வங்கதேசத்திலும் மோதல்!

நாடாளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும்

நாடாளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையேயான மோதல் இந்தியாவையும் பாகிஸ்தானையும் மட்டுமல்ல, வங்கதேசத்தையும் விட்டுவைக்கவில்லை. வங்கதேசத்தின் உச்சநீதிமன்றம் 16-ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை ரத்து செய்துவிட்ட நிலையில், தகுந்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கதேச நாடாளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்துக்குக் கிடையாது என்று அரசியல் தலைமையும், அரசியல் சாசனம் தொடர்பான நாடாளுமன்றத்தின் அனைத்து முடிவுகளும் தனது ஆய்வுக்குட்பட்டது என்று உச்சநீதிமன்றமும் பிடிவாதம் பிடிக்கின்றன.
2014-இல் வங்கதேச நாடாளுமன்றம் ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, திறமையின்மை, முறைகேடான நடத்தை உள்ளிட்ட காரணங்களுக்காக உச்சநீதிமன்றத்தின் எந்த ஒரு நீதிபதியையும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அகற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு தரப்பட்டுள்ளது. சொல்லப்போனால் நீதிபதிகளை அகற்றும் நாடாளுமன்றத்தின் உரிமை 1972-இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலேயே இடம்பெற்ற ஒன்றுதான்.
நாடாளுமன்றம் கொண்டு வந்த சட்டத்திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தையும் தன்னிச்சையான செயல்பாடுகளையும் பாதிப்பதாக இருக்கிறது என்று கூறி கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதற்குப் பதிலாக தலைமை நீதிபதியின் தலைமையில் உயர்மட்ட நீதித்துறைக் குழு ஒன்றை ஏற்படுத்தி தவறிழைக்கும் நீதிபதிகளை பதவி விலக்கம் செய்யும் அதிகாரத்தை அதற்கு வழங்கியது. இதன்மூலம், ஏற்கெனவே இருந்து பின்பு கலைக்கப்பட்ட உயர்மட்ட நீதித்துறைக் குழுவுக்கு புத்துயிர் அளித்தது வங்கதேச உச்சநீதிமன்றம்.
வங்கதேச நாடாளுமன்றத்தில் ஆளும் அவாமி லீக் கட்சி அசுரப் பெரும்பான்மையுடன் திகழ்கிறது. அதனால் உச்சநீதிமன்றத்தின் முடிவை மாற்றுவது என்பதில் ஆளும்கட்சி பிடிவாதமாக இருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. சின்ஹா இந்தத் தீர்ப்பை வழங்கும்போது வெளியிட்ட சில கருத்துகள் அவாமி லீக் கட்சியின் கடும் கண்டனத்துக்கு உள்ளாயின. வங்கதேசத்தின் அரசியல் சாசனம் என்பது மக்களுடைய எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டுமே தவிர, எந்தத் தனிமனிதரின் விருப்பமாகவும் இருக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்திருந்தார் தலைமை நீதிபதி எஸ்.கே. சின்ஹா. இது அவாமி லீக் கட்சியின் நிறுவனரான "வங்கபந்து' ஷேக் முஜிபுர் ரகுமானை மறைமுகமாகத் தாக்குவதாக ஆளும் கட்சி கருதுகிறது.
வங்கதேசத்தின் மிகப்பெரிய கட்சியான வங்கதேச தேசியக்கட்சி 2014-இல் நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலை புறக்கணித்ததால் இப்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லை. எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக்கட்சி வழக்கம்போல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருக்கிறது. அதற்குக் காரணம், நீதித்துறையின் சுதந்திரம் குறித்தான அக்கறையல்ல. எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளும் அவாமி லீக் கட்சியை எதிர்ப்பதற்கு தனக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வாய்ப்பாக இதனை அந்தக் கட்சி கருதுகிறதே தவிர, நாடாளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே நடக்கும் பிரச்னையில் தனது தெளிவான நிலைப்பாட்டை இதுவரை அந்தக் கட்சி வெளிப்படுத்தவில்லை.
பிளவுபட்டுக் கிடக்கும் வங்கதேச அரசியலில், எந்த ஒரு பிரச்னையையும் அரசியல் சாராமல் கொள்கை ரீதியாக அணுகுவது இயலாது. அப்படியிருக்கும்போது நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையேயான அதிகார வரம்பு குறித்த சர்ச்சையிலும் அரசியல் கலந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. வங்கதேச தேசியக்கட்சி மட்டுமல்லாமல், ஏனைய சிறுசிறு கட்சிகளும் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக அல்லது ஆதரவாகத் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனவே தவிர, தொலைநோக்குப் பார்வையுடன் இந்தப் பிரச்னையை அணுகுவதாகத் தெரியவில்லை.
நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைப் போன்றதல்ல வங்கதேசத்தின் அரசு முறையும் அரசியல் சாசனமும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்து. இந்தியா உள்ளிட்ட நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் உள்ள பெரும்பாலான நாடுகளில், தவறிழைக்கும் நீதிபதிகளை நாடாளுமன்றத்தின் முன் நிறுத்தி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்குமானால், அவர்களின் பதவியைப் பறித்துவிட முடியும். இந்த முறையை மீண்டும் கொண்டுவரத்தான் ஆளும் அவாமி லீக் கட்சி வங்கதேசத்தில் அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டது.
உச்சநீதிமன்றத்தின் கருத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவொரு தீர்மானத்திலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக உறுப்பினர்கள் வாக்களிப்பதை 70-ஆவது அரசியல் சாசனப் பிரிவு தடுக்கிறது. இந்த நிலையில், பதவி நீக்கம் செய்யும் உரிமை நாடாளுமன்றத்துக்கு தரப்படு
மானால், ஆளும் கட்சி விரும்பாத எந்தவொரு நீதிபதியையும் பதவியிலிருந்து ஆளும்கட்சி அகற்றிவிடும் ஆபத்து இருக்கிறது. இதுதான் வங்கதேச நீதித்துறையின் எதிர்ப்புக்குக் காரணம்.
வங்கதேசத்தில் முன்பு தொடர்ந்து நிலவிய சர்வாதிகார ஆட்சியை எதிர்கொள்ள உயர்மட்ட நீதித்துறைக் குழு தேவைப்பட்டது. இன்றைய சூழலில் மோதல் போக்கை விடுத்து நீதித்துறையும் நாடாளுமன்றமும் இந்தப் பிரச்னைக்கு சுமுகமாக நிரந்தரத் தீர்வை காண்பதுதான் வங்கதேசத்தின் நலனைப் பேணுவதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com