நாய் வால் நிமிராது!

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில்

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஹஃபீஸ் சயீதை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்து பாகிஸ்தான் நீதிமன்றம், உத்தரவிட்டிருப்பது எந்தவித அதிர்ச்சியையோ, வியப்பையோ ஏற்படுத்தவில்லை. ஆரம்பம் முதலே அவரது கைதும், அவரை வீட்டுக் காவலில் வைத்திருந்ததும் வெறும் கண்துடைப்புதான் என்பது உலகத்துக்கே தெரியும்.
ஹஃபீஸ் சயீது மீது எந்தவொரு பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பொது ஒழுங்குக்குப் பங்கம் விளைவிக்க முயன்றார் என்கிற வலுவில்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர்மீது குறிப்பிட்ட எந்தவிதக் குற்றச்சாட்டும் அரசால் முன்வைக்க முடியாததைக் காரணம் காட்டி, இப்போது பாகிஸ்தான் நீதிமன்ற நீதிபதிகள் அவரது நான்காண்டு வீட்டுக் காவலை விலக்கி இருக்கின்றனர்.
1990-இல் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை உருவாக்கியதைத் தொடர்ந்து, பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்கான திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவதிலேயே சயீதின் கவனம் முழுவதும் இருந்தது. 1993 முதல் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியவர் ஹஃபீஸ் சயீது என்று அமெரிக்க உளவுத்துறையின் கோப்புகள் தெரிவிக்கின்றன. 2001 நாடாளுமன்றத் தாக்குதலுக்கும், 2006-இல் மும்பை ரயில் நிலையத்தில் நடந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலுக்கும் லஷ்கர்-ஏ-தொய்பா காரணமாக இருந்திருக்கிறது. 2008 மும்பை தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க உள்துறை இவரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவித்தது.
2001 டிசம்பர் 13 இந்திய நாடாளுமன்றத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, டிசம்பர் 21-ஆம் தேதி பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட ஹஃபீஸ் சயீது மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து மே மாதம் கைது செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். 2006 மும்பை ரயில் நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, லாகூர் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 28-ஆம் தேதியே விடுதலை செய்யப்பட்டு விட்டார். அதே நாள் மீண்டும் கைது செய்யப்பட்டாலும், மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபரில் வெளியில் வந்துவிட்டார்.
இப்படி ஹஃபீஸ் சயீது பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்படுவதும், நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிடுவதும் தொடர்கதை. இதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவமும், ராணுவத்தை அனுசரித்து நடக்கும் நீதித்துறையும் இயங்குகின்றன என்பதுதான் உண்மை. ஹஃபீஸ் சயீதை நீதிமன்றம் விடுவித்திருப்பதன் பின்னணியில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் தலைமைக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் அதிகாரப் போட்டிதான் காரணம் என்றுகூடச் சொல்லலாம்.
ஹஃபீஸ் சயீதின் மீது வலுவான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டைப் பதிவு செய்யவோ, அதனடிப்படையில் அவரைக் கைது செய்யவோ முடியவில்லை என்பது, நவாஸ் ஷெரீபின் கரம் வலுவிழந்திருக்கிறது என்பதன் அறிகுறி. அதேபோல, நீதிமன்றம் சயீதை விடுவித்திருப்பது பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கை உணர்த்துகிறது.
நவாஸ் ஷெரீபின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி இரண்டையுமே வலுவிழக்கச் செய்வது என்பதுதான் ராணுவத்தின் திட்டம். இவற்றிற்கு மாற்றாகப் பல சிறிய கட்சிகளை ராணுவம் மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சியும் அதில் ஒன்று. லஷ்கர்-ஏ-தொய்பாவையே ஓர் அரசியல் இயக்கமாக மாற்றும் திட்டத்துக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆசி இருக்கிறது. 
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவால் விடுதலை செய்யப்பட்டிருக்கும். ஹஃபீஸ் சயீது தனது தீவிரவாத முகத்துக்கு மேல் அரசியல்வாதி முகமூடி அணிந்து கொண்டாலும் வியப்படையத் தேவையில்லை.
ஹஃபீஸ் சயீது தண்டிக்கப்பட்டால், பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்று பொருள். ராணுவத்தால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுபவைதான் லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள். இந்த அமைப்புகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டிருக்கிறது அந்த நாட்டு ராணுவம். அதனால், ஹஃபீஸ் சயீது விடுவிக்கப்பட்டது எதிர்பாராததல்ல.
ஒவ்வொரு முறை ஹஃபீஸ் சயீது விடுவிக்கப்படும்போதும், அடுத்த சில வாரங்களில் எங்கேயாவது தீவிரவாதத் தாக்குதல் நடப்பது என்பது கடந்தகால அனுபவம். ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும், 
ஈரானில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்டிருக்கும் சபாஹர் துறைமுகமும் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பதில் நாம் கவனமாக இருந்தாக வேண்டும்.
ஹஃபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியையும் கைப்பற்றினால், பாகிஸ்தானில் இதுவரை அரசு ஆதரவுடன் பயங்கரவாதம் இருந்ததுபோய் வருங்காலத்தில் பயங்கரவாதிகளால் அரசு நடத்தப்படும் நிலைமை ஏற்படக்கூடும். அதுதான் கவலையாக இருக்கிறது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com