மூச்சு முட்டுகிறது!

தலைநகர் தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காணப்படும் புகை மூட்டத்தால் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது

தலைநகர் தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காணப்படும் புகை மூட்டத்தால் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இதன் தொடர்விளைவாக இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு வடமாநிலங்களில் காணப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தந்திருக்கிறது. இதனால், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.
 உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று என்று கருதப்படும் இந்தியா, தலைநகரில் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு காரணமாக பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களால் இப்போது தவிர்க்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும் தில்லியில் பணிபுரிவது பாதிக்கும் என்று வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரிபவர்கள்கூடக் கவலைப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
 மிகவும் கவலையை ஏற்படுத்தும் இந்த நிலைமைக்குக் காரணம், இந்தியாவின் வாயுமண்டலத்தில் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரித்து வருவதுதான். "சைன்டிபிக் ரிப்போர்ட்ஸ்' என்கிற அறிவியல் அறிக்கைகளின் இதழ், இதுகுறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்டிரேஷனும், அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகமும் இந்த ஆய்வை இணைந்து நடத்தின. அதன்படி, உலகில் மிக அதிகமாக ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் வாயுவைக் காற்று மண்டலத்தில் கலக்கும் நாடான சீனாவை பின்தள்ளிக்கொண்டு இந்தியா முன்னேறியிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சீனாவின் வாயு மண்டல ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் அளவு கடந்த பத்தாண்டுகளில் 75% குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், இந்திய வாயு மண்டலத்தில் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடின் அளவு 50% கூடியிருக்கிறது.
 ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் வாயு என்பது சுற்றுச்சூழலையும் உயிரினங்களின் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. புகைமூட்டம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி காட்சிக் குறைவை ஏற்படுத்துகிறது. மூச்சுக் குழாய்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, மனிதர்களின் நுரையீரலை பலவீனப்படுத்துகிறது. குறிப்பாக, குழந்தைகள், வயதானவர்கள், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காற்றில் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் அதிகரிக்கும்போது உடனடியாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதை வெறும் இருமல், ஜலதோஷம் என்று கருதிப் பலரும் அசட்டையாக இருந்துவிடுகின்றனர். ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடுக்கு அமிலத்தன்மை இருப்பதால், அது குழந்தைகள், முதியோரின் நுரையீரலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
 ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களாகவே இருந்தாலும்கூட, தொடர்ந்து ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் வாயுவின் தாக்கத்துக்கு ஆளாகும்போது, நுரையீரலின் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது. நுரையீரலின் செயல்பாடு முழுமையாக இல்லாமல் போகும்போது, அது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. குறிப்பாக, இருதயம் தொடர்பான பிரச்னை இருப்பவர்களின் பாதிப்பு அதிகரித்து மாரடைப்பு உள்ளிட்ட தாக்கங்களுக்கு உள்ளாகும் நிர்பந்தம் ஏற்படுகிறது. காற்று மண்டலத்தில் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடின் அளவு கணிசமாக அதிகரித்துவிட்டால், செடி-கொடிகளும், மரங்களும்கூட பாதிக்கப்படும் எனும்போது, மனிதர்கள் பாதிக்கப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?
 ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் வாயுமண்டலத்தில் அளவுக்கதிகமாகக் கலக்கும்போது, காற்றிலிருக்கும் நீர்த்திவிலைகளுடன் கலந்து விடுகிறது. அவ்வாறு ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் கலந்த நீர்த்திவிலைகள் ஆவியாகி மேலே சென்று மழையாகத் திரும்பி வரும்போது அது, அமில மழையாகத் பொழிகிறது. அதன்விளைவாக, நீர்நிலைகள் அமிலப்பட்டு அதனால் நீர்வாழ் உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இதனால், சூழலியல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. பல்லுயிர்ப் பெருக்கமும் தடைபடுகிறது. ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடின் அமிலத்தன்மை நினைவுச் சின்னங்களையும், கற்களால் ஆன கட்டடங்களையும்கூட அரித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 வாயு மண்டலத்தில் இருக்கும் 99% ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடுக்கு நாம்தான் காரணம். நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை எரிக்கும்போது அதிக அளவில் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் காற்றுமண்டலத்தில் கலக்கிறது. தலைநகர் தில்லியைச் சுற்றி 300 கி.மீ. சுற்றளவில் 13 அனல் மின்நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றில்கூட ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடையும், ஏனைய நச்சு வாயுக்களையும் கட்டுப்படுத்த எந்தவொரு ஏற்பாடும் கிடையாது. இந்தியாவின் மின்உற்பத்தியில் 72% அனல் மின்நிலையங்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
 சீனாவும்கூடச் சுற்றுச்சூழல் குறித்தும், காற்றுமாசு குறித்தும் பிரச்னைகளை எதிர்கொள்கிறது என்றாலும், 95% அனல் மின்நிலையங்களில் மாசு கட்டுப்பாட்டுக்கான அமைப்புகளை நிறுவியிருக்கிறது. இந்தியாவில் 10% அனல் மின்நிலையங்களில்தான் அவை நிறுவப்பட்டிருக்கின்றன.
 வடநாட்டில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு காணப்படும் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடால் ஏற்பட்டிருக்கும் புகைமூட்டம் குறித்து நாம் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், மிகப்பெரிய உடல்நலப் பிரச்னையாக இது மாறப்போகிறது. இது எப்போதோ வரப்போகும் பிரச்னையாக அல்லாமல், இப்போதே வந்துவிட்டிருக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து நாம் உடனடி நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com