தாலோ, ஆட்சியில் இருப்பவர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உறுப்பினர்களின் வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்களோ, விசாரணை ஆணையங்களோ அமைத்திருந்தாலோ அவர்களது அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டிய சூழல் எழுந்திருக்காது.
இதற்காகத்தான் லோக் பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் வேண்டும் என்று நாடு தழுவிய அளவில் மக்கள் கொதித்தெழுந்தார்கள். அப்படியும் அசைந்து கொடுக்காத அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் வரம்பு மீறியிருப்பது, வரவேற்புக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com