இப்போதே இப்படி என்றால்...

மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் ஒரு மாநரகமாக மாறுவது

மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் ஒரு மாநரகமாக மாறுவது என்பது ஆண்டுதோறும் தொடரும் அவலம். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில், ஆழிப்பேரலை, தானே புயல், வார்தா புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தால், அதில் நியாயமிருக்கிறது. ஆனால், ஆண்டுதோறும் சந்திக்கும் பருவமழையைக்கூட நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போவது என்பதை என்னவென்று சொல்வது?
சென்னை ஒரு கடலோர நகரம். இயற்கையாகவே வெள்ளம் வடிந்தோடும்படியான நகரமைப்பு, வங்கக் கடலை ஒட்டியுள்ள சென்னைக்கு உண்டு. போதாக்குறைக்கு சென்னை மாநகரம் வழியாக இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாயும் பாய்ந்தோடி கடலில் கலக்கின்றன. மழைநீர் உடனடியாக வெளியேறாமல் சாலைகளில் தேங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. பிறகும் மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறதே, ஏன்? 
முன்பே கூறியதுபோல, கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் சென்னை மாநகரின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கின்றன. போதாக்குறைக்கு பக்கிங்ஹாம் கால்வாயும் வேறு இருக்கிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 16 கால்வாய்களும் சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 30 கால்வாய்களும் இருக்கின்றன. இது போதாதென்று பல கழிவு நீர் ஓடைகளும், திட்டமிட்டு நிறுவப்பட்டிக்கும் மழைநீர், கழிவு நீர் கால்வாய்களும் இருக்கின்றன. 
மழைக்காலம் எப்போது வரும் என்பதும், பருவமழை எப்போது தொடங்கும் என்பதும் திடீர் நிகழ்வுகள் அல்ல. பருவமழைக்கு முன்னால், கால்வாய்களையும், கழிவுநீர் ஓடைகளையும் மழை நீர், கழிவு நீர் வடிகால்களைச் சுத்தம் செய்து அடைப்புகளை அகற்றித் தயார் நிலையில் வைத்திருப்பது என்பது நிர்வாகம் செய்திருக்க வேண்டிய முன்னேற்பாடு.
அடையாறும், கூவம் ஆறும் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தினம்தோறும் மண் சேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் முகத்துவாரத்திலிருந்து மணலை அகற்றி, கழிவு நீர் கடலில் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்தம் எடுப்பதில் மணல் ஒப்பந்ததாரர்களின் போட்டா போட்டியும், அவர்கள் முறையாக தினந்தோறும் மணலை அகற்றுகிறார்களா என்பதைப் பொறுப்புடன் உறுதிப்படுத்தாத அதிகாரவர்க்கத்தின் மெத்தனமும் கூவமும் அடையாறும் கடலில் கலப்பதை தடுத்து விடுகின்றன.
சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 30 கால்வாய்களிலும், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 16 கால்வாய்களிலும், அன்றாடம் தெருக்களில் சேரும் குப்பையை அகற்றுவதுபோல, தூர்வாரி சுத்தமாக பராமரித்திருந்தால், இப்படி தண்ணீர் தேங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தெருவோர குப்பைகளை அகற்றுவதையேகூட முறையாகச் செய்யாத நிலையில், சாக்கடைக் கால்வாய்களை மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் மூக்கைப் பொத்திக்கொண்டு செய்துவிடவா போகிறார்கள்?
சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் பங்களிப்பாக ஏறத்தாழ இரண்டு லட்சத்துக்கும் அதிமான கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழைநீர் வடிகால் குழாய்களில் விடப்படுகின்றன. கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு இவையெல்லாம்கூடக் காரணம்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது, அவர்கள் நல்லவர்களோ - கெட்டவர்களோ, மக்களால் அவர்களைச் சந்தித்து முறையிட முடிந்தது. மண்டலக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து, குறைந்தபட்சப் பணியையாவது அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். 
இப்போது சென்னை பெருநகர மாநகராட்சி 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஐந்து மண்டலங்களுக்கு ஒருவர் என மூன்று துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆணையர் பதவியும், சிறப்பு அதிகாரி பதவியும் ஒரே நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னைப் பெருநகர மாநகராட்சியின் எல்லை அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும்போது, நிர்வாகம் பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததில் வியப்பே இல்லை.
1,200 கி.மீ. மழை நீர் வடிகால் குழாய்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை முறையாகக் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதில் ஐயப்பாடு இருக்கிறது. மழை நீர் வடிகால் குழாய்களை அமைப்பது ஒரு துறை. அதை பராமரிப்பது இன்னொரு துறை. மழை நீர் வடிகால் குழாய்களைக் கழிவு நீர் குழாய்களை பராமரிப்பதுபோல, பராமரிக்க நிரந்தர ஊழியர்கள் கிடையாது. இதுபற்றி எல்லாம் முறையான, தெளிவான திட்டமிடல் இல்லாமல் போனதும்கூட, மழை வந்தால் சென்னை பெருநகர மாநகராட்சி மழையில் மிதப்பதற்கு முக்கியமான காரணம்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெருமழை வந்தபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சியில், அதற்கு முன்னால் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த 16 கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. அதற்குப் பிறகு கால்வாய்களை முறையாகத் தூர்வாரி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான எந்த முனைப்பும், எந்த ஆட்சியிலும் எடுக்கப்படாததன் விளைவுதான், மழை வந்தால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் அவலம். இப்போதுதான் பருவமழையே தொடங்கியிருக்கிறது...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com