சட்டத்தின் கடமை!

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இப்படியொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்றும், வேண்டுமென்றே வதந்தியை கிளப்புவதாக இருக்கிறது என்றும் நீதிபதிகள் ஆர்,கே. அகர்வால், அருண் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வு கருத்துத் தெரிவித்திருக்கிறுது.
காமினி ஜெய்ஸ்வால் என்கிற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை அமைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் மட்டுமல்லாமல், நீதித்துறை சீர்திருத்த கோரிக்கை மையம் சார்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணும் இதேபோன்றதொரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இரண்டு தரப்பினரும் ஒரே கோரிக்கையை முன்வைத்து இருவேறு அமர்வுகளின் முன்னால் சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தது கடந்த வாரம் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை வெளிச்சம் போடுவதற்காக இப்படி ஒரே குறிக்கோளுக்காக இருவேறு அமர்வுகள் முன்னால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன என்கிற விமர்சனம் எழுந்தது.
லக்னௌவைச் சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளை, பிரசாத் மருத்துவக் கல்லூரியை நடத்தி வருகிறது. இந்தியாவிலுள்ள 46 கல்லூரிகளில் போதுமான தரமும் கட்டமைப்பு வசதியும் இல்லை என்பதால் இந்திய மருத்துவ கவுன்சிலால் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று. 
ஒடிஸா உயர்நீதிமன்றத்தில் 2004 முதல் 2010 வரை நீதிபதியாக இருந்தவர் இஷ்ரத் மஸ்ரூர் குத்துசி என்பவர். இவரும் பாவனா பாண்டே என்பவரும் பிரசாத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கையூட்டுக் கொடுத்து தங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் பிரசாத் அறக்கட்டளை நிர்வாகிகள். 
இதுதொடர்பாக விசாரணையும் சோதனையும் தில்லி, புவனேசுவரம் உள்ளிட்ட எட்டு இடங்களில் நடந்தன. ஏறத்தாழ ரூ.1.90 கோடி கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கு இப்போதும் மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணையில் இருக்கிறது என்பது மட்டுமல்ல, ஒடிஸா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்துசி உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தங்களது மருத்துவக் கல்லூரியின் மீதான தடையை விலக்கக் கோரி பிரசாத் கல்வி அறக்கட்டளையின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, அது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அமர்வால் விசாரிக்கப்பட்டு அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேரடியான தொடர்பு இல்லை என்றாலும், அவரது தலைமையின் கீழான அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட்டதால் இந்த வழக்குத் தொடர்பான எந்த ஒரு மனுவின் மீதும் விசாரணையில் தலைமை நீதிபதி பங்குகொள்ளக் கூடாது என்பது வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணின் வாதம். 
அதற்குக் காரணம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது தனக்குச் செல்வாக்கு இருக்கிறது என்று கைது செய்யப்பட்ட ஒடிஸா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கூறியிருக்கும் நிலையில், அந்த அமர்வில் இடம்பெற்றவர்கள் விசாரணையில் இடம்பெறக் கூடாது என்கிறார்கள் மனுதாரர்கள். அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சந்தேகம் எழுப்பவோ, குறை காணவோ இல்லை. அதே நேரத்தில் அவர் தலைமையிலான அமர்வில்தான் பிரசாத் மருத்துவக் கல்லூரி வழக்கு நடைபெற்றது என்பதாலும், அந்த அமர்வில் தொடர்புடைய நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்து தீர்ப்புப் பெறும் முயற்சி நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்படும் நிலையில், தங்கள் மனுவின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்வால் விசாரிக்கப்படக் கூடாது என்பதுதான் அவர்களது கோரிக்கை.
இந்த வழக்கைப் பொருத்தவரை, நீதிமன்றத்தில் தேவையில்லாமல் சலசலப்பை ஏற்படுத்தவும், நீதித்துறையின் நேர்மையின் மீது சந்தேகத்தை எழுப்பவதும்தான் மனுதாரர்களின் உள்நோக்கம் என்று மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இப்படி ஒரே காரணத்திற்காக, ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் இருவேறு மனுக்களை தாக்கல் செய்வது கண்டனத்துக்குரியது என்றும் அந்த அமர்வு கூறியிருக்கிறது. மனுவை நிராகரித்திருக்கும் உச்சநீதிமன்ற அமர்வு மனுதாரர்களான வழக்குரைஞர்கள் காமினி ஜெய்ஸ்வால், பிரசாந்த் பூஷண் இருவரையும் நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டித்திருக்க முடியும். ஆனால், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. 
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது மக்கள் மன்றத்தில் சந்தேகம் எழுகின்ற விதத்தில் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், இந்தப் பிரச்னையை இத்துடன் முடித்துக்கொள்வது சரியாக இருக்காது. மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு தவறு செய்தவர்கள், நீதிபதிகளாகவே இருந்தாலும்கூட, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் நீதித்துறையின் மரியாதையைக் குலைப்பதற்காகவே எழுப்பப்பட்டவை என்று கூறி ஒதுக்கிவிடாமல், நீதித்துறை குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால், எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகங்கள் நீதித்துறையின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com