தவறு திருத்தப்படுகிறது!

சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஜி.எஸ்.டி. குழு 28% வரிவிதிப்புள்ள பொருள்களின் எண்ணிக்கையை 224-லிருந்து 50-ஆகக் குறைத்திருக்கிறது

சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஜி.எஸ்.டி. குழு 28% வரிவிதிப்புள்ள பொருள்களின் எண்ணிக்கையை 224-லிருந்து 50-ஆகக் குறைத்திருக்கிறது. 18% வரி உள்ள பொருள்களில் சில 12%-ஆகவும், 5%-ஆகவும் குறைக்கப்பட்டிருக்கின்றன.
 குவஹாட்டியில் கூடிய ஜி.எஸ்.டி. கூட்டத்தின் விளைவாக 200-க்கும் மேற்பட்ட பொருள்களின் சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த கூட்டத்தில் 27 பொருள்களுக்கும், கடந்த மே மாதம் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தியதன் பிறகு 100 பொருள்களுக்கும் இதுவரை வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களில் இதுவரை 180 பொருள்கள் உயர் வரிவிதிப்புப் பிரிவான 28%-லிருந்து குறைக்கப்பட்டிருக்கின்றன.
 அதிக வரிவிதிப்பிலிருந்து குறைந்த விதிப்புக்கு பொருள்களை மாற்றுவதால், வரி வருவாய் இழப்பு என்பது வெறும் மாயத்தோற்றம் மட்டுமே. குறைந்த வரிவிதிப்பின் மூலம் அதிக நிதியாதாரத்தைத் திரட்டுவது என்பதுதான் சரியான பொருளாதாரப் புரிதல் என்பதை அனுபவம் உணர்த்தியிருக்கிறது.
 மதுவிலக்கை அறிமுகப்படுத்துவதால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு அன்றைய சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த ராஜாஜியால் 1939-இல் கொண்டுவரப்பட்டதுதான் வருமான வரி என்கிற திட்டம். ஒவ்வொரு முறை ஒரு பொருள் கைமாறும்போதும் ரூபாய்க்கு ஒரு பைசா, அதாவது 1%, அரசுக்கு வரி செலுத்துவது என்கிற முறையை அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.
 வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, மூதறிஞர் ராஜாஜி வரிவிதிப்பு கூறிய கருத்து காலாகாலத்திற்கும் ஆட்சியாளர்கள் மனத்தில் இருத்தத்தக்கது. "வரி வசூலிப்பது என்பது பூவுக்கு சேதமில்லாமல் வண்டு தேனை எடுப்பது போன்றது' என்கிற அவரது கருத்தின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், பின்னால் வந்த அரசுகள் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக வரி விதிக்கத் தொடங்கிவிட்டன.
 மிக அதிகமான வரி விழுக்காடு பொதுமக்களின் வரி ஏய்ப்புக்குக் காரணமாகிறது. தாங்க முடியாத அளவுக்கு வருமான வரி, ஆக்ட்ராய் வரி, கலால் வரி, சுங்க வரி என்று வரிக்கு மேல் வரி போட்டு உற்பத்தியாளர்களையும் வியாபாரிகளையும் பொதுமக்களையும் மத்திய - மாநில அரசுகள் வருவாய்க்காகப் பிழிந்தெடுக்கத் தொடங்கிய நிலையில்தான், அனைத்து வரிகளையும் அகற்றிவிட்டு "ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி' என்கிற நோக்கத்துடன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே வரியாக ஆகாய விமானத்திலிருந்து அடுக்களை சாமான்கள் வரை 5%-மோ, 10%-மோ விதிக்கப்பட்டிருக்குமேயானால், மக்களும் சரி, வியாபாரிகளும் சரி ஜி.எஸ்.டி. முறையை வரவேற்றுக் கொண்டாடி இருப்பார்கள்.
 1,200 பொருள்களும், சேவைகளும் 0%, 5%, 12%, 18%, 28% என்று ஐந்து அடுக்கு வரிவிதிப்புக்கு ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டபோது உட்பட்டன. அறிமுகப்படுத்தப்பட்டபோது இருந்த வரிகள் 28% மேலான பொருள்களுக்கு இப்போது இல்லை. கடந்த ஜூலை மாதம் 28% வரிவிதிப்பில் இருந்த 250 பொருள்கள் இப்போது 50 பொருள்களாகக் குறைந்திருக்கின்றன. அதேபோல ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்கு ரூ.75 லட்சம் வரவு - செலவுள்ள நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இருந்தது போய், கடந்த அக்டோபரில் ரூ.ஒரு கோடியாக மாறி, இப்போது ஆண்டு வரவு - செலவு ரூ.1.5 கோடிக்கு மேலேயுள்ள நிறுவனங்கள் மட்டுமே ஜி.எஸ்.டி. வலைக்குள் வருகின்றன.
 இதிலிருந்து, ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தியபோது தெளிவான புரிதல் இல்லாமல் அவசரக் கோலத்தில் அறிமுகப்படுத்திய பிறகு இப்போது அரசு அனுபவத்தில் தனது தவறுகளை ஒன்றன் பின் ஒன்றாகத் திருத்திக்கொண்டு வருகிறது என்பது தெரிகிறது.
 ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இன்னும்கூடப் பல சிக்கல்களும் சிரமங்களும் காணப்படுகின்றன. பலமுனை வரிகளை அகற்றுவதும், வரிவிதிப்பை சீரமைப்பதும், வரி செலுத்துவதை சுலபமாக்குவதும்தான் ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் அடிப்படை நோக்கம். ஆனால், இதற்கான கணக்குத் தாக்கல் முறைகளிலேயே தேவையில்லாத விதிமுறைகளை நுழைத்து சாமானியர்கள் இந்த முறைக்கு மாறுவது என்பதையே சிக்கலாக்கி இருக்கிறார்கள்.
 ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் நடைமுறைச் சிக்கல்களுக்கு பயந்த பலர் தங்களது நிறுவனங்களை மூடி விட்டார்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல, கணக்குத் தணிக்கையாளர்களும், கணக்கெழுத்தர்களும் வைத்துக்கொள்ள முடியாத சிறு, குறு தொழில்முனைவோரும், வியாபாரிகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், அரசின் மீது வரி செலுத்துவோருக்கு ஆத்திரமும் எரிச்சலும்தான் அதிகரித்திருக்கிறது.
 உதாரணத்துக்கு, முன்பெல்லாம் சேவை வரியை, வாடிக்கையாளர்களிடமிருந்து வரியை வசூல் செய்த பிறகு அடைத்தால் போதும் என்கிற நிலை மாறி, இப்போது சேவைக்கான விலைப்பட்டியலை வாடிக்கையாளருக்கு வழங்கிவிட்டால், அவர் பணம் தந்தாலும், தராவிட்டாலும் ஜி.எஸ்.டி. வரி செலுத்தியேயாக வேண்டும். பணம் கிடைக்காத நிலையில், அதைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைச் சிக்கல்கள் தலைசுற்ற வைக்கின்றன. கணக்குத் தாக்கல் செலுத்துவதற்குத் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ரூ.100 பிழை செலுத்த வேண்டும் என்கிறது ஜி.எஸ்.டி. சட்டப் பிரிவு 123. இப்படி எத்தனை எத்தனையோ குறைபாடுகள்.
 ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைக்கு மக்கள் மன்றத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் உணர்ந்து இப்போதாவது மாற்றங்களைச் செய்கிறார்கள் என்பதில் ஆறுதல் அடைவதைத்தவிர, நமக்கு வேறுவழியில்லை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com