பாதுகாப்பில்லாத பயணங்கள்!

மும்பையின் புறநகர் ரயில்நிலையங்களில் ஒன்றான எல்பின்ஸ்டன் சாலை

மும்பையின் புறநகர் ரயில்நிலையங்களில் ஒன்றான எல்பின்ஸ்டன் சாலை ரயில்நிலையத்தின் பயணிகள் மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் 23 பேர் மரணமடைந்ததும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும்கூட அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. சம்பவம் நடந்து முடிந்த பிறகு ரயில்வே காவல்துறையினரும், மும்பை மாநகர காவல்துறையினரும் அந்தப் பயணிகள் மேம்பாலம் யாருடைய அதிகார வரம்பிற்குள் வருகிறது என்பது குறித்து விவாதம் செய்து கொண்டிருந்ததுதான் அதிர்ச்சி அளிக்கிறது. காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதிலும், நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டியவர்கள் மனிதாபிமானமே இல்லாமல் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக்கொண்டு பொறுப்பைத் தட்டிக்கழித்த அவலம் இந்தியா தவிர வேறு எந்த ஒரு நாட்டிலும் காணக் கிடைக்காது.
இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் மும்பையில் ஏற்பட்ட அவலம் அதிக வேறுபாடு இல்லாமல் பொருந்தும். ஒன்று, ஒன்றுக்கும் மேற்பட்ட துறையினர் ஒரே வேலையில் ஈடுபடுவார்கள். அல்லது ஒரு வேலைக்காக ஒதுக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் தட்டிக்கழிப்பார்கள். எப்படி இருந்தாலும் எந்தவொரு தவறுக்கும் யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். இந்த நிலைமையின் பிரதிபலிப்புதான் மும்பை எல்பின்ஸ்டன் சாலை பயணிகள் மேம்பால நெரிசல் விபத்து.
மும்பை மாநகரத்தின் ஒன்றரைக்கோடி மக்கள்தொகையில் 78% மக்கள் மின்சார ரயில்களையும் 'பெஸ்ட்' போக்குவரத்து ஊர்திகளையும்தான் நம்பியிருக்கிறார்கள். மும்பையில் 75 லட்சம் பேர் தினந்தோறும் புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்துகிறார்கள். 2016 - 17இல் மட்டும் மும்பை புறநகர் மின்சார ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 270 கோடி. இத்தனை பேர் பயணிக்கும் ரயில் சேவைக்கு எந்த அளவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அதன் கட்டமைப்பு வசதிகளும் பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் அப்படி செய்யப்படவில்லை.
கடந்த 2016-இல் மட்டும் மும்பையில் 3200-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் விபத்தில் இறந்திருக்கிறார்கள். அதாவது, தினந்தோறும் சராசரியாக 9 பேர் இறந்திருக்கிறார்கள். 136 ரயில் நிலையங்களுடன் இயங்கும் மும்பை புறநகர் மின்சார ரயில் சேவை 40 ஆண்டுகளுக்கு முந்தைய வசதிகளுடன்தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் வர்த்தக நகரம் என்று போற்றப்படும் மும்பை புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்னும் குளிர்பதன வசதியுள்ள பெட்டிகள் கிடையாது. 
மேற்கிந்திய ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைக்காக பயணிகளின் தேவையை ஈடுகட்ட உயரடுக்கு (எலிலேடட்) ரயில் சேவை தொடங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இரண்டாவது மும்பை மாநகர போக்குவரத்துத் திட்டத்தின்படி கூடுதல் தண்டவாளங்களை அமைத்துப் பயணிகள் ரயில் சேவையின் அளவை அதிகரிப்பது, ரயில் பாதைகளை அதிகரிப்பது, பழைய தண்டவாளங்களையும் அடிக்கட்டைகளையும் (ஸ்லீப்பர்) மாற்றுவது ஆகிய திட்டங்கள் அனைத்துமே தாமதப்பட்டிருக்கின்றன. அதனால் முதலீட்டுச் செலவுகள் அதிகரித்து கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. 
எல்பின்ஸ்டன் சாலை விபத்தைப் பொருத்தவரை ரயில்வே நிர்வாகத்தைதான் முற்றிலுமாகக் குற்றப்படுத்த வேண்டும். இந்த பயணிகள் மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் என்று பயணிகள் பலரால் தொடர்ந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கூடுதலாக ஒரு பயணிகள் ரயில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்கிற திட்டம் ஏட்டளவில் மட்டுமே நெடுங்காலமாகக் காணப்படுகிறது. இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய மேம்பாலம் அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்கள். இவ்வளவெல்லாம் இருந்தும்கூட இது குறித்து மேற்கிந்திய ரயில்வே நிர்
வாகம் கவலைப்படாமல் இருந்திருக்கிறது எனும்போது எந்த அளவுக்கு பயணிகளின் பாதுகாப்பு குறித்து அது கவலைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் 3,200-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் விபத்தில் இறக்கிறார்கள் என்றாலும்கூட, அதுகுறித்துக் கவலைப்படாமல் ரயில்வே துறை இயங்கிவருவது குறித்து, எல்பின்ஸ்டன் சாலை விபத்துக்குப் பிறகுதான் விழிப்புணர்வே ஏற்படுகிறது என்பது மிகப்பெரிய சோகம். கடந்த 20 ஆண்டுகளாக சாலைகள் அமைப்பதிலும், ரயில் பெட்டிகளை நவீனப்படுத்துவதிலும், அதிநவீன புல்லட் ரயில் விடுவதிலும் செலுத்தும் கவனத்தை, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் நலனிலோ, பாதுகாப்பிலோ அரசு செலுத்தவில்லை என்பதைத்தான் இந்த மரணங்கள் வெளிப்படுத்துகின்றன. 
மழை, வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில் மின் தூக்கிகள் (லிப்ட்), மின் படிகள் (எஸ்கலேட்டர்) அமைத்தல், ரயில்பெட்டியிலிருந்து இரண்டு புறமும் இறங்கும் வசதி, தடையில்லாமல் ரயில் நிலையத்திலிருந்து சாலைக்கு வெளியேறும் பாதை போன்றவை ரயில் நிலையங்களில் நெரிசல் ஏற்படாமல் பயணிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தித் தருபவை. அவை குறித்து கவலைப்படாமல் ரயில்வே நிர்வாகம் தொடர்வது கண்டனத்துக்குரியது.
இந்திய ரயில்வேயைப் பொருத்தவரை தண்டவாளங்கள் தொடர்பான பிரச்னைகள் மட்டும் 2016 - 17இல் 3,544. சமிக்ஞை உபகரணங்கள் (சிக்னல்கள்) இயங்காத சம்பவங்கள் 1,30,200. இந்தியாவில் ரயில்கள் தடம்புரள்வதால் 53% ரயில் விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் ஆண்டுதோறும் 860 கோடி பேர் ரயில்களை நம்பி பயணிக்கின்றனர். பிரபா தேவி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும் எல்பின்ஸ்டன் சாலை ரயில்நிலைய மேம்பால நெரிசல் விபத்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com