பாதுகாப்புக்கு முன்னுரிமை!

இந்திய மக்களைப் போலவே, அந்த மக்களால் இயக்கப்படும் ரயில்வே

இந்திய மக்களைப் போலவே, அந்த மக்களால் இயக்கப்படும் ரயில்வேத் துறை மெதுவாகச் செயல்படுவதும், நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் வியப்பை அளிக்கவில்லை. முந்தைய பா.ஜ.க. பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் தங்க நாற்கர சாலைத் திட்டத்தைப்போல, இந்தியாவை அதிவேக ரயில் தொடர்பால் இணைப்பது என்கிற தனது கனவை, 2014-இல் பிரதமரான போது நரேந்திர மோடி தெரிவித்தார். அவரது கனவின் விளைவுதான் ஆமதாபாதுக்கும் மும்பைக்கும் இடையே ஜப்பான் நாட்டு உதவியுடன் செயல்படுத்த இருக்கும் புல்லட் ரயில் திட்டம். 
கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரயில் நிலையங்களை நவீனப்படுத்துதல் நடந்திருக்கிறதே தவிர, பெரிய அளவில் ரயில்களின் செயல்பாட்டிலோ, சமிக்ஞைகள் (சிக்னல்) தொடர்பான தொழில்நுட்ப மேம்பாட்டிலோ, தண்டவாளத்தைப் புதுப்பிப்பதிலோ முனைப்பு காட்டப்பட்டதாகத் தெரியவில்லை. 
பியூஷ் கோயல் ரயில்வே அமைச்சராகப் பதவி ஏற்றது முதல், ரயில்வேயின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடனும், தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலுக்குள் இந்திய ரயில்வேயில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் ஆளும் பா.ஜ.க.வுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் என்று பிரதமரும், ரயில்வே அமைச்சரும் கருதுகிறார்கள் போல் தெரிகிறது. 
இந்திய ரயில்களின் சராசரி வேகம், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது மிகமிக குறைவு. அதை அதிகரிக்காத வரை ரயில்வேத் துறை எடுக்கும் எந்த முயற்சியும் பெரும் அளவில் வெற்றி அளிப்பது சாத்தியமல்ல. 700 ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, பயண நேரத்தை குறைப்பது என்று இந்திய ரயில்வே முடிவெடுத்திருப்பதற்கு இதுதான் காரணம்.
ஏற்கெனவே சில ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுவிட்டன. சில விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட இருக்கின்றன. தொடர்ந்து தாமதமாக பயணிக்கும் ரயில்களின் புள்ளிவிவரத்தைத் தொடர்ந்து அவை குறித்த நேரத்தில் இலக்கை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
பயண நேரத்தைக் குறைப்பதற்கான முனைப்பில் இறங்கி இருக்கிறது ரயில்வே நிர்வாகம். ரயில் என்ஜின்கள் முன்னுக்குப்பின் மாற்றப்படும் நேரத்தைக் குறைப்பதும், சிறிய ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும் நேரத்தை குறைப்பதும், பயண நேரத்தை குறைப்பதற்கான வழிகள் என்று ரயில்வே நிர்வாகம் கருதுகிறது. பயணிகள் அதிகம் ஏறுவதும், இறங்குவதும் இல்லாத ரயில் நிலையங்களில் விரைவு, அதி விரைவு ரயில்கள் நிற்பது இனிமேல் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
இவையெல்லாம் இருந்தாலும்கூட, அதனால் ரயில்களின் பயண நேரத்தை பெரிய அளவில் குறைத்துவிட முடியம் என்று தோன்றவில்லை. ரயிலின் வேகத்தை அதிகரிக்காமலும், தொழில்நுட்ப ரீதியாக சமிக்ஞை தொழில்நுட்பத்தை மேம்படுத்தாமலும், தண்டவாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டு புதிதாகப் போடப்படாமலும், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயண நேரத்தைக் குறைக்க முடியும் என்றும் தோன்றவில்லை. 
ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது என்பது வரவேற்புக்குரிய முடிவாக இருந்தாலும், போதுமான அடிப்படை முன்னேற்பாடுகளைச் செய்யாமல் எடுக்கப்படும் முயற்சியாக இருந்துவிடக் கூடாது. லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரயில்கள் மேம்படுத்தப்பட்டு வேகம் அதிகரிக்கப்பட்டபோது, ரயில் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. அதனால், ரயில்வேத் துறையின் வருவாயும் கணிசமாக அதிகரித்தது. சரக்கு ரயில்கள் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. ஆனால், அதன் தொடர் விளைவாகத் தண்டவாளங்கள் பழுதுபட்டு, பல ரயில்கள் விபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய அவலம் ஏற்பட்டது.
ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது என்று திட்டமிடும்போதோ, அதை செயல்படுத்தும்போதோ, ரயில்வே நிர்வாகத்தின் கவனம் பயணிகளின் பாதுகாப்பாகத்தான் இருக்க முடியுமே தவிர, ரயில்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதோ, பயண நேரத்தைக் குறைப்பதோ மட்டுமாக இருக்க முடியாது. இதைப் பல ரயில்வேத் துறை அமைச்சர்களும், ரயில்வே உயர் அதிகாரிகளும் கவனத்தில் கொள்ளாததன் விளைவுதான், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா மிக அதிகமான ரயில் விபத்துகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய ரயில்வே ஏறத்தாழ 30 பெரிய ரயில் விபத்துகளைச் சந்தித்திருக்கிறது. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த 2016 - 17 நிதியாண்டில்தான், கடந்த 10 ஆண்டுகளில் ரயில் தடம் புரண்டதால் மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் பல்வேறு சேவைகளில் கவனம் செலுத்தி மாற்றங்களைக் கொண்டுவர முற்பட்டார். ஆனால், பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே முனைப்பு காட்டாமல் விட்டுவிட்டது. அதன் விளைவுதான் மிக அதிகமான விபத்துகள். 
இப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அதை நினைவில் நிறுத்தி, பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முற்படுவார் என்று எதிர்பார்க்கிறோம். விரைவு ரயிலும், குறித்த நேரத்தில் விரைந்து சென்றடைவதும் வேண்டும்தான். ஆனால், அதைவிட முக்கியம் உயிருக்குப் பாதுகாப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com