தொடரும் தவறு...!

நீண்ட தாமதத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் குளிர்கால

நீண்ட தாமதத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்த 22 நாள் கூட்டத்தொடரில், அவை 14 அமர்வுகளைக் காண இருக்கிறது. 
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்குவது வழக்கம். உறுப்பினர்கள் முன்கூட்டியே தங்களது கேள்விகளைத் தயார் செய்வதற்கும், தலைநகர் தில்லிக்கு வந்து சேர்வதற்கும் வசதியாக இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பே அதாவது, அக்டோபர் கடைசி வாரத்திலேயே இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.
இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையேயான கால அளவு ஆறு மாதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று அரசியல் சாசனம் வரம்பு விதித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ஆம் தேதிதான் முடிவடைந்தது என்கிற நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரை கூட்டாமலேகூட அரசு நேரிடையாக பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்டுவதில் எந்த அரசியல் சாசன முறைகேடும் இல்லை என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் தெரிவிக்கும் கருத்து விபரீதமானது.
ஆண்டுதோறும் பட்ஜெட், மழைக்காலம், குளிர்காலம் என்று மூன்று பிரிவுகளாகக் கூட்டத்தொடர்களை அமைத்துக்கொள்ளும் முறை 1955 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தொடர்களுக்கு இடையே இடைவெளி அதிகமில்லாமல் இருந்தால்தான், ஆட்சியாளர்களுக்கு சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றவும், எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்துக் கேள்விகளை எழுப்பி விவாதத்துக்கு வழிகோலவும் முடியும் என்பதால்தான் இப்படியொரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரதமரும் ஏனைய மத்திய அமைச்சர்களும் மூத்த பாஜக தலைவர்களும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல உறுப்பினர்கள் ஒரு மாநிலத்தில் பிரசாரத்திற்காகச் செல்கிறார்கள் என்பதற்காக, நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரே தள்ளிப்போடப்படுகிறது என்பது எப்படி சரி?
நாடாளுமன்றம்தான் ஜனநாயக அமைப்பின் வெளிப்படையான அடையாளம். கடந்த பத்து, இருபது ஆண்டுகளாகவே பல ஜனநாயக நெறிமுறைகளும் நாடாளுமன்ற நடைமுறைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தருவது மிகவும் குறைவாக இருக்கிறது. அவர் விவாதங்களில் கலந்துகொள்ளவில்லை என்றும், கேள்வி
களுக்குப் பதில் அளிப்பதில்லை என்றும் ஏற்கெனவே எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு முந்தைய பிரதமர்கள் அனைவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது தவறாமல் மக்களவையிலோ மாநிலங்களவையிலோ கலந்துகொள்வதையும், விவாதங்களையும் விமர்சனங்களையும் கேட்டுக்கொள்வதையும், எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இந்திய நாடாளுமன்றம் ஏனைய ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அமர்வுகள்தான் கூடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே எல்லாக் கூட்டத்தொடர்களும் முடக்கப்படுவதும் விவாதங்கள் நடைபெறாமல் கூச்சல்குழப்பத்தில் ஆழ்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டுவது தவறு. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதும், நடத்துவதும் மசோதாக்களைத் தாக்கல் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் அரசின், ஆளும் கட்சியின் கடமையே தவிர, எதிர்க்கட்சிகளுடையது அல்ல. முந்தைய மன்மோகன்சிங் ஆட்சியில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையை முடக்கியபோதும் இதே கருத்தைத்தான் 'தினமணி' தனது தலையங்கத்தில் முன்வைத்தது.
2016-இல் 70 அமர்வுகள் என்றால் இந்த ஆண்டில் நாடாளுமன்றம் 48 அமர்வுகள்தான் கூடியிருக்கிறது. இதையே ஆண்டுக்கு 135 அமர்வுகள் கூடிய முதலாவது மக்களவையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எந்த அளவுக்கு நமது நாடாளுமன்றச் செயல்பாடு வலுவிழந்திருக்கிறது என்பது புரியும். நாடாளுமன்றம் என்பது விவாதிக்கவும் கேள்விகளை எழுப்பவும் அரசின் தவறுகளை வெளிச்சம் போடவும் மட்டுமானதல்ல. சட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும்கூட நாடாளுமன்றம் கூடியாக வேண்டும். நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் அரசுக்கு அக்கறை இல்லை என்று சொன்னால், மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் சட்டமாக்கவும் அரசிடம் எதுவும் இல்லை என்று கருத நேரிடும்.
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நடந்துகொண்டிருக்கும்போது, நாடாளுமன்றம் கூடினால் அதில் ஜி.எஸ்.டி. குறித்தும் அரசின் பல செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படக் கூடும். அவை குஜராத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராகப் பிரதிபலிக்கக்கூடும் என்பதுதான் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரைத் தள்ளி வைத்ததன் காரணம் என்று கூறப்படுமானால் அது மிகவும் வருத்தத்திற்குரியது. 
இதற்கு முன்னால் இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது இதேபோல தேர்தல் காரணங்களுக்காகக் கூட்டத்தொடரைத் தள்ளி வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை. காங்கிரஸ் ஆட்சி செய்த தவறுகளுக்காகத்தானே அவர்கள் தண்டிக்கப்பட்டு, மக்கள் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்? அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தின் அட்டவணையில் மாற்றம் கொண்டு வருவது என்பது, நிர்வாகத்தைவிட அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்தான் ஆளும்கட்சி முனைப்பாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com