ஜனநாயக முரண்!

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர்

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகிய இருவரும் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்பு தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இப்போது தேர்தல் ஆணையமும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 2018-இல் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தத் தயார் நிலையில் தாங்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருந்தாலும்கூட ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது நடைமுறை சாத்தியமாகத் தோன்றவில்லை.
இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது புதிதொன்றும் அல்ல. 1967 வரை நடந்த பொதுத் தேர்தல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்தே நடத்தப்பட்டன. கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருந்தாலும்கூட, அவை பொதுத் தேர்தலாகவே நடத்தப்பட்டன. 1967-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி வலுவிழந்து, காங்கிரஸ் அல்லாத பல கட்சிகளும் கூட்டணிகளும் வெவ்வேறு மாநிலங்களில பதவி ஏற்றதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் நிலையற்றதன்மை ஏற்பட்டதன் விளைவாக, ஆட்சி கவிழ்வதும் சட்டப்பேரவைக்குத் தனியாக தேர்தல் நடத்தப்படுவதும் வழக்கமாயின. 1977-க்குப் பிறகு பல மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் இணையாமல் தனியாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் போக்கு நிலைத்து விட்டது.
ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவது என்பது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைவர்களால் நீண்டகாலமாகவே வற்புறுத்தப்பட்டு வந்திருக்கிறது. துணைப் பிரதமராக வாஜ்பாயி அரசில் இருந்தபோது, எல்.கே. அத்வானி இதுகுறித்துப் பலமுறை ஆதரித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார். 
1999-இல் வாஜ்பாய் அரசால் பணிக்கப்பட்ட சட்டக் கமிஷன் அறிக்கை, ஒரே நேரத் தேர்தலைப் பரிந்துரைத்திருந்தது. 
ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை உறுதிப்படுத்த, அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது, கூடவே மாற்று அரசுக்கான நம்பிக்கைத் தீர்மானத்தையும் சேர்த்து நிறைவேற்றியாக வேண்டும் என்று சட்டக் கமிஷன் பரிந்துரைத்திருந்தது. இதன் மூலம் மாற்று அரசுக்கான பெரும்பான்மை உறுதிப்படுத்தப்படாமல் ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியமல்லாத நிலைமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால், ஆட்சி மாறினாலும் ஐந்து ஆண்டுகள் அவை கலைக்கப்படாமல் தனது பதவிக்காலத்தை உறுதி செய்யும்.
2015 டிசம்பர் மாதம் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவும், மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதைப் பரிந்துரைத்திருந்தது. அதற்கு அந்தக் குழு சில காரணங்களைப் பட்டியலிட்டிருந்தது. 
அதில் முக்கியமான காரணமாகத் தேர்தலுக்காக மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும்போதும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதால் அரசின் கொள்கைத் திட்டங்கள் முடக்கப்படுகின்றன என்பதும், அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படுகின்றன என்பதும் அந்தக் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
சுதர்சன நாச்சியப்பன் குழு இன்னொன்றையும் சுட்டிக்காட்டியிருந்தது. இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 16 மக்களவைகளில் 7 அவைகள் பதவிக்காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் பெரும்பாலான சட்டப்பேரவைகள் தங்களது பதவிக்காலத்தை முழுமையாக கடந்திருக்கின்றன என்பதையும் பதிவு செய்திருந்தது. மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தங்களது அன்றாட அலுவல்களை விட்டுவிட்டு அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவது கணிசமாக குறைக்கப்படும் என்பதையும் காரணம் காட்டியிருந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகளால் மக்கள்நலத் திட்டங்கள் முடக்கப்படுவதற்கும் ஒரே நேரத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று அந்தக் குழு தெரிவித்திருந்தது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்கிற கோரிக்கை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறை சாத்தியமாக இருக்குமென்று தோன்றவில்லை. 2014-இல் தேர்தல் நடந்த ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், ஒடிஸா, சிக்கிம், ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை 2019 மக்களவைத் தேர்தலுடன் நடத்துவது வேண்டுமானால் சாத்தியமாக இருக்கும். ஏனைய சட்டப்பேரவைகளை அவற்றின் பதவிக்காலத்தை முடக்கித் தேர்தலுக்கு வழிகோலுவது என்பது சரியாக இருக்காது. 
பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் மாநில அரசுகள் இதற்கு சம்மதம் அளித்தாலும் ஏனைய கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல, 2019 மக்களவைத் தேர்தலுடன் அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டாக வேண்டும். அதுவும் சாத்தியமல்ல.
ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி பெரும் வெற்றி பெற்று
விடலாம் என்று பா.ஜ.க. கருதினால் அது எதிர்பார்த்த பலனை அளிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மாநில அரசுகள் மீதான அதிருப்தி மக்களவைத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் ஆபத்தும் அதில் இருக்கிறது. 
தேர்தல் என்பது அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமைதான். ஆனால், மக்களாட்சியில் அதைத் தவிர்க்க இயலாது. ஒரே நேரத்தில தேர்தல் என்பது ஜனநாயக முரணாகத்தான் இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com