ஆத்திரக்காரனுக்கு...

மக்களாட்சி நடைபெறும் சுதந்திர நாட்டில் விமர்சனங்கள்

மக்களாட்சி நடைபெறும் சுதந்திர நாட்டில் விமர்சனங்கள் எழுவதை தடுத்துவிட முடியாது. சொல்லப்போனால், விவாதங்களும் விமர்சனங்களும்தான் மக்களாட்சி முறையை ஏனைய ஆட்சி முறைகளிலிருந்து வேறுபடுத்துகின்றன. விமர்சனங்களுக்கு வாய்ப்பூட்டுப்போட விழைவது என்பது விமர்சனத்துக்கு வலுசேர்க்குமே அல்லாமல், எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது என்பதுதான் அனுபவப்பூர்வ உண்மை.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 19, சுதந்திரமாக எந்தவொரு இந்தியக் குடிமகனும் கருத்துகளைத் தெரிவிக்கவும், வெளியிடவுமான உரிமையை வழங்கியிருக்கிறது. அத்துடன் நின்றுவிடாமல், 19(2) பிரிவில், அப்படி வழங்கப்பட்ட உரிமையை எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்பதற்கான நெறிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவதூறாக எழுதினாலோ, பேசினாலோ, கருத்துகளைப் பதிவு செய்தாலோ, இந்திய தண்டனைச் சட்டத்தில் 500, 501, 502 ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடரவும், தண்டிக்கவும் வழிகோலப்பட்டுள்ளது. 
தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது முதல், உலகிலுள்ள அனைத்துக் குப்பைகளும் வீட்டிற்குள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், செல்லிடப்பேசிகள் மூலமாகவும் வந்து குவிகின்றன. இதைத் தடுப்பதோ, கண்காணித்து முறைப்படுத்துவதோ, நெறிப்படுத்துவதோ சாத்தியமில்லை. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-த்தின் அடிப்படையில், சமூக வலைதளங்களான முகநூல், சுட்டுரை ஆகியவற்றில் தெரிவிக்கப்படும் தரக்குறைவான, ஆபாசமான கருத்துகளைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-த்தில், 2009-ஆம் ஆண்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சட்டத்தின் 66 ஏ பிரிவின்படி, சமூக வலைதளங்களான முகநூல், சுட்டுரை உள்ளிட்டவற்றில் கருத்துகள், விமர்சனங்கள் வெளியிடுவோரை கைது செய்து சிறையில் அடைக்க வழிவகுக்கப்பட்டது.
சட்டப்பிரிவு 66 ஏ, தனிமனித சுதந்திரம், பேச்சுரிமைக்கு எதிராக உள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் தெளிவாக இல்லை என்றும் உச்சநீதிமன்றம் 2015-இல் அதை ரத்து செய்தது. இதேபோன்ற நோக்கமுள்ள ஏனைய சட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்கிற நடைமுறைப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 66 ஏ-யின் கீழ் இல்லாமல் இருந்தது அதற்கு மிக முக்கியமான காரணம். தன்னிச்சைப்படி நிர்வாக இயந்திரம் அரசியல் தலைமையின் விருப்பத்திற்கு இணங்க விமர்சனம் செய்பவர்கள் மீது மனம்போன போக்கில் நடவடிக்கை எடுத்துவிடக் கூடாது என்பதால்தான் அந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவு அகற்றப்பட்டாலும்கூட, 67-ஆவது பிரிவைப் பயன்படுத்தி இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிரிவு 67-இன் நோக்கம் ஒருவரின் அந்தரங்க நிலையை, காமம் மிகுந்த, பாலுணர்வு தூண்டும்படியான, பதிவை பார்ப்பவர்களின் மனத்தை ஆபாசப்படுத்துகிற காட்சி அல்லது படங்களை வெளியிடுவதையும், பரிமாறிக் கொள்வதையும் தடுப்பது என்பதுதான். பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தரவும், அவர்களை ஆபாசமாக சித்திரிப்பதைத் தடுப்பதும், பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட சட்டப் பிரிவு இது.
குமுதம் வார இதழின் கேலிச்சித்திரக்காரராக முன்பு பணியாற்றிய கார்ட்டூனிஸ்ட் பாலா தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67-இன் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். கந்துவட்டிக்காரர்களின் கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் தீக்குளித்து இறந்த சம்பவம் குறித்து, இவர் வரைந்த கேலிச்சித்திரம்தான் இவரைக் கைது செய்வதற்குக் காரணமாகக் கூறப்பட்டிருக்கிறது. குமுதம் வாசகர்களுக்கு மட்டுமே பரவலாகத் தெரிந்திருந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை இப்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தியிருக்கிறது இந்தக் கைது நடவடிக்கை. 
போதாக்குறைக்கு, அவர் தனது கேலிச்சித்திரத்தில் என்ன வரைந்திருந்தார் என்பதை தமிழகத்தின் முன்னணி ஆங்கில இதழ் ஒன்று தனது முதல் பக்கத்திலேயே விரிவாக விளக்கி, கேலிச்சித்திரத்தில் ஏற்படாத தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே பார்த்திருந்த கேலிச்சித்திரத்தை அனைவரையும் பார்க்க வைத்த பெருமை புகார் அளித்த நெல்லை ஆட்சியரையும் கைது செய்த காவல்துறையினரையுமே சேரும்.
விமர்சனங்களை இரண்டு வகையாக அணுகலாம். ஒன்று, அவற்றைச் சட்டை செய்யாமல் இருப்பது. இரண்டாவது, உண்மைக்குப் புறம்பான, தவறான விமர்சனமாக இருந்தால், சரியான விளக்கத்தை அளித்து விமர்சனம் செய்தவரின் அறியாமையையோ, உள்நோக்கத்தையோ வெளிச்சம்போடுவது. 
யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் தரக்குறைவாக மேடை போட்டு முழங்க முடியும் என்கிற அரசியல் சூழலில், சட்டப்பிரிவு 67-ஐ பயன்படுத்தி முகநூல் கார்ட்டூன் ஒன்றுக்காக ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிவது போன்றது. சட்டை செய்யாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு சாதாரணப் பதிவின் மீது ஆத்திரமடைந்து, வலியப்போய் வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். 
அண்ணா ஒருமுறை கூறியதுபோல, 'வசைவாளர்கள் வாழ்க' என்று விமர்சனத்தை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஆட்சியில் இருப்பவர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் இருக்க வேண்டும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவுமான மனப்பக்குவம் உடையவர்களாக இருப்பது அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com