இன்றுமா கொத்தடிமைத்தனம்?

கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தில்

கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட 25 கொத்தடிமைகள் பல்வேறு தோட்டங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அப்படி மீட்கப்பட்ட கொத்தடிமைகள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள், ரூ.500 முதல் ரூ.2000 வரை கடனாகக் கொடுக்கப்பட்டு, கொத்தடிமைகளாக ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். சம்பளமோ, கூலியோ இல்லாமல் காலவரையின்றி அவர்கள் தோட்ட வேலையிலும், விவசாயத்திலும் பயன்படுத்தப்பட்டனர் என்று தெரிகிறது.
வெள்ளையர்களால் ஆப்பிரிக்காவிலிருந்து படிப்பறிவில்லாத கருப்பின மக்கள் கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டு, உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்கா எனும் நாடு. தமிழகத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பிஜி தீவின் கரும்புத் தோட்டங்களில் கொடுமைப்படுத்தப்பட்ட வரலாற்றை மகாகவி பாரதி 'அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே' என்று உருக்கமாகப் பதிவு செய்திருப்பார்.
நமது தமிழகத்திலிருந்து கங்காணிகளால் கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்தான் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களையும் ரப்பர் தோட்டங்களையும் உருவாக்கியவர்கள் என்பது வரலாற்று உண்மை. அதேபோல, பர்மாவுக்கும் மலேசியாவுக்கும்கூட இங்கிருந்து தோட்ட வேலை செய்வதற்காக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட காலம் ஒன்றிருந்தது.
ராஜஸ்தானில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 25 தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் நூற்றாண்டுகள் கடந்தும்கூட கொத்தடிமை முறையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. நல்ல வேலை வாய்ப்புடன், வசதியான வாழ்க்கை கிடைக்குமென்கிற நம்பிக்கையை ஊட்டி மத்தியப் பிரதேசத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளிகள், கடந்த ஏழு ஆண்டுகளாக தினந்தோறும் 15 மணி நேரம் தோட்ட வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். 
அவர்கள் தங்களது கடனைத் திருப்பி அடைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தரப்பட்டதெல்லாம் கோதுமையும், சமையலுக்குத் தேவையான சில அடிப்படைப் பொருள்களும் மட்டுமே. ஆண்டுக்கு ஒருமுறை முதலாளிகளின் வீட்டில் உள்ள பழைய துணிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அவர்கள் உழைப்பது போதாதென்று, அவர்களது குழந்தைகள் தோட்ட உரிமையாளர்களின் வீடுகளில் சம்பளமில்லாமல் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தப்பட்டனர். 
கொத்தடிமை முறை என்பது உலகின் மிகப்பழமையான அடிமை முறை. 2016 உலக அடிமைத்தனக் குறியீட்டின்படி உலகிலேயே மிக அதிகமாக அடிமைகள் காணப்படுவது இந்தியாவில்தான். உலகளாவிய அளவில் ஏறத்தாழ 4.6 கோடி பேர் கொத்தடிமைகளாக இருப்பதாகவும் அவர்களில் 1.8 கோடி பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்திய அரசிடம் இதுகுறித்து எந்தவிதப் புள்ளிவிவரமும் இல்லை என்பது துரதிருஷ்டமானது. 
2030க்குள் இந்தியாவிலுள்ள கொத்தடிமைகளை அடையாளம் கண்டு, மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கான திட்டங்களை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் இப்போதுதான் திட்டமிடவே தொடங்கியிருக்கிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து விவாதம் எழுந்தது. இந்தியாவில் கொத்தடிமை முறையை முற்றிலுமாக அகற்றுவதற்கு மத்திய அரசு ஒரு மும்முனை செயல் திட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்புக்கான இணை அமைச்சர் (தனி பொறுப்பு) பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். அது குறித்தான விவரங்களை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் இன்னும் முறைப்படுத்தி, செயல்படுத்தத் தொடங்கியதாகத் தெரிவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஊழியர்களோ, தொழிலாளர்களோ கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதை தடை செய்கிறது. அவசர நிலை சட்டத்தின்போது அன்றைய இந்திரா காந்தி அரசு கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் முழு மூச்சுடன் ஈடுபட்டது. கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம் 1976, இது தொடர்பான வழங்குகளை மாவட்ட நீதிபதிகளே கையாளும் அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கொத்தடிமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்க வழிவகை செய்யப்பட்டது. 
1978 முதல் மத்திய அரசு கொத்தடிமைகள் மறுவாழ்வுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்படி மத்திய, மாநில அரசுகள் தலா ரூபாய் 10 ஆயிரம் கொத்தடிமைகளின் மறுவாழ்வுக்காக ஒதுக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனாலும்கூட கொத்தடிமைகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்படும்போது, மாநில அரசுகள் அவர்கள் மறுவாழ்வுக்குக் கூடுதல் நிதி ஒதுக்குகின்றன.
கடந்த 40 ஆண்டுகளில் கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு சமூகப் பொருளார ஏற்றத்தாழ்வுகள் ஒரு முக்கியமான காரணம். கிராமப் புறங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதும், ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதும், ஊரகப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதும் இதற்கு முக்கியமான மூன்று காரணங்கள். மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பும், வேலை செய்யும் இடங்களில் அவர்கள் நடத்தப்படும் சூழலும் உறுதிப்படுத்தப்படுவது அவசியம். 
இன்னும்கூட கொத்தடிமைகளாக வேலையாட்களை வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படாமல் அதை சமூக அந்தஸ்தாகக் கருதுவதுதான் மிகப்பெரிய சோகம். கொத்தடிமை முறை இந்தியாவில் இருக்கும் வரை இந்தியா தன்னை வளர்ச்சி அடைந்த நாடாகவோ, வல்லரசாகும் தகுதிபடைத்த நாடாகவோ கருதினால், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com