சாதனை மகளிர்

இந்திய விளையாட்டின் பொற்காலம் இது.

இந்திய விளையாட்டின் பொற்காலம் இது. நேற்று ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆசிய கோப்பையில் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையின் இறுதிச்சுற்று வரை சென்று சாதனை படைத்தது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெவால், சிந்து உள்ளிட்டோர் சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள்.
மகளிர் அணியினர் மட்டுமல்லாமல் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக நியூஸிலாந்துக்கு எதிரான டி-20 தொடரைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடியிருக்கிறது. இதற்கு முன்பு நியூஸிலாந்துடன் ஐந்து முறை டி-20 தொடர்களில் விளையாடியிருக்கும் இந்தியா, அதில் ஓர் ஆட்டத்தில்கூட வெற்றி பெறவில்லை எனும்போது இந்த வெற்றியின் பெருமை அதிகரிக்கிறது.
ஆசிய கோப்பையில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது இந்திய மகளிர் ஹாக்கி விளையாட்டுக்குப் புதியதோர் உத்வேகத்தை அளிக்கும். ஜப்பானில் ககாமிகஹாரா என்கிற இடத்தில் நடைபெற்ற ஆசிய மகளிர் ஹாக்கி பந்தயத்தில் இந்திய அணியும் சீன அணியும் தலா ஒரு கோல் போட்டு டிராவில் முடிந்தது. அதனால் மீண்டும் விளையாடியபோது இந்திய மகளிர் அணி சீனாவை 5 - 4 என்கிற கோல்கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த வெற்றிக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு. இறுதிச்சுற்றில் இந்தியா வென்றது என்பது மட்டுமல்ல, இந்த முறை ஆசிய ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி ஆரம்பம்முதலே கலந்துகொண்ட அத்தனை போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியது என்பதுதான் தனிச்சிறப்பு. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மகளிர் ஹாக்கி அணி குறிப்பிடும்படியான வெற்றிகளை அடையாமல் சற்று தளர்ந்த நிலையிலேயே காணப்பட்டு வந்தது. 1998 முதல் 2006 வரை தொடர்ந்து மூன்று காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் அணி பதக்கம் வென்றது. 2002 காமன்வெல்த் பந்தயத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சரி, 1982-இல் தங்கப் பதக்கத்தையும் 1998-இல் வெள்ளிப் பதக்கத்தையும் இந்திய மகளிர் அணி வென்றது.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த பல அணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து சர்வதேச ஹாக்கியில் தங்களுக்கென்று தனியிடம் பிடித்தன. ஆனால், இந்திய அணி 2006-க்குப் பிறகு காமன்வெல்த் ஹாக்கி போட்டிகளில் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியவில்லை. ஆசிய அளவில் ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளின் அணிகள் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தவண்ணம் இருந்தபோது இந்திய மகளிர் அணி எப்போதாவது ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெறுவதுடன் ஆறுதல் அடையும் நிலையில்தான் இருந்து வந்தது. இந்த ஆண்டு ஆசிய கோப்பையை இந்திய மகளிர் ஹாக்கி அணி வென்றிருப்பதில் இன்னொரு சிறப்பு உண்டு.
இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி சீனாவை ஒருமுறைகூட தோற்கடித்தது இல்லை. இந்தத் தடவை இந்தியாவும் சீனாவும் மோதிய இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. குழுக்கள் அளவில் நடந்த தகுதிச்சுற்றில் முதலாவதாகவும் இறுதிச்சுற்றில் இரண்டாவதாகவும் சீன அணியை இந்திய மகளிர் அணி தோற்கடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இறுதிக்கு முந்திய சுற்றில் 4-க்கு 2 கோல் என்கிற வகையில் ஜப்பான் அணியையும் இந்திய மகளிர் அணி தோற்கடித்திருக்கிறது.
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் என்பதைப் பதிவு செய்தாக வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் அவரை இந்திய மகளிர் ஹாக்கிஅணியின் பயிற்சியாளராக நியமித்தபோதே இந்த முறை எப்படியும் ஆசிய கோப்பையைக் கைப்பற்றுவது என்கிற முனைப்புடன் இந்திய அணியை அவர் தயார் செய்யத் தொடங்கினார். 
அதுமட்டுமல்லாமல், பெனாலிட்டி கார்னர் திறமையாளர் குர்ஜித் கௌரின் வளர்ச்சி இந்திய அணிக்கு வலு சேர்த்தது. 22 வயது குர்ஜித் கௌர் எட்டு கோல்களை அடித்து இந்திய வெற்றியை உறுதிப்படுத்தினார். ஐந்து கோல்கள் அடித்த நவ்ஜோத் கெளரும், கோல்கீப்பரான சவீதா புனியாவும் இந்திய அணியின் சாதனை வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய மகளிர் ஹாக்கி பந்தயத்தின் இறுதி ஆட்டத்தில் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவைத் தோற்கடித்து இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியதற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவீதா புனியாவைப் பாராட்டியாக வேண்டும். ஹரியாணாவைச் சேர்ந்த சுனிதா சமயோசிதமாகவும் திறமையாகவும் கோல்கீப்பராகச் செயல்பட்டதால்தான் இந்தச் சாதனை சாத்தியமானது. ஹாக்கி ஆட்டத்தின் உச்சகட்டமாக அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் சீன வீராங்கனையின் கடைசி கோல் முயற்சியைச் சிறப்பாகத் தடுத்து, அணியை வெற்றி பெறச் செய்த சவீதா அந்தப் போட்டியின் சிறந்த கோல்கீப்பர் என்ற பெருமையையும் அடைந்திருக்கிறார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசுப் பணிக்காக முயற்சித்து வரும் சவீதா புனியாவுக்கு 27 வயதாகிறது. தான் இதுவரை தந்தையின் வருமானத்தைத்தான் சார்ந்திருப்பதாகவும் வீராங்கனைகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கும் பணி வழங்கப்படும் என்கிற அதிகாரிகளின் உறுதியை நம்பித்தான் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் சவீதா புனியா.
இந்தியாவுக்குப் பெருமை தேடித் தருபவர்களைக் கையேந்தி நிற்க வைக்கிறோமே, இது நியாயமாகப்படுகிறதா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com