நினைத்ததும்... நடந்ததும்...!

கடந்த ஆண்டு இதே நாள் மாலையில், சுனாமி தாக்கியதுபோல

கடந்த ஆண்டு இதே நாள் மாலையில், சுனாமி தாக்கியதுபோல பாரதப் பிரதமரின் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக்கப்பட்ட அறிவிப்பு வந்தது. ரூ.500, ரூ.1,000 செலாவணிகள் செல்லாததாக்கப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஊழலை எதிர்கொள்வது, கள்ள நோட்டுகளை அழிப்பது, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது, ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைப்பது, 
வரி வசூலை அதிகரிப்பது என்று ஐந்து குறிக்கோள்களை முன்வைத்தார். 
செலாவணி மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சரியாக ஓராண்டு கடந்துவிட்டது. இந்த ஓராண்டில் என்னென்ன இலக்குகளை முன்னிட்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அவை எந்த அளவுக்கு வெற்றி அடைந்திருக்கின்றன என்று பார்த்தால், இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட சாதனைகளைவிட வேதனைகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. 
2016 நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை அன்று நள்ளிரவுக்குப் பிறகு செல்லாததாக்கப்பட்டபோது புழக்கத்தில் ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் இருந்தன. இவற்றில் ரூ.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.5 லட்சம் கோடி வரை வங்கிகளுக்கு திரும்பி வராது என்பதுதான் அரசின் நம்பிக்கையாக இருந்தது. உச்சநீதிமன்றத்திலேயே அரசின் தலைமை வழக்குரைஞர் இதைத் தெரிவித்தார். இந்தப் பணம் திரும்பி வராமல் போனால், கணக்கில் காட்டப்படாமல் புழக்கத்தில் இருக்கும் அந்த நோட்டுகள் வெற்றுக் காகிதங்களாக மாறும்போது, ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதுடன், பல்வேறு நலத்திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பு. 
ஆனால், கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்த செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் ஏறத்தாழ 99%. அதாவது, அரசு எதிர்பார்த்ததுபோல் கணக்கில் வராமல் பதுக்கிவைக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழந்த வெற்றுத் தாள்களாகிவிடவில்லை. அவை வங்கிக் கணக்குகளுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன.
இங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. ரூ.500, ரூ.1000 செல்லாததாக்கப்பட்ட நிலையில் 99% பணம் திரும்பி வருவது சாத்தியம்தானா? ஒரு மாத காலத்திற்கு செல்லாததாக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகள் மீண்டும் திரும்பப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டால், வங்கிகளில் செலுத்தாமல் பலரும் வைத்திருக்கும் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டிருந்தால், 120% முதல் 130% வரைகூட செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் திரும்பி வரக்கூடும். அது எப்படி சாத்தியம்? இதன் பின்னால் இருக்கும் மர்மம்தான் என்ன என்பது புரியவுமில்லை, அதை விளக்க இந்திய ரிசர்வ் வங்கியோ, மத்திய நிதி அமைச்சகமோ தயாராகவும் இல்லை.
வங்கி அட்டைகள் மூலமும், கடன் அட்டைகள் மூலமும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பது என்கிற அரசின் முயற்சி வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. விவசாய கிராமப்புற நாடான இந்தியாவில் 78% பரிமாற்றங்கள் ரொக்கத்தில் நடைபெறுவதில் வியப்பொன்றும் இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே பெரும்பாலான பரிவர்த்தனைகள் ரொக்கத்தில்தான் நடைபெறுகின்றன எனும்போது, இந்தியாவில் அது எப்படி சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே. 
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய நன்மை என்று சொன்னால், அவை வரி ஏய்ப்பு வசதிக்காக செயல்பட்டுக்கொண்டிருந்த நிழல் நிறுவனங்களை அடையாளம் கண்டதுதான். சுமார் 28,000 நிறுவனங்கள் 49 இந்திய வங்கிகளில் 50,000-க்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை உருவாக்கி செயல்பட்டு வந்தன. கணக்கில் வராத செல்லாததாக்கப்பட்ட பணம் இந்த வங்கிக் கணக்குகளின் மூலம் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்களின் உரிமமும் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருக்கின்றன. நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டைவிட இந்தாண்டு வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதும், வரி வருவாய் 18% அதிகரித்து ரூ.17.1 லட்சம் கோடியாகி இருக்கிறது என்பதும் ஆறுதல் என்றாலும், ஜி.டி.பி. வளர்ச்சி குறைந்திருப்பது பின்னடைவு. பல லட்சம் பேர் வேலையிழந்து இருப்பது, பல சிறு - குறு தொழில்கள் அழிந்திருப்பது, வளர்ச்சியின் அடையாளமான மனை வணிகம் முடங்கிக் கிடப்பது ஆகியவற்றை நிச்சயமாக சாதனைகள் என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.
இந்தியா முழுவதும் பொதுமக்கள் ரூ.2,000 பெறுவதற்காக வங்கிகளின் முன்னால் கால்கடுக்க வரிசையில் நின்றபோது, சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.35 கோடி, மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் தொழிலதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.4 கோடி, அஸ்ஸாம் தொழிலதிபரிடம் இருந்த ரூ.6 கோடி என்று கட்டுக்கட்டாக புதிய ரூ.2,000 நோட்டுகள் இந்தியாவின் பல பாகங்களிலும் பிடிபட்டனவே, அது எப்படி? ஊழலுக்கு எதிரான நடவடிக்கைதான் செலாவணி செல்லாததாக்கப்பட்டது என்பது உண்மையானால், இவர்களுக்கு எல்லாம் புதிய ரூ.2,000 நோட்டுகள் எப்படி, யாரால் கட்டுக்கட்டாக தரப்பட்டன என்பது ஏன் கண்டறியப்பட்டு அவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை?
நிர்வாக நடவடிக்கைகளால் ஊழலைத் கட்டுப்படுத்துவதையும், கருப்பப் பணத்தைக் கண்டுபிடிப்பதையும் விட்டுவிட்டு, மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டுக்குத் தீ வைத்த கதையாக, ஒட்டுமொத்த இந்தியாவையே இப்படி நிலைகுலைய வைத்திருக்க வேண்டாம். இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாம் மீள இன்னும் பத்து ஆண்டுகளாகலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com